கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை..!!

Read Time:14 Minute, 11 Second

article_1469117479-sanjayவடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது.

வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜயநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்தே, இந்தக் கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணம்.

புதிய அரசியலமைப்புக்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்து கொண்டு, லால் விஜேநாயக்க வெளியிட்ட கருத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் கடும் சினமடைய வைத்துள்ளது.

வடக்கிலுள்ள மக்கள் ஒற்றையாட்சியையே ஆதரித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அரசியலமைப்புக்கான யோசனைகளை வடக்கில் கூட்டாகவும் தனியாகவும் முன்வைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு ஒன்று பற்றிய விருப்பங்களையே வெளியிட்டிருந்தனர். அதுபற்றிய தமது எதிர்பார்ப்புகளையும் குறிப்பிட்டிருந்தனர்.

உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான சமஷ்டி முறைகள் இருந்தாலும், வடக்கிலுள்ள மக்கள் பெரும்பாலானோர் சமஷ்டி பற்றிய பொதுவான எண்ணக்கருவையே வெளிப்படுத்தியிருந்தனர்.அரை சமஷ்டி என்று கூறப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கூட சிலர் முன்னுதாரணமாக காட்டியிருந்தனர்.

ஆனாலும், புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கும் குழுவின் தலைவரான லால் விஜேநாயக்க, சமஷ்டியை வடக்கிலுள்ள மக்கள் கோரவில்லை என்றும் ஒற்றையாட்சியையே விரும்புகின்றனர் என்றும் வெளியிட்ட கருத்து அபத்தமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த, வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.தவராசா, இந்தக் கருத்தை முற்றாகவே நிராகரித்திருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்திருந்த செவ்வி ஒன்றில், வடக்கு – கிழக்கில் 95 வீதமான தமிழ் மக்கள் சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றுக்கான விருப்பத்தையே வெளியிட்டனர் என்று கூறியிருக்கிறார்.புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் செயலமர்வுகளின் போது, சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளின் பிரதிகள் அதற்கு ஆதாரமாகத் தம்மிடம் இருப்பதாகவும் தவராசா குறிப்பிட்டிருக்கிறார்.

வடக்கிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்கு மாறாக, புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான லால் விஜயநாயக்க, எதற்காக இப்படியொரு கருத்தை வெளியிட்டார் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இது தமிழர்களை ஒற்றையாட்சிக்குத் தயார்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.

அரசாங்கமே அவரைத் திட்டமிட்டு இவ்வாறு கூற வைத்திருக்கிறது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும், இதுபற்றி வாய்திறந்ததாகத் தெரியவில்லை.

ஆனால், இந்த விவகாரத்தை ஒட்டியதாகத் தான், கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், இரண்டு முக்கியமான விவகாரங்களை எடுத்துக் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஜேர்மனியின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட தொழில்நுட்பக்கூடத்தை திறந்து வைக்கும் அந்த நிகழ்வில், இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, ஜேர்மனி எப்படி தற்போது உலகில் சக்திவாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறியது என்று விளக்கியிருந்தார்.

இது தொழிற்பயிற்சிக் கூடத்தைக் கட்டிக்கொடுத்த ஜேர்மனிக்கு புகழாரம் சூட்டுவதற்காக அவர் வெளியிட்ட கருத்தாக கொள்ள முடியவில்லை.ஜேர்மனி 16 மாகாணங்கள் அல்லது மாநிலங்களின் கூட்டு அரசாக – வெற்றிகரமான ஒரு சமஷ்டி ஆட்சியாக மாறியிருக்கிறது என்ற முன்னுதாரணத்தைத் தான் அவர் காட்ட முனைந்திருந்தார் என்றே கருத வேண்டும்.

ஏனென்றால் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜேர்மனியின் சமஷ்டி அரசியலமைப்பின் மீதும் ஒரு தனிக்கவனம் இருக்கிறது.அடுத்து, முந்திய அரசியலமைப்பு மாற்றங்களில் தமிழ் மக்களின் பங்கெடுக்காமையைச் சுட்டிக்காட்டியிருந்த இரா.சம்பந்தன், தற்போது பொதுவான இணக்கப்பாடுடன் உச்சபட்ச அதிகாரத்தை பெற்றுத்தரும் அனைத்து மக்களையும் அல்லது இறைமையுள்ள குடிமக்களை உள்ளடங்கிய அரசியலமைப்பை உருவாக்குவதில் மிகவும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் கரிசனையுடன் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

அரசியலமைப்பு மாற்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறது என்பதை இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு முன்பாகவும் தமிழ் மக்களுக்கு முன்பாகவும் அளித்துள்ள வாக்குறுதி தான் அது.

சமஷ்டித் தீர்வில் வடக்கிலுள்ள மக்கள் அக்கறை கொள்ளவில்லை என்று லால் விஜயநாயக்க தெரிவித்த பின்னர் தான் அவர் இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

சமஷ்டித் தீர்வு பற்றிய யோசனைகள் எதையுமே, புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவின் அறிக்கையில், இடம்பெற்றிருக்கவில்லை என்றே தெரிகிறது.இப்படியானதொரு நிலையில், சமஷ்டி முறையிலான ஓர்அரசியலமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு கொண்டு வர முடியும் என்ற கேள்வி எழுகிறது.

தமிழ் மக்கள் எப்போதுமே, முக்கியமான தருணங்களில் தமது கருத்தை வெளிப்படுத்துவதில்லை, பொய் உறக்கத்தில் இருந்து விடுவது வழக்கம்.

அரசியலமைப்பு மாற்றத்துக்கான யோசனைகள் பெறப்பட்ட போதும் கூட பெருமளவானோர், உற்சாகத்துடன் சென்று அதற்கான ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு மாற்றத்தில் பங்களிக்கத் தயாராக உள்ள நிலையில், அரசாங்கம் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளப் போகிறது என்ற சந்தேகங்கள் உள்ளன.சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றுக்குள் திடீரென இலங்கை நுழைவது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஏனென்றால் சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்பது பிரிவினைக்கான முதல் அடி என்றே அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்தது சிங்கள அரசியல் தலைமைகள் தான்.

இப்படியான நிலையில் சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றை திடீரென உருவாக்க முனையும் போது சிங்கள மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளைத் தூண்டி விட்டு குளிர்காய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். அரசியல் தீர்வைக் குழப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் தருணம் பார்த்திருப்பதால், பொறுமையாகவே நகர்வுகளை செய்ய வேண்டும் என்று இரா.சம்பந்தன் மன்னாரில் நடந்த கருத்தரங்கில் கூறியிருந்தார்.

அரசியல்தீர்வு எதுவாக இருந்தாலும், அது சமஷ்யாகவோ, ஒற்றையாட்சியாகவோ இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அதனைக் குழப்ப முனையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆட்சியை இப்போது கூட கவிழ்ப்பது கடினமான காரியமில்லை என்று மஹிந்த ராஜபக்ஷவும் அவரது தரப்பினரும் பேசத் தொடங்கி விட்டார்கள். ஆக அவர்களுக்குப் பிரச்சினை அதிகாரமே தவிர, அரசியல் தீர்வு, சமஷ்டி என்பதெல்லாம் அல்ல.

அதனால் தான் அடுத்தவாரம் கண்டியில் இருந்து அவர்கள் பாதயாத்திரையைத் தொடங்கப் போகிறார்கள்.

இந்தக் கட்டத்தில் அரசாங்கமோ, ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒன்றையே மீண்டும் உருவாக்கும் முன்னேற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒன்றைத் தமிழர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான,அதனை ஏற்றுக்கொள்வதற்குத் தயார்படுத்துவதற்காகத் தான் லால் விஜயநாயக்க சமஷ்டி பற்றிய முரணான கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம்.

தமிழர்களின் எதிர்பார்ப்பு பற்றி அவர் இவ்வாறு கூறிவிட்டதால் தமிழர்களின் எதிர்பார்ப்பு அதுதான் என்பது இறுதியாகி விடாது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஓர் அரசியல்தீர்வு தான் – அரசியலமைப்புத் தான், நிலையான அமைதியை ஏற்படுத்தும்.

எந்தவொரு ஒற்றையாட்சி அரசியலமைப்பும் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக அமையாது. இது சிங்களத் தலைமைகளுக்கும் தெரியும் தமிழ்த் தலைமைகளுக்கும் தெரியும்.

சமஷ்டித் தீர்வை முன்வைத்து தேர்தல்களில் போட்டியிட்ட கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தேர்தல்களில் வாக்களித்திருக்கிறார்கள்.

அதனைப் புறக்கணித்து, சமஷ்டியைத் தமிழர்கள் கோரவில்லை என்ற அரைகுறை விளக்கத்தை கூறும் லால் விஜயநாயக்க போன்றவர்களின் கருத்துக்களை ஒட்டுமொத்த அரசியலமைப்பும் பிரதிபலிக்குமாக இருந்தால், அது மீண்டும் தமிழர்களை அந்நியப்படுத்துவதில் தான் போய் முடியும். தமிழர்களின் அரசியல் அபிலாஷை ஒற்றையாட்சி தான் என்று அரசாங்கமும் நம்புமாக இருந்தால், அதுபற்றி தமிழர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்திப் பார்க்கலாம். அந்தளவுக்கு விசப்பரீட்சைகளுக்குச் செல்ல எந்தவொரு சிங்களத் தலைமைகளும் தயாராகவே இருக்காது. கடந்தகாலங்களின் போது விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிராமல் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் முன்வர வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவராக பணியாற்றவுள்ள முன்னாள் மிஸ் இங்கிலாந்து அழகுராணி..!!
Next post றோ-புலிகள் கூட்டுத் திட்டம்: 150 சிங்கள பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 80) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்