ராணுவம்-விடுதலைப்புலிகள் மோதல் நீடிப்பு- மேலும் 21 பேர் பலி
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் மேலும் 21 பேர் பலியாகி உள்ளனர். இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. அங்கு கடற்கரை நகரமான மூதூரில் உள்ள மாவிலறு அணையின் மதகுகளை விடுதலைப்புலிகள் மூடியதால் நீர்ப்பாசனம் பாதிக்கப்பட்டதோடு குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. எனவே அணையின் மதகுகளை திறப்பதற்காக அங்கு ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக போர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் சுமார் 130 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.
மூதூர் பகுதியில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் மேலும் 21 பேர் பலி ஆனார்கள்.
மூதூரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் விடுதலைப்புலிகள் வீசிய பீரங்கி குண்டு விழுந்து வெடித்ததில் அங்குள்ள முகாமில் தங்கி இருந்த 10 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 50 பேர் காயம் அடைந்ததாகவும் இலங்கை மந்திரியும் ராணுவ செய்தித் தொடர்பாளருமான ராம்புக்வெல்லா கொழும்பு நகரில் தெரிவித்தார். ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்து உள்ளனர். ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் தான் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக அவர்கள் கூறி உள்ளனர்.
மூதூரில் நடந்த மற்றொரு மோதலில் 4 போலீசார் பலி ஆனார்கள். மூதூர் அருகே உள்ள தோப்பூரில் ஒரு கல்லூரி வளாகத்தில் பீரங்கி குண்டு விழுந்து வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். மூதூரில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதால் மக்கள் மசூதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் தங்கி உள்ளனர்.
மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், நீர்ப்பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இதுபற்றி ராம்புக்வெல்லா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே விடுதலைப்புலிகள் விரும்பினால் அவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
அணைக்கு அருகே ராணுவத்தினர் சென்றுவிட்டனர். ஆனால் அந்த பகுதியில் விடுதலைப்புலிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்து இருப்பதாலும், தொடர்ந்து அவர்கள் பீரங்கி தாக்குதல் நடத்துவதாலும் ராணுவ வீரர்களால் அணையின் மதகுகளை திறக்க முடியவில்லை. அணையின் மதகுகளை திறந்துவிட விடுதலைப்புலிகள் சம்மதித்தால் அங்கிருந்து உடனடியாக வாபஸ் பெற ராணுவம் தயாராக இருக்கிறது.
அணையின் மதகுகளை திறப்பது தொடர்பாக கடந்த 6 நாட்களாக போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் மூலம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. எனவேதான் அந்த பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் நிலைகளின் மீது குண்டு வீச போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. மதகுகளை திறக்கவும் ராணுவ சிப்பாய்களுக்கு உத்தரவிடப்பட்டது. மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
அரசின் இந்த நிலையை ஆதரித்து உள்ள நார்வே தூதுக்குழுவும், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விடுதலைப்புலிகளை கேட்டுக் கொண்டு உள்ளது. இவ்வாறு ராம்புக்வெல்லா கூறினார்.
சிறப்பு தூதர்
போர் நிறுத்தத்தை தொடர்ந்து அமல் படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இலங்கை அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நார்வே நாடு, தனது சிறப்பு தூதர் ஹன்சேன் பாïரை இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு நகருக்கு அனுப்பி வைக்கிறது.