சென்னையில் கடத்தப்பட்ட குழந்தையின் கதி என்ன?: சேலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை…!!
சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது அண்ணன் சுப்பிரமணி என்பவரின் குழந்தைகளான ஷாமாயாஸ்மின், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் சிறுவயது முதல் வளர்த்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷாமா யாஸ்மின் காரைக்காலை சேர்ந்த முகமது யூனூஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு முகமது யாசிப் (3½) ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் சென்னை பட்டினபாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
அங்கிருந்து ஆன்லைன் வர்த்தக தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் முகமது யூனூஸ் மலேசியாவுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
ஷாமா யாஸ்மினும், முகமது யாசிப்பும் சென்னையிலேயே இருந்து வந்தனர். ஆன்லைனில் வர்த்தகத்தில் ஈடுபட்ட போது முகமது யூனூஸ், அவரது நண்பர் சங்கர் என்பவரிடம் ரூ.6.50 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
இந்த தொகைக்கு ரூ.50 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சம் தரவேண்டும் என்று சங்கர் திருப்பி கேட்டுள்ளார்.
இந்த நிலையில் ஷாமா யாஸ்மின் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் வந்தார். இதையடுத்து நேற்று அவர் தனது அத்தை ராஜேஸ்வரி, தம்பி மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து சேலம் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் நானும், எனது கணவர் முகமது யூனூசும் சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்தோம். அங்கு ஆன்லைன் வர்த்தகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். தொழில் செய்வதற்காக எனது கணவர் அவரது நண்பர் சங்கர் என்பவரிடம் ரூ.6.50 லட்சம் கடன் வாங்கி இருந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் எனது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் வேலைக்கு சென்று விட்டார்.
இதையடுத்து நானும் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எனது கணவர் விண்ணப்பித்து இருந்தார். இதற்காக விசாரணை செய்ய போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். இதையறிந்த சங்கர் மற்றும் 2 பேர் கொண்ட கும்பல் நாங்கள் வெளிநாடு தப்பி செல்வோம் என்று கருதி என்னையும், எனது குழந்தையையும் கடன் தொகையை திருப்பி கேட்டு கடந்த ஜூன் மாதம் அவரது வீட்டிற்கு கடத்தி சென்று சிறை வைத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் வந்து உறவினர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னிடம் கொடுத்தால்தான் குழந்தையை திரும்ப ஒப்படைப்பேன் என்று கூறி என்னை மட்டும் சங்கர் அனுப்பி வைத்தார்.
பணத்திற்காக எனது குழந்தையை தினமும் சித்ரவதை செய்து வருகின்றனர். பணத்துடன் வரவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் எனது குழந்தையை மீட்டு தரவேண்டும் என்றார்.
இதையடுத்து குழந்தையை கடத்தி வைத்திருக்கும் இடம் சென்னை என்பதால் இதுதொடர்பான விவரத்தை சேலம் மாநகர போலீசார் சென்னை போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தை கடத்தப்பட்டது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தையை கடத்தி வைத்திருக்கும் இடத்தை அறிந்து குழந்தையை மீட்பதற்காக சேலம் போலீசார் ஷாமாயாஸ் மினுடன் சென்னை விரைந்து உள்ளனர். சென்னையில் குழந்தையை மீட்ட பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரியவருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating