“நளினி – முருகன்” காதல்: கர்ப்பம் தரித்திருந்த நளினி!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -7)

Read Time:23 Minute, 34 Second

timthumbஅவரை அடிக்காதீாகள்!!

உங்கள் பெயர்?’

‘நளினி.’ ‘வயது?’

‘இருபத்தி ஏழு.’

‘என்ன படித்திருக்கிறீர்கள்?’

‘எம்.ஏ.’

‘என்ன வேலை பார்க்கிறீர்கள்?’

‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு பி.ஏவாக இருந்தேன்.’

‘இந்த வழக்கில் எப்போது கைது செய்யப்பட்டீர்கள்?’

‘14.6.91.’

‘உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் நான் ஒரு போலீஸ் சூப்பிரின்டென்டென்ட் என்பது உங்களுக்குத் தெரியுமா?

’ ‘தெரியும்.’

நீங்கள் சுயமாக வாக்குமூலம் அளிக்க விரும்புகிறீர்களா?’

‘ஆம்.’

‘அப்படி எந்த வாக்குமூலமும் அளிக்க வேண்டுமென்று சட்டம் ஒன்றுமில்லை. அது உங்களுக்குத் தெரியுமா?’

‘தெரியும் சார். கட்டாயம் ஒன்றுமில்லை தான். ஆனால் நான் அளிக்க விரும்புகிறேன்.’

‘நீங்கள் அளிக்கும் வாக்குமூலம் ஒருவேளை உங்களுக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தப்படலாம் என்பது தெரியுமா?’

‘தெரியும் சார்.’

‘இப்படி ஒரு வாக்குமூலம் அளிக்கச் சொல்லி உங்களை யாராவது மிரட்டினார்களா?’

‘இல்லை. அப்படி எதுவும் இல்லை.’

‘உங்களை யாராவது அடித்து, உதைத்து, துன்புறுத்தினார்களா?’ ‘இல்லை.

யாரும் என்னைத் துன்புறுத்தவில்லை.’ எஸ்.பி. தியாகராஜன் என்பவரிடம் நளினி இவ்வாறு சொல்லிவிட்டுத் தன்னுடைய வாக்குமூலத்தை அளிக்கத் தொடங்கினார்.

ராஜிவ் கொலை வழக்கில் எங்களுக்குப் பல கதவுகள் திறக்கத் தொடங்கியது

அதன்பிறகுதான். நளினியை சைதாப்பேட்டையில் கைது செய்து அழைத்து வந்தபோது முருகனையும் அவரையும் மல்லிகை அலுவலகத்திலேயே வேறு வேறு அறைகளில்தான் வைத்தோம்.

ஆரம்பப் பதற்றம், அச்சம், குழப்பங்கள் அனைத்தும் விலகி அவர்கள் சற்று நிதானத்துக்கு வந்த பிறகுதான் பொதுவாக விசாரணையைத் தொடங்குவோம்.

நளினியைப் பார்த்தபோது அவரது முகத்தில் பெரிய கலவர உணர்வோ, பதற்றமோ தெரியவில்லை.

அவர் படித்தவர் என்பது தெரிந்தது.

தன்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொள்கிறார் என்று நினைத்தேன்.

அநாவசியமாக எதுவும் பேசவேண்டாம் என்று முடிவு செய்கிறவர்கள்தாம் அப்படி அமைதியாக இருக்க முயற்சி செய்வார்கள்.

ஆனால் எனக்கு நளினி பேசியாக வேண்டும். ஒப்புக்குக் கொஞ்சம் பேசுவதல்ல.

அவர் நிறைய பேச வேண்டும். முழுமையாகப் பேசவேண்டும். உண்மையைப் பேசவேண்டும்.

எதையும் மாற்றிச் சொல்லித் திசை திருப்பினால் மிகவும் பிரச்னை.

ராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை குற்றவாளிகளுக்கு நளினி ஒரு மையப்புள்ளியாக இருந்து செயல்பட்டிருக்கிறார் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.

ஹரி பாபு, பாக்கியநாதன், சுபாசுந்தரம், முருகன், சிவராசன் என்று தொடர்புடைய அனைத்து நபர்களும் நளினியை மையமாக வைத்தே திட்டத்தை வகுத்து, செயல்படுத்தி, முடித்திருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.

இந்தத் திட்டமே நளினியின் உதவியில்லாமல் முடிந்திருக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படித்த பெண். கீழ் மத்தியதர வர்க்கத்தினருக்கே உரிய கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்.

குடும்பம் என்று ஒன்று உண்டென்றாலும் உறவுகள் அத்தனை சரியாக அமையாத பெண்.

நிறைய நண்பர்கள், தொடர்புகள் உள்ள பெண். தவிரவும் விடுதலைப் புலிகளின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டவர்.

உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டபிறகு, பின்வாங்குவாளோ என்று அச்சப்படவே வேண்டாத அளவுக்கு மன உறுதியும் துணிச்சலும் வாய்ந்த பெண்.

பாக்கியநாதன் மூலம் நளினியைப் பிடித்ததுதான் முருகனின் சாமர்த்தியம்.

முருகன் இருந்ததுதான் சிவராசனின் பலம். சிவராசன்தான் திட்டத்தின் சூத்திரதாரி.

எனவே எங்களுக்கு நளினி முழுமையாக உண்மை பேசியாக வேண்டிய அவசியம் இருந்தது.

மல்லிகையில் நளினியைக் கொண்டு வந்து ஓர் அறையில் வைத்துப் பூட்டியபிறகு கார்த்திகேயன், அவரை யாரும் அடித்துத் துன்புறுத்த வேண்டாம் என்று முதலிலேயே சொன்னார்.

போலீஸ் விசாரணையில் அதுவும் ஒரு பகுதி. அவசியமானால் மட்டும் பயன்படுத்தப்படும் உத்தி. ஆனால் நளினி விஷயத்தில் அதனைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அனைவருமே நினைத்தோம்.

பெண் என்பது மட்டும் காரணமல்ல. அவரைப் புதையலாகவே நினைத்தோம்.

எவ்வித ஆபத்தும் இல்லாமல், சிக்கல் வராமல், அவரிடமிருந்து உண்மைகளை வாங்க முடியுமானால் ஒற்றைக்கண் சிவராசனைப் பிடிக்க முடியலாம்.

வேறு பலரும் அகப்படக்கூடும். அதுநாள் வரை தன்னிஷ்டத்துக்குச் சென்றுகொண்டிருந்த புலனாய்வு ஒரு நேர்ப்பாதைக்கு வந்துவிடும். விரைவில் முடியும் சாத்தியம் அதிகரிக்கும்.

எனவே ஆரம்ப விசாரணைகள், தகவல் பதிவு சடங்குகள் முடிந்தபிறகு நளினி கைதான அன்று இரவு நான் அவரைத் தனியே அறைக்குச் சென்று சந்தித்தேன்.

அமைதியாக என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மெல்லப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். ‘சாப்பிட்டியாம்மா?’ அவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தேன்.

நிறைய நம்பிக்கை சொன்னேன். எதற்கும் அச்சப்படாமல் தெரிந்ததை உள்ளபடி பேசினால், பிரச்னை ஏதும் வராது என்று எடுத்துச் சொன்னேன்.

நாங்கள் குறி வைத்திருப்பது சிவராசனைத்தான், அவன் கிடைத்துவிட்டால் மற்றவர்களுக்குத் தொந்தரவு இருக்காது என்பதை வலியுறுத்தினேன்.

போலீஸ் விசாரணைகளின் பல்வேறு வடிவங்கள் குறித்து சாங்கோபாங்கமாக விவரித்து, ஆனால் நளினிக்கு அடி, உதைகள் ஏதும் இருக்காது என்று உத்தரவாதம் அளித்தேன்.

அந்த இடத்தில் நளினி வாய் திறந்தார். ‘அவரை அடிச்சிங்களா? அடிக்காதிங்க. அவரை ஒண்ணும் பண்ணிடாதிங்க!’ அவர்? ‘தாஸ்… என் காதலர்.’

தாஸ் தான் முருகன் என்கிற விவரம், முருகன் மூலமாகவே சிவராசன் நளினிக்கு அறிமுகமான விவரம் அப்போது தெரியவந்தன. உண்மையை நீங்க சரியா சொல்லிட்டா எந்தப் பிரச்னையும் இல்லை.’

‘இல்லை… அவரை அடிக்காதிங்க. நான் எல்லாத்தையும் சொல்லிடறேன். எனக்காக அவரை ஒண்ணும் பண்ணாதிங்க. அவர் நல்லா இருக்கணும்.’

நளினி அப்போது கர்ப்பம் சுமந்திருந்த பெண். சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத நெருக்கடியில் இருந்தார். இனி என்ன ஆகப்போகிறதோ என்கிற பதைப்பு ஒவ்வொரு வினாடியும் அவருக்கு இருந்தது.

தனது காதலனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற தவிப்பு அனைத்துக்கும் மேலாக இருந்தது. நான் அவருக்கு உத்தரவாதம் அளித்தேன்.

அச்சப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். முருகனை அடிக்க மாட்டார்கள். நீ உண்மை பேசு. உனக்கு என்ன வேண்டுமென்று சொல். நளினியை ஒரு பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தேன்.

அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன். நிறையப் பேசி அவரை அமைதிப் படுத்தினேன்.

அதன் பிறகு அவர் பேசத் தொடங்கினார். சதி எப்படிப்பட்டது என்கிற முழு விவரமே அப்போதுதான் எங்களுக்கு முதல் முறையாகத் தெரிய வந்தது.

டெல்லியில் முடியுமா??
1987 -ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பலாலி ராணுவ விமானப்படைத் தளத்தில் முதல் முதலாக இந்திய அமைதிப்படை (IPKF) சென்று இறங்கியது.

ராஜிவ் காந்தி ஜெயவர்த்தனேவுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டுப் போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டிருந்தது.

போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க இந்தியா அனுப்பிய அந்தப் படைதான் பிரச்னையின் தொடக்கம்.

இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் யுத்தம், இலங்கைத் தமிழர் மத்தியில் குறிப்பாக, விடுதலைப் புலிகள் மத்தியில் மிகப்பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமைதிப்படை என்ற பெயரில் புலிகளை ஒழிப்பதற்காகவே இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினார்கள்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற யுத்தமும் அதன் உச்சத்துக்குச் சென்றுகொண்டிருந்ததே தவிர அமைதிக்கான வழி புலப்படுவதாயில்லை.

அந்த யுத்த சமயத்தில் புலிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமான சில மூத்த போராளிகள் உயிரிழக்க நேர்ந்த சம்பவங்கள், யாழ்ப்பாணத்தில் பொது மக்களுக்கு நேர்ந்த சங்கடங்கள், பலாத்கார நிகழ்வுகள், உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்புகள், மக்கள் கூட்டம் கூட்டமாக கூட்டம் கூட்டமாக அகதிகளாக வெளியேற வேண்டி ஏற்பட்ட நெருக்கடிகள் அனைத்தும் சேர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின்மீது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மிகப்பெரிய விரோதத்தை உண்டாக்கியது.

பிரபாகரன், தன்னுடைய கோபத்தைச் சில பேட்டிகளில் அப்போதே வெளிப்படுத்தியிருந்தார். ‘ராஜிவ் காந்தி தங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்றே அவர் பேசிய தருணங்களும் உண்டு.

விடுதலைப் புலிகளின் அகராதியில் துரோகம் என்பதற்கு ஒரே தண்டனைதான். இது உலகுக்கே தெரியும்.

அந்த வகையில் ராஜிவ் காந்தி உயிருக்குப் புலிகளால் ஆபத்து உண்டு என்பது இந்திய உளவு அமைப்புகளுக்கு மட்டும் தெரியாத விஷயம் என்பது பிறகு தெரியவந்தது!

அது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகள் சார்பில் அப்போது இந்திய அமைதிப் படைகள் இலங்கையில் நிகழ்த்திய கொடூரங்களைச் சித்திரிக்கும் விதமாக ‘சாத்தானின் படைகள்’ என்றொரு பிரம்மாண்டமான புத்தகமும் அச்சிடப்பட்டிருந்தது.

அமைதிப்படை இலங்கை மண்ணில் இறங்கிய நாள் முதல் அங்கு நடந்த சம்பவங்கள், மக்கள் பட்ட துன்பங்கள், புலிகள் அமைதிப்படைக்கு எதிராக நடத்திய யுத்தம், அனைத்தையும் குறித்து சர்வதேச மீடியா வெளியிட்ட அனைத்துக் கட்டுரைகள், புகைப்படங்களையும் தொகுத்து, புலிகள் அமைப்பின் நிலையையும் வெளிப்படுத்தும் விதமாகத் தயாரிக்கப்பட்ட அந்தப் புத்தகம், லண்டனில் அச்சிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

உண்மையில் அது சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓர் அச்சகத்தில்தான் அச்சானது. அச்சிட்டவர், இங்குள்ள பதிப்பாளர் வசந்தகுமார் என்பவர்.

தமிழகத்தைச் சேர்ந்த சில புலி அனுதாபிகள் அந்தப் புத்தகத் தயாரிப்பில் வசந்த குமாருக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

இந்த விவரம் முழுதும் சி.பி.ஐ. விசாரணையில்தான் தெரியவந்தது. ராஜிவுக்குப் பிறகு வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்று, அமைதிப்படையை வாபஸ் பெற்றது, அதன்பின் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள் என்று அடுத்தடுத்துப் பல சம்பவங்கள் நடந்தாலும் புலிகளைப் பொருத்த அளவில் அமைதிப்படை என்பது மறக்க முடியாத ஒரு கெட்ட சம்பவம்.

அதனால்தான், 1991ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருமானால் தங்களுக்கு மீண்டும் பிரச்னை வரும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமானால் அது புலிகளின் தனி ஈழம் என்னும் கனவை வேரோடு அழித்துவிடும் என்பதில் பிரபாகரனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்திய அரசு குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு பிரிவினை கோரிக்கைகளுக்கு ஒருபோதும் சாதகமான நிலை எடுக்காது என்பது பிரபாகரனுக்குத் தெரியும்.

எனவே, ராஜிவ் மீண்டும் இந்தியாவின் பிரதமராகிவிடக் கூடாது என்று அவர்கள் முதலில் முடிவு செய்தார்கள். அதற்கு ஒரே வழி அவரைக் கொலை செய்வதுதான்!

திட்டத்தை நடத்தி முடிக்கும் பணி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பொட்டு அம்மான், இந்தப் பணியை இந்தியாவில் மேற்கொண்டு செய்து முடிக்கும் பொறுப்பைத் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளுள் ஒருவரான சிவராஜா மாஸ்டரிடம் அளித்தார்.

ஒற்றைக்கண் சிவராசன் என்று பின்னாளில் அறியப்பட்ட சிவராஜா மாஸ்டருக்கு ரகுவரன் என்று இன்னொரு பெயரும் உண்டு. கண்ணாடி அண்ணா என்றும் அவரை அழைப்பார்கள்.

(அவருக்கு ஒற்றைக் கண் தான். ஆனால் சென்னையில் உள்ள ஒரு டாக்டர் அவருக்கு இரு கண்களிலும் பார்வை நன்றாக உள்ளதாகச் சான்றிதழ் அளித்ததன் பேரில்தான் அவருக்கு மீனம்பாக்கம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது!

பிறகு நாங்கள் அந்த டாக்டரைப் பிடித்து விசாரிக்கப் போக, அவர் ராஜிவ் காந்தியின் பரம ரசிகர் என்பதும் ராஜிவுக்குக் கடிதங்கள் எல்லாம் எழுதியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது வினோதமான சோகம்.)

முன்னதாகத் தமிழ்நாட்டில், சென்னை கோடம்பாக்கத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அலுவலகத்தில் வைத்து நிகழ்த்தப்பட்ட பத்மநாபா கொலையை முன்னின்று நடத்தியவர்கள் டேவிட், ரகு என்கிற இருவர் என்று சொல்லப்பட்டது.

அந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டதோடு சரி. யாரையும் கைது செய்யவில்லை. பத்மநாபா இறந்தார், கொன்றது விடுதலைப் புலிகள் என்னும் தகவலுடன் அப்படியே நின்றது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்த முதல் நாளே, தமிழகத்தில் அதற்கு முன் நிகழ்த்தப்பட்ட பத்மநாபா கொலை வழக்கை மீண்டும் எடுத்துத் தூசு தட்ட வேண்டும் என்று எங்கள் அதிகாரிகள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

நாங்கள் அதை விசாரிக்கத் தொடங்கியபோதும் ‘ரகு’ என்கிற பெயர்தான் இருந்ததே தவிர ஒரு புகைப்படமோ, மேல் விவரங்கள் எதுவுமோ கிடையாது.

பத்மநாபாவைக் கொல்வதற்கு உபயோகித்த துப்பாக்கியிலிருந்து பாய்ந்த உலோகக் குண்டுகள் சிலவற்றை எடுத்து வைத்திருந்தார்கள். அந்த அலுவலகத்தில் வெடிக்காமல் இருந்த ஒரு ஆர்.டி.எக்ஸையும் கைப்பற்றி இருந்தார்கள்.

ராஜிவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்., அவரது உடலைத் துளைத்திருந்த உலோகக் குண்டுகளும் இதுவும் பொருந்திப் போயின என்பதுதான் இரண்டுக்கும் இடையில் இருந்த ஒற்றுமை.

அந்த வழக்கில் உளவுத்துறை சொன்ன ரகு என்கிற பெயருக்குரிய நபர்தான் இந்த வழக்கில் சம்பந்தப்படும் ரகுவரன் என்கிற சிவராஜா மாஸ்டரா? தெரியாது. விசாரிக்க வேண்டும்.

“பத்மநாபா கொலைக்கு” காரணமான சிவராசன்தான் “ராஜீவ் கொலை” திட்டத்தின் சூத்திரதாரி!!

சிவராசன்தான் திட்டத்தின் சூத்திரதாரி என்பது நாங்கள் கைது செய்து விசாரித்துக்கொண்டிருந்த நளினி, பாக்கியநாதன், பத்மா பேரறிவாளன், சுபா சுந்தரம் போன்றவர்களின் வாக்குமூலங்கள் மூலம் தெரிந்திருந்தது.

ஆனால் அவர்தான் பத்மநாபா கொலைக்கும் காரணம் என்பது பின்னால் கைதான சின்ன சாந்தன் மூலம்தான் தெரியவந்தது.

அதைப் பிறகு பார்க்கலாம். இப்போது சிவராசன். அவரது திட்டம். பத்மநாபா கொலைச் சம்பவத்துக்குச் சற்று முன்னதாக சிவராசன் தமிழகம் வந்தார். திட்டம் தீட்டி, நடத்தி முடித்திருக்கிறார்.

பிறகு திரும்பவும் இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகளிலேயே சிவராசன் மிகவும் சீனியர் என்று கருதப்பட்டவர்.

அமைதிப்படை இலங்கையில் புலிகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த போது துணிச்சலாக யாழ்ப்பாணம் நகருக்குள்ளேயே இருந்து தன் வேலைகளை நிறுத்தாமல் பார்த்தவர் சிவராசன் என்று முருகன் தன் வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார்.

அது ஒருபுறமிருக்க, சிவராசன் தமிழகத்தில் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த சமயம் அது மார்ச் 1991 – இந்திய பொதுத்தேர்தல்களுக்கான அறிவிப்பைத் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

ராஜிவ் எப்படியும் பிரசாரத்துக்காகத் தமிழகம் வருவார், வேலையை முடித்துவிடலாம் என்று சிவராசன் தீவிரமாக அதற்கான ஆயத்தங்களை அப்போது செய்யத் தொடங்கியிருந்தார்.

அப்போது பொட்டு அம்மானிடமிருந்து அவருக்கு ஒரு ரகசியச் செய்தி வந்தது. (அவர்கள் வயர்லெஸ் தொடர்பு வைத்திருந்தார்கள்.) நாம் இதை டெல்லியில் செய்ய முடியுமா? ஒரு வரி வினா. அதற்கு சிவராசன் அனுப்பிய பதில் ஒருவரி ‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கேயே முடியும்.’

தொடரும்… (தொடர்ந்து வாசியுங்கள் பல சுவையான தகவல்களுடன் தொடர்கிறது இத்தொடர்..)

(தொடரும்)

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் பாதிரியார் கடத்தி கழுத்து அறுத்து கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்..!!
Next post பாரச்சூட் இல்லாமல் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த அமெரிக்க வீரர்: வீடியோ