விஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!, இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)

Read Time:13 Minute, 20 Second

timthumbமுருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் தேதி பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலுக்கு வா. அங்கே சிவராசன் உன்னைச் சந்திப்பார்.

அதன்பிறகு மற்ற விஷயங்களைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு முருகன் பாக்கியநாதனின் அச்சகத்துக்குக் கிளம்பிப் போனார்.

இடைப்பட்ட நாள்களில் அவர் அங்கேதான் தங்கிக்கொண்டிருந்தார்.

ஜூன் 4ம் தேதி முருகனும் நளினியும் மேற்கு மாம்பலத்தில் இருந்த ஒரு பெண் மருத்துவரிடம் சென்றார்கள். நளினியைப் பரிசோதித்த அந்த டாக்டர், அவர் கர்ப்பமாகியிருப்பதை உறுதி செய்தார்.

அன்றிரவு அவர்கள் மடிப்பாக்கம் வீட்டுக்குச் சென்று தங்கினார்கள். ஜூன் 6ம் தேதி நளினி, தன் தங்கை கல்யாணியிடம் வில்லிவாக்கம் வீட்டு ஓனரைச் சந்தித்து, வீடு காலி செய்த விவரத்தைச் சொல்லி செட்டில் பண்ணிவிடக் கேட்டுக்கொண்டார்.

மறுநாள் திட்டமிட்டபடி அஷ்டலட்சுமி கோயிலில் சிவராசன், நளினியைச் சந்தித்தார். ‘நிலைமை சரியில்லை. சி.பி.ஐ. மிகவும் ஆழமாக விசாரிக்கத் தொடங்கிவிட்டது. நாம் சென்னையில் தொடர்ந்து தங்குவது நல்லதல்ல.

(சுபா, தனு, சிவராசா குர்தாவுடன்.. நிற்பவர்)

நீ எங்களுடன் இலங்கைக்கு வந்துவிடு’ என்று சிவராசன் சொன்னார். அவரோடு சுபாவும் வந்திருந்தார். சுபாவுக்குச் சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

நளினி, அவரை பெசண்ட் நகரில் ஒரு பெண் மருத்துவரிடம் காட்டி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அந்த மருத்துவரின் கிளினிக் ரிஜிஸ்டிரேஷன் கார்டில் ‘சுபா’ என்று பெயர் எழுதி தனது தாயின் ராயப்பேட்டை முகவரியை அளித்திருந்தார்.

(பின்னால் இது நளினி சொன்னதன்பேரில் கைப்பற்றப்பட்டது.) என்ன தோன்றியதோ, புறப்படும்போது ஆட்டோகிராப் நோட்புக் வாங்கி சுபாவுக்காக அதில் சில வரிகள் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுப் போனார்.

நளினிக்கு பயமாக இருந்தது. கவலையாக இருந்தது. அன்றிரவு அவர் உறங்கவில்லை. மறுநாள் காலை விடிந்ததும் தன் தாயை அழைத்து, நாம் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று சொன்னார்.

முந்தைய நாள் இரவே ஒரு விஷ மருந்தும் வாங்கிச் சென்றிருந்தார். என்ன தோன்றியதோ, பிறகு தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுத் தப்பிக்க முயற்சி செய்யலாம் என்று தீர்மானித்தார்.

ஜூன் ஒன்பதாம் தேதி காலை நளினி அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டர் வாசலுக்குச் சென்று காத்திருந்தார். முருகனை அங்கே சந்திப்பதாக ஏற்பாடு.

இருவரும் முதலில் திருப்பதிக்குப் போனார்கள். ஏற்கெனவே சென்று நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு வந்த அதே இடம்.

நளினி -முருகன்
முருகன் அங்கே மொட்டையடித்துக்கொண்டார். அங்கே ஒருநாள் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சத்திரத்தில் தங்கிவிட்டு, அங்கிருந்து மதுரைக்கு வந்தார்கள்.

மதுரையில் ரவி என்கிற நபர் நளினிக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். அவருடன் ஒரு சமயம் வேலை பார்த்தவர். அவருடைய வீட்டில் ஒரு நாள் தங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றார்கள்.

விழுப்புரத்தில் ஹரி பாபுவின் காதலியான சுந்தரி வசித்துக்கொண்டிருந்தாள். விஷயத்தைச் சொல்லி அங்கே தங்க அனுமதி கேட்டபோது சுந்தரியின் அம்மா மறுத்துவிட்டார்.

வேண்டாம், ஆபத்து. உங்களுக்கு மட்டுமல்ல. எங்களுக்கும். எங்காவது போய்விடுங்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூர். அங்கிருந்து தாவணகரே.

அங்கே சசிகலா என்கிற நளினியின் தோழி ஒருவர் பள்ளி ஆசிரியையாக இருந்தார்.

அவரைச் சந்தித்து முழு விவரம் சொல்லித் தங்களுக்கு உதவக் கேட்டுக்கொண்டார் நளினி.

சசிகலாவின் கணவருக்கு அது சரிப்படவில்லை. வேண்டாம், ஆபத்து. நீங்கள் போய்விடுங்கள். எனவே திரும்பவும் விழுப்புரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

மீண்டும் சுந்தரியின் வீடு. ஆனால் இம்முறை வீடு பூட்டியிருந்தது. விசாரித்தபோது அவர்கள் சென்னைக்குச் சென்றிருப்பதாகப் பக்கத்தில் தகவல் கிடைத்தது.

இருக்க இடமில்லாமல் நளினியும் முருகனும் அதன்பிறகு திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பத் தீர்மானித்தார்கள்.

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் நளினி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதி. நாங்கள் நளினியைத் தேடுவது என்று முடிவு செய்ததும் உறவினர் வீடுகளுக்குப் போய் நேரத்தை வீணாக்காதீர்கள், அவரது நண்பர்களைப் பிடியுங்கள் என்றுதான் புலனாய்வு அலுவலர்களிடம் சொன்னேன்.

ஏனென்றால் நளினி தனியே செல்லவில்லை. தன்னுடன் தன்னுடைய காதலனை அழைத்துச் சென்றிருக்கிறார். எனவே உறவுக்காரர்களைவிட நண்பர்களைத்தான் அவர் அதிகம் நம்பக்கூடும் என்று எனக்குத் தோன்றியது.

தவிரவும் தமிழகம் முழுதும் அதற்குள் நளினி, சுபா, சிவராசன் புகைப்படங்கள் பிரபலமாகியிருந்தன. அவருக்கு அடைக்கலம் கொடுக்க விரும்புகிறவர்கள் இங்கே குறைவாகவே இருப்பார்கள் என்றும் தோன்றியது.

நளினி வேலை பார்த்த இடங்கள், அவர் வசித்த வில்லிவாக்கம் வீட்டுப் பகுதி, ராயப்பேட்டை வீட்டுக்கு அருகே இருந்தவர்கள் அனைவரிடமும் விசாரித்து நளினியின் தொடர்புகள் பற்றி ஓரளவு தகவல் சேகரித்திருந்தோம்.

அதனைக் கொண்டு, அவர் செல்லக்கூடிய இடங்கள் என்று சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் புலனாய்வு அதிகாரிகளை முன்னதாக அனுப்பிவைத்திருந்தோம்.

அப்படி விழுப்புரத்துக்குச் சென்ற புலனாய்வு அதிகாரி கிருஷ்ண மூர்த்திக்கு ஒரு தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே எங்கள் பட்டியலில் இருந்த சுந்தரியின் வீட்டுக்கு அவர் சென்றதும், வீடு பூட்டியிருந்ததும், பக்கத்து வீட்டுப் பெண்மணி நளினியிடம் ஒப்புவித்த தகவலை அவரிடமும் சொல்லியிருக்கிறார்.

‘என்னாங்க இது? இப்பத்தான் ஒரு பொண்ணு வந்து கேட்டுட்டுப் போச்சு.

இப்ப நீங்க வந்து கேக்கறிங்க. அவங்க மெட்ராசுக்குப் போயிருக்காங்க. வந்து கேட்ட பொண்ணும் மெட்ராசுக்குப் போறதாத்தான் பேசிக்கிச்சி.

’ ‘யாருகிட்ட பேசிச்சிம்மா?’ ‘கூட ஒரு பையன் வந்திருந்தானே?

கருப்பா, ஒல்லியா, மொட்டை அடிச்சிக்கிட்டு?’ முருகன்! அங்கிருந்து அவர் மல்லிகைக்கு போன் செய்து விவரம் சொன்னார்.

நளினியும் முருகனும் சென்னை வருகிறார்கள். கவனம். எனக்கு ஒரு விஷயம் உறுதியாகப் பட்டது. கண்டிப்பாக அவர்கள் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்!

இயல்பாகவே விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வர பஸ்கள்தான் அதிகம் என்பது ஒருபுறமிருக்க, பஸ் பயணமே பாதுகாப்பானது என்று நளினி நினைக்கக்கூடும் என்று தோன்றியது.

இருப்பினும் எவ்விதமான பிரச்னையும் இல்லாமல் அவர்களைப் பிடிக்க அனைத்து இடங்களிலும் ஆள்களை நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரிமுனை பஸ் நிலையம், செண்ட்ரல் ஸ்டேஷன், எழும்பூர் ஸ்டேஷன், மவுண்ட் ரோடு என்று வரிசையாக ஆள்களை நியமித்துவிட்டு சைதாப்பேட்டையிலும் கிண்டியிலும் ஒரு செட் அதிகாரிகளைக் காவலுக்கு நிற்கச் சொன்னேன்.

ராஜீவ் காந்தியின் மரணச்சடங்கு

‘எதற்கு சைதாப்பேட்டை, கிண்டி? அங்கே இறங்க வாய்ப்போ அவசியமோ இல்லையே’ என்று சகாக்கள் சிலர் கேட்டார்கள்.

ஆனால் ஏனோ எனக்கு அப்படியொரு சாத்தியம் இருப்பதாகப்பட்டது. சென்னைக்கு வருகிற முருகன் நிச்சயமாகத் தன்னைத் தேடிக்கொண்டிருக்கும் சி.பி.ஐயைக் குறைத்து மதிப்பிட மாட்டான் என்று நினைத்தேன்.

ஒரு பாதுகாப்பு கருதி, கொஞ்சம் முன்னால் இறங்கிக்கொண்டு ஆட்டோ அல்லது வேறு ஏதாவது என்று தோன்றியது.

ஆகவே சைதாப்பேட்டை மற்றும் கிண்டியில் நிறுத்திய சி.பி.ஐ. ஆள்களை மிகவும் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றேன்.

முன்னதாக இரண்டு நாள்கள் இரவு பகல் பாராமல் அலைந்து களைத்து, சரியாகச் சாப்பிடக் கூட இல்லை. சாப்பிட்டுவிட்டுத் திரும்பலாம் என்று போயிருந்த வேளை போன் வந்துவிட்டது.

அழைத்தவர், ஹெட் கான்ஸ்டபிள் முத்தையா. ‘சார், நீங்கள் சொன்னது சரி. முருகனும் நளினியும் சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இறங்கினார்கள். பிடித்து விட்டோம்.

மல்லிகைக்கு அழைத்து வந்துவிட்டோம்.’ நான் அவருக்கு கவனமாகக் கையாளும்படி எச்சரிக்கை செய்துவிட்டு அள்ளி அடைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

சைதாப்பேட்டையில் அவர்கள் பிடிபட்டபோது, இருவரும் காதலர்கள் என்று தெரியும். ஆனால் அவர்களது காதல் எப்படிப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. அந்தக் காதல்தான் இந்த வழக்கை விரைந்து முடிக்கவே உதவப்போகிறது என்பதும் தெரியாது!

தொடரும்…
கே. ரகோத்தமன் (தொடர்ந்து வாசியுங்கள் பல சுவையான தகவல்களுடன் தொடர்கிறது இத்தொடர்)

(தொடரும்..

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரியாக ஆட்சி செய்திருந்தால் கால்கள் தேய வேண்டி ஏற்பட்டிருக்காது! ; ஜனாதிபதி..!!
Next post ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் துப்பாக்கிகள்…!!