உங்க வீட்டு குட்டீஸ் அதிகமா டிவி, செல்போனில் மூழ்கிப் போறாங்களா? கவனிங்க பெற்றோர்களே…!!
ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாரதியின் வரிக்கு இன்றைய குட்டீஸ்களுக்கு அர்த்தம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு பள்ளியில் விட்டு வந்த உடன் டிவியில் கார்ட்டூன் பார்ப்பதிலும், செல்போன், கம்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதிலும் மூழ்கி விடுகின்றனர்.
டிவியில் மணிக்கணக்காக மூழ்கிக் கிடக்கும் சிறுவர், சிறுமியருக்கு எலும்புத் தேய்மானமும், உடல் வளர்ச்சியில் பாதிப்பும் ஏற்படும் என, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்றைக்கு மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் குழந்தைகளைக் காண முடிவதில்லை. போன தலைமுறைக் குழந்தைகள், தாங்கள் விளையாடிய விளையாட்டைப் பற்றிப் பேசினால், இந்த தலைமுறைக் குழந்தைகள் கார்ட்டூ்ன் சேனல்களில் தோன்றும் ஒரு கேரக்டர் பெயரைத்தான் கூற முடிகிறது. இதுவே குழந்தைகளுக்கு விபரீதமாகி விடுகிறது.
இதுதொடர்பாக, இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், சிறுவயது தொடங்கி, 20 வயது வரையிலும் தொடர்ச்சியாக, அதிக அளவு டிவி பார்க்கும் வழக்கம் கொண்ட நபர்களுக்கு, எலும்புத் தேய்மானம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஆய்வு
இந்த ஆய்வுக்காக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிரம் பேர் பங்கெடுத்தனர். 5, 8, 10, 14, 17 மற்றும் 20 என பல்வேறு வயதுப் பிரிவுகளை சேர்ந்த இவர்கள் அனைவரும் நாள் ஒன்றுக்கு, 14 மணிநேரம் தொடர்ந்து டிவி பார்க்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
வைட்டமின் பற்றாக்குறை
அதிக நேரம் டிவி முன்பு அமர்ந்து இருப்பதால் குழந்தைகளின் உடல் அசைவு குறைந்து, வைட்டமின் டி, கால்சியம் பற்றாக்குறையால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எலும்பு அடர்த்தியின்மை, உடல் வலு குன்றுதல், உடல் வளர்ச்சியில் ஒழுங்கின்மை போன்றவற்றால், இத்தகைய நபர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழக்கத்தை மாற்றுங்கள்
டிவி பார்க்கும் வழக்கத்தை குறைத்து, அன்றாட விளையாட்டுகள், புத்தகம் படிப்பது உள்ளிட்ட பழக்கங்களில், இன்றைய தலைமுறையினர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால்தான் உடல் நலமுடன் வாழ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ கேம்ஸ்கள்
இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாக கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. செல்போன் கையில் இல்லாத நேரங்களில் டிவியும், கார்ட்டூன்களும், கம்ப்யூட்டர் கேம்ஸ்களும் குழந்தைகளை நகர விடாமல் உட்காரவைத்துள்ளன.
மனச்சிக்கல்
குழந்தைகள் விளையாடாமல் வரும் உடல்நலப் பிரச்னைகள் ஒருபக்கம் என்றால், இந்த எலெக்ட் ரானிக் பொருட்கள் அவர்களிடம் ஏற்படுத்தும் மனச்சிக்கலும் பெரியது என்கின்றனர் மருத்துவர்கள்.
வைட்டமின் குறைபாடு
வெயிலில் விளையாடாமல் பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்று வைட்டமின் டி குறைபாடு உள்ளது. மூன்று வயதில் மூக்குக் கண்ணாடி போட தொடங்கி விடுகின்றனர். எனவே ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே டி.வி பார்க்க அனுமதியுங்கள். அதுவும் சிந்திக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Average Rating