ஆணிடமிருந்து பெண் எதிர்பார்ப்பது என்ன?
நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண் என்றால் முதலில் பெண்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களை பற்றிய அடிப்படை குணாதிசயங்களை புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி நடந்து கொண்டால் மட்டுமே மணவாழ்க்கையில் உங்களால் ஜெயிக்க முடியும். அதற்காக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்…
முக்கியத்துவம் :
கணவர் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று எல்லா பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள். எல்லா நேரமும் அது முடியாவிட்டால் முடிந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க முன்வாருங்கள். தனக்கு முக்கியத்துவம் தரும் எண்ணம் தன் கணவருக்கு இருக்கிறது என்பதை மனைவி உணர்ந்து கொண்டால் சில சூழ்நிலைகள் தனது முக்கியத்துவத்திற்கு எதிராக அமைந்தாலும் கண்டு கொள்ளமாட்டார். பெண்களுக்கு இப்போது பிறந்த வீடுகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து புகுந்த வீடு வரும்போது அதைவிட அதிக முக்கியத்துவத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்.
உனக்காக நான் :
இதுவரை கடைபிடித்து வந்த சில வேண்டாத விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுக்கும் போது மனைவி பெருமிதம் கொள்கிறாள். சில வேண்டாத நட்பு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்கள் இப்படி சிலவற்றை மனப்பூர்வமாக விட்டு கொடுக்கும் போது மனைவிக்கு தனி மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் ஒரு புது நம்பிக்கையும் ஏற்படும். பரஸ்பர அன்பும் மேலோங்கும். அவற்றை விடும் போது உனக்காகத்தான் நான் இந்த பழக்கத்தை கைவிடுகிறேன் என்று சொல்லவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மனோபாவ மாற்றம் :
பெண்களுக்கு பாராட்டு மிகவும் பிடிக்கும். ஒரு சின்ன பாராட்டு கூட மனைவிக்கு பல மடங்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சமைப்பது, கோலம்போடுவது, உறவினர்களிடம் உற்சாகமாக பேசுவது போன்றவற்றை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அவைகளில் இருந்து கூட பாராட்டுவதற்கு ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கும் மனோபாவத்தை ஆண்கள் வளர்த்து கொள்ள வேண்டும். ஆரோக்கியம் தூய்மை, சுகாதாரம் போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாராட்ட வேண்டும். ஏன்என்றால் பெண், தாயாகக்கூடியவள் அப்போது அவள் மூலம் சந்ததியே சுத்தம், சுகாதாரத்தை கற்றுக்கொள்ளும். பெண்களுக்கு வழங்கப்படும் பாராட்டு அவர்களை பலமடங்கு உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்கும்.
தாய் வீட்டு பெருமை :
எப்போதும் பெண்களுக்கு தாய்வீட்டு பெருமை இருக்கும். தன்னுடைய கணவன் தன் வீட்டாரை மதிக்க வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவார்கள். அதனால் மனைவியின் குடும்பத்தினரை பற்றி குறை சொல்லக்கூடாது. அப்படி குறை சொல்லும் கணவரை மனைவி வெறுக்க தொடங்கி விடுவாள். இந்த வெறுப்பு உடனடியாக வெளிவராது. நேரம் பார்த்து வெளிவந்து கணவரை நோகடிக்கும். ஆண்கள் பரந்தமனதோடு பாரபட்சமில்லாது பெண்ணின் உறவுகளையும் நேசிக்க வேண்டும்.
வா போகலாம் :
மனைவியின் கையில் பணத்தை அள்ளிக்கொடுத்து உனக்கு என்ன தேவையோ அவைகளை எல்லாம் வாங்கி கொள் என்று கணவர் சொன்னால் மனைவிக்கு மகிழ்ச்சி வராது. வா நாம் சேர்ந்து போய் உனக்கு தேவையானவற்றை வாங்கலாம் என்று சொல்வதுதான் மகிழ்ச்சியை தரும். கணவரோடு ஷாப்பிங் செல்வது பெண்களை மனோரீதியாக அதிகமாக மகிழ்ச்சிப்படுத்தும். ஷாப்பிங் அழைத்து செல்லும் கணவரை மனைவி அதிகமாக மதிப்பார். அங்கு போய் ஒவ்வொரு பெருளையும் தான் அலசி ஆராய்ந்து வாங்குவதை கணவர் பார்க்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். வாங்குகிற ஒவ்வொரு பொருளும் கணவரோடு சேர்ந்து வாங்கப்படவேண்டும் என்ற எண்ணம் பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது.
ஊக்குவித்தல் :
ஒவ்வொரு பெண்ணிடமும் தனிப்பட்ட திறன்கள் இருக்கும். கணவர் அதை ஊக்குவித்து தன்னை மேலும் திறமைசாலியாக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாள். இந்த ஆசை நிறைவேறும் பட்சத்தில் அவர்களின் திருமணத்திற்கு பிறகு அதிக உற்சாகத்துடன் செயல்படுவார்கள். சில பெண்களிடம் அவர்களுக்கே தெரியாத திறமை ஒளிந்திருக்கும் அதை கணர் கண்டுபிடித்து பட்டை தீட்டினால் கணவரது புகழை பாடத் தொடங்கிவிடுவார்கள்.
நினைவில் நிற்பவை :
கணவரின் நினைவில் தான் எப்போதும் நின்று கொண்டிருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பாள். அதனால் அவள் தொர்புடைய நாட்களை எல்லாம் கணவர் நினைவில் வைத்து வாழ்த்த வேண்டும் என்பது மனைவியின் எதிர்ப்பார்பாக இருக்கும். பிறந்தநாள், திருமணநாள் போன்று எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொண்டு மனம் மகிழும் படி வாழ்த்தி பரிசளிக்க வேண்டும். இந்த சின்னச்சின்ன செயல்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதை செய்தால் கணவரை மதிக்காத பெண்கள் கூட மதிக்கத் தொடங்கி விடுவார்கள்.
நீ என் உயிர் :
உடல்நிலை சரியில்லாத போது மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் மிகப்பெரிய மருந்து அன்பான வார்த்தைகள். நீ என் உயிர். உனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உன்னை முழுவதும் கவனித்து கொள்ள வேண்டியது என் பொறுப்பு என்று சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் அந்த பெண்ணின் தாய் என்ன செய்வாரோ அதை எல்லாம் கணவர் செய்து தன்னை தாயுமானவனாக காட்டிக் கொள்ள வேண்டும். கணவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியிடம் என்ன வெல்லாம் எதிர்பார்ப்பாரோ அவைகளை எல்லாம் அவர் மனைவிக்காக செய்ய வேண்டும்.
Average Rating