குடும்பத் தலைவரின் அடி, உதைக்கு அஞ்சி வீடு செல்லத் தயங்கும் பெண்கள் நிர்க்கதி..!!
வடக்கில் குடும்பத் தலைவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலை விடுதிகளில் தஞ்சமடையும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அச்சம் காரணமாக வீடுகளுக்குத் திரும்பாமல் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி வருகின்றனர்.
சிகிச்சை முடிந்தும் கூட இவர்கள் வீடு செல்ல மறுப்பதால் வைத்தியசாலை நிர்வாகத்தினர் அவர்களைப் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கின்றனர்.
வீடுகளுக்குத் திரும்ப அச்சம் தெரிவிக்கும் இந்தப் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடுத்தகட்ட நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாத முற்பகுதியில் நுணாவிலைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் நான்கு பெண் பிள்ளைகளும் குடும்பத் தலைவரால் தாக்கப்பட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இரு தினங்களின் பின்னர் கொடிகாமம் கெற்பேலியைச் சேர்ந்த தாயும் மூன்று பெண் பிள்ளைகளும் குடும்பத் தலைவரால் தாக்கப்பட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஒன்பது பேரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோதிலும் வீடு செல்வதற்கு அச்சம் தெரிவித்து வைத்தியசாலையில் தஞ்சம் கோரினர்.
சிகிச்சை முடியம் வரை வைத்தியசாலை விடுதியில் தங்க முடியும் எனவும், அதன்பின்னர் விடுதியில் தங்க அனுமதிக்க முடியாது எனவும் கூறிய நிர்வாகம் கைவிரித்தது.
அவர்களைக் கடந்த வாரம் வாகனத்தில் ஏற்றி வழியில் பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பொலிஸ் நிலைய வாசலில் இறக்கிவிட்டனர்.
வைத்தியசாலையில் இவர்கள் சிகிச்சை பெற்ற வேளையில் ஏற்கனவே முறைப்பாடு பதிவு செய்திருந்தனர் பொலிஸார்.
வைத்தியசாலை நிர்வாகம் இவர்களைப் பொலிஸ் நிலையத்தில் விட்டதும் வீடுகளுக்குச் செல்லுமாறும் இனிமேல் இவ்வாறான பிரச்சினை நடந்தால் வந்து முறைப்பாடு செய்யுமாறும் கூறி அனுப்பிவிட்டனர்.
தாக்குதல் நடத்தும் குடும்பத் தலைவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இவர்களை வீடுகளுக்கு அனுப்புவதால் மேலும், இவ்வாறான செயற்பாடு நடைபெறமாட்டாது என யார் உத்தரவாதம் வழங்குவது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
“தாக்குதல் நடத்தும் குடும்பத் தலைவர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது பெண்கள் சிறுவர்கள் நலப் பிரிவினர் இவ்வியடத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பொலிஸ் நிலைய வாசலில் விடப்பட்டவர்கள் தமது வீடுகளுக்குச் சென்றார்களா அல்லது வேறு இடங்களுக்குச் சென்றார்களா என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.
குடும்ப வன்முறைகள் வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வருவதால் உரிய அதிகாரிகள் இது குறித்து தீவிர அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating