வலைக்குள் சிக்கிய வாழ்க்கை…!!

Read Time:15 Minute, 44 Second

article_1469605004-indexமூதாதையர்கள் காலத்திலிருந்து நூற்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தொழில் செய்து வருகின்ற ஓர் இடத்தை இழப்பதென்பது ஜீரணிக்கும் விடயமல்ல. அது வலி நிறைந்த கொடுமையாகும். பொத்துவில், அறுகம்பே பிரதேசக் கடற்றொழிலாளர்கள் அவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் அறுகம்பே அமைந்துள்ளது. கடற்றொழிலே இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இப்போதும் பல குடும்பங்களுக்கு அதுவே பிரதான வருமானம் தருகின்ற தொழிலாகும். அறுகம்பே பிரதேசத்தில் நூற்றாண்டுகளாக இங்குள்ள மக்கள் கடற்றொழில் செய்துவருகின்றனர். ஆனாலும், முன்னரைப்போல் பிரச்சினைகள் இன்றியும் சுதந்திரமாகவும் தமது தொழிலில் ஈடுபட முடியவில்லை என்று இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரதேசம் சிறிது காலத்துக்கு முன்னர்வரை முழுவதுமாக கடற்றொழில் செய்யும் இடமாக இருந்தது. கடற்கரைகளில் தங்களின் படகுகளையும் தோணிகளையும் எந்தவிதப் பிரச்சினைகளுமின்றி நிறுத்திவைக்கவும் தங்களின் வலைகளை கடற்கரை மணலில் விரித்து உலர்த்தவும் அவர்களால் முடிந்தது. மேலும், தொழில் உபகரணங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான வாடிகளையும் தேவைக்கேற்றவாறு அவர்களால் அமைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது இவற்றையெல்லாம் செய்வதற்கு அவர்கள் தினமும் திண்டாடுகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

இந்தப் பிரதேசமானது முன்னர் சின்ன உல்லை மற்றும் உல்லை என்கிற பெயர்களால் அழைக்கப்பட்டன. இப்போதும் அந்தப் பெயர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனாலும், அறுகம்பே என்பது அனைவரும் அறிந்த பெயராகும். அறுகம்பே பிரதேசமானது உலகளவில் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து போகின்றனர். இன்னொருபுறம், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் இப்பிரதேசத்துக்கு விரும்பி வருகின்றனர். இதனால், அறுகம்பே பிரதேசத்தில் ஏராளமான நட்சத்திரக் ஹோட்டல்களும் உணவு விடுதிகளும் உருவாகத் தொடங்கின. இவற்றில் அதிகமானவை கடற்கரையை அண்டி அமைக்கப்பட்டன.

அறுகம்பே பிரதேசத்தில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட்டு வந்தவர்களுக்கு இந்த நிலையானது பாரிய பிரச்சினைகளை உருவாக்கியது. கடற்கரையை அண்டி அமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உணவு விடுதிகளும் அவற்றின் வேலிகளும் மீனவர்களின் தொழிலிடங்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இன்னொரு பக்கம், கடலரிப்பின் காரணமாக இவர்கள் தொழில் செய்துவந்த பெரும் நிலப்பரப்பு இல்லாமல் போனது. இவை இரண்டுக்கும் இடையில் கடற்கரை என்று பார்த்தால், 10 அடி வரையிலான நிலப்பரப்பே எஞ்சியுள்ளது. இதனால், இங்கு தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் தங்களின் படகுகளையும் தோணிகளையும் நிறுத்திவைப்பதற்கே பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

‘நூற்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக நாங்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால், இப்போது எங்கள் படகுகளை நிறுத்திவைப்பதற்கு இடமில்லாததொரு நிலை உருவாகியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கென அரசாங்கத்தால் எத்தனை மீற்றர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதோ, அதனை எமக்கு வழங்க வேண்டும். நூற்று ஐம்பது வருடங்களாக இங்கு தொழில் செய்துவரும் எமது மக்களுக்கு, இது தொடர்பில் நிரந்தரத் தீர்வு வேண்டும். கடற்கரையின் சில பகுதிகளில் உல்லாசப் பயணிகள் ஓய்வெடுக்க வருகின்றார்கள். அதனால், அங்கும் தொழில் செய்ய முடியாமலுள்ளது. வாடிகளை நிர்மாணிப்பதற்கும் இடமில்லை’ என்கிறார் படகு உரிமையாளர்களில் ஒருவரான எம்.எச்.எம்.ஜமாஹிம்.

அறுகம்பேயில் 167 வெளி இணைப்பு இயந்திரப் படகுகளும் 15 இயந்திரம் பூட்டப்பட்ட பாரம்பரியக் கலங்களும் தொழில் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றினூடாக சுமார் 500 பேர் கடற்றொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இங்கு கரைவலை மீனவர்களும் தொழில் செய்துவருகின்றனர்.

அறுகம்பே பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடற்கரையிலிருந்து 10 மீற்றர் நிலப்பரப்பு சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்குள் எவரும் கட்டடங்களையோ, வேலிகளையோ அமைக்க முடியாது. அப்படிச் செய்வது சட்டவிரோதமாகும். ஆனால், அறுகம்பே பிரதேசத்தில் கடற்கரைக்கும், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளின் வேலிகளுக்கும் இடையில் 10 அடியளவான நிலப்பகுதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இங்குள்ள கரைவலை மீனவர்கள் தொழிலை மேற்கொள்வதற்காகவும் சட்டரீதியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலிருந்து 91 மீற்றர் நீளமும் 346 மீற்றர் அகலமும் கொண்ட நிலப்பரப்பு, வர்த்தமானி அறிவித்தல் மூலம், கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கும் மேற்குறிப்பிட்ட நிலைவரமே காணப்படுகிறது. கரைவலை மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.

அறுகம்பே பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களில் முஸ்லிம், சிங்களவர் மற்றும் தமிழர் என அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனாலும், இங்குள்ள கடற்றொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதிலும் பார்க்க, இந்தப் பிரதேசங்களின் சுற்றுலாத் தொழில் மீதே அரசாங்கம் அதிக அக்கறை காட்டுவதாக இங்குள்ள மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதனாலேயே, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், அறுகம்பே பிரதேசமானது இதுவரை சுற்றுலாத் தலமாகக் குறிப்பிடப்பட்டு வர்த்தமானி அறிவிப்புச் செய்யப்படவில்லை. ஆனால், இந்தப் பகுதிகளில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் உட்பட மீனவர்களுக்கான தொழிலிடங்களைக் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள மீனவர்களுக்கான வாடிகளை அமைப்பதற்குரிய அனுமதிகளை கரையோரம் பேணல் திணைக்களத்தினூடாக அந்தந்த பிரதேச செயலகங்களே வழங்குகின்றன. அந்த வகையில், சின்ன உல்லை மற்றும் உல்லைப் பகுதிகளில் வாடிகளை அமைப்பதற்கு பொத்துவில் பிரதேச செயலகம்; அனுமதி வழங்கிவருகின்றது. ஆயினும், அறுகம்பே பிரதேச மீனவர்கள் தமக்குரிய வாடிகளை அமைப்பதற்கான இடமின்மை தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனமெடுக்க வேண்டும் என்றும் இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடற்கரையிலிருந்து 10 மீற்றர் தூரத்துக்குள் எவ்வித நிர்மாண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக்கூடாது எனச் சட்டம் கூறுகின்றபோதும், அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களும் உணவு விடுதிகளும் தமது வேலிகளை அந்த எல்லைக்குள் அமைத்துள்ளன. ஆயினும், இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்களத்தினர் ஏன் கவனமெடுப்பதில்லை என்றும் மீனவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இன்னொருபுறம், மேற்படி பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமாக உள்ளபோதும், அதைத் தடுப்பதற்குரிய எதுவித நடவடிக்கைகளும்; மேற்கொள்ளப்படவில்லை எனவும் இங்குள்ளவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். கடலரிப்பின் காரணமாக இந்தப் பிரதேசங்களில் பல மீற்றர் நிலப்பரப்பு கடலுக்குள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ‘இதே தீவிரத்துடன் கடலரிப்பு தொடருமாயின், கடற்கரையிலிருந்து இப்போது எஞ்சியுள்ள 10 அடிக்கு உட்பட்ட நிலப்பரப்பும் இல்லாமல் போய்விடும்’ என்று எம்.எச்.றிஸ்வான் எனும் மீனவர் கூறுகின்றார்.

எனவே, இவ்விடயமானது உடனடியாக ஜனாதிபதி மட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமென்பது, இப்பகுதிகளிலுள்ள மீனவர்களின் வேண்டுகோளாகும். அதற்குரிய நடவடிக்கைகளை இம்மாவட்டதிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்புபட்ட அதிகாரிகளும் மேற்கொள்வதோடு, ஊடகங்களும் இதனை வெளியுலகுக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனவும் இப்பகுதி கடற்றொழிலாளர்கள் எம்மிடம் வேண்டிக் கொண்டார்கள்.

‘அறுகம்பே பிரதேசத்தில் சுமார் 500 பேர் கடற்றொழிலில் ஈடுபடுகின்றபோதும், அவர்கள் ஒவ்வொருவரின் வருமானத்தையும் நம்பி, பல குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். ஆக, இவ்விவகாரமானது ஆயிரக்கணக்கானவர்களின் ஜீவனோபாயத்துடன் தொடர்புபட்டதொன்றாகும் என்பதைக் கவனத்திற்கொண்டு, மனிதாபிமானத்துடன் இந்தப் பிரச்சினையைக் கையாள வேண்டும்’ என்கிறார் இப்பிரதேசத்தில் நாம் சந்தித்த சமூக சேவையாளரொருவர்.
இதேவேளை, ‘இந்த விவகாரத்தை கடற்றொழிலாளர்களுக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினையாக மாற்றி விடுவதற்கு யாரும் முயற்சிக்கக்கூடாது’ என்றும் எம்முடன் பேசிய படகு உரிமையாளர் ஒருவர் கூறினார். மேலும், தமக்கான தொழிலிடத்தைக்; கோருவதற்கான உரிமையை யாரும் தடுத்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கடற்றொழில் என்பது உயிரைப் பணயம் வைத்துச் செய்கின்றதொன்றாகும். கடலுக்குச் சென்ற ஒருவர் திரும்பி வரும்வரை அவரின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பார்கள். அவ்வாறு அச்சமும் சவால்களும் நிறைந்த அந்தத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு போதுமான தொழிலிடங்கள் வழங்கப்படுவதோடு, அங்கு ஓரளவாயினும் வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும்.

அறுகம்பே கடற்றொழிலாளர்களுக்கு எவ்விதமான வசதிகளும் அவர்களின் தொழிலிடங்களில் செய்துகொடுக்கப்படவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் மீனவர்களுக்கு ஓய்வு மண்டபம், எரிபொருள் நிரப்பு நிலையம், குடிநீர் குழாய் இணைப்பு போன்ற பல வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

எனவே, அறுகம்பே பிரதேச கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட தொழிலிடங்கள் மீளவும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது ஆகக்குறைந்த தீர்வாக அப்பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகள் மற்றும் கலங்களை பாதுகாப்பாக நிறுத்திவைப்பதற்கான தரிப்பிடமொன்றாவது உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

‘இது நீண்டகாலப் பிரச்சினையாகும். இதற்கான தீர்வை வழங்குமாறு அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுவிட்டோம். ஆனால், யாரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இப்படியே போனால், இங்குள்ள கடற்றொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வீதிக்கு இறங்கும் ஒரு நிலைமையே வரும். அதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகள் கிடையாது’ என்று இங்குள்ள மூத்த தொழிலாளியொருவர் ஆவேசத்துடன் கூறினார்.
மீனவர்களின் வாழ்க்கை இரையாகிவிடக்கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விண்வெளி வீரர்களின் சிறுநீர்… ஏன் தெரியுமா…!!
Next post பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்..!!