திருமணமான 30 நாளில் கணவனை, காதலனை ஏவி கொலை செய்த நர்ஸை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்…!!
கன்னியாகுமரி மாவட்டம், கல்லுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (வயது 29). சிங்கப்பூரில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் சென்னையைச் சேர்ந்த நர்ஸ் அஜிதா (25) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு மனைவி அஜிதாவை பார்க்கச் சென்ற ஜெகன்பாபு திருச்சி ஜங்சன் ரெயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது பெற்றோர் ஜங்சன் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். முதலில் ஜெகன் பாபு ரெயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தண்டவாளத்தின் குறுக்காக அவரது உடல் கிடந்ததால் அவர் சாவில் மர்மம் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு பிறகு ஜெகன்பாவு மர்மச்சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலனை ஏவி விட்டு மனைவியே ஜெகன் பாபுவை கொலை செய்தது தெரிய வந்தது.
சென்னையில் அஜிதா நர்ஸாக பணியாற்றும் ஆஸ்பத்திரியில் வேலூரைச் சேர்ந்த நர்சிஸ் ஊழியர் ஜான்பின் (வயது 28) என்பவருடன் காதல் இருந்துள்ளது.
ஆனால் பெற்றோர் வற்புறுத்தலால் அஜிதா ஜெகன் பாபுவை திருமணம் செய்துள்ளார். திருமணமான பிறகு ஜெகன்பாபு சிங்கப்பூர் சென்று விடுவார் என நினைத்துள்ளார். ஆனால் ஜெகன்பாபு சிங்கப்பூர் செல்லாமல் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.
இதனால் அஜிதா ஏமாற்றமடைந்தார். தனது காதலன் ஜான்பின்னிடம் தனது கணவர் ஜெகன் பாபுவை தீர்த்துக்கட்டாவிட்டால் நாம் சேர்ந்து வாழ முடியாது என கூறியுள்ளார். எனவே ஜெகன் பாபுவை கொலை செய்ய ஜான்பின் முடிவு செய்தார்.
இதற்காக சொக்கலிங்கம் என்ற டாக்டர் பெயரில் சிம்கார்டு வாங்கியுள்ளார். அதில் ஜெகன் பாபுவிடம் தொடர்ந்து பேசி நண்பராக நடித்துள்ளார். கடந்த 7ம் தேதி ரெயிலில் வந்த ஜெகன்பாபுவை திருச்சியிலிருந்து காரில் செல்லலாம் என கூறியுள்ளார்.
ஜெகன்பாபு திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இறங்கியதும் அவரை ஜங்சன் பாலம் அருகே இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று கர்சீப்பால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். அதன் பிறகு உடலை தண்டவாளத்தில் படுக்க வைத்து விட்டு தவறி விழுந்தது போல நாடகமாடியுள்ளார்.
ஆனால் அந்த வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் தண்டவாளத்தில் உடல் கிடப்பதை பார்த்து ரெயிலை நிறுத்தி விட்டார். பிறகு உடலை செல்போனில் படம் பிடித்து விட்டு உடலை தண்டவாளத்தை விட்டு இறக்கி வைத்து விட்டு ரெயிலை இயக்கியுள்ளார்.
முதலில் ஜெகன்பாபு தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் நினைத்தனர். ஆனால் வாட்ஸ்-அப்பில் ஜெகன்பாபு உடல் தண்டவாளத்தின் குறுக்காக கிடந்ததால் சந்தேகமடைந்து துப்பு துலக்கினர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோசல்ராம் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஜெகன் பாபுவின் செல்போனை ஆய்வு செய்து அவர் கடைசியாக பேசிய நபர் யார் என விசாரித்த போது டாக்டர்.சொக்கலிங்கம் என்ற பெயரில் ஜான்பின் பேசி அழைத்து சென்று கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
Average Rating