விக்கிரவாண்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் கைது…!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல் கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. நிவேதா (12), சுவாதி (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனந்தன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் மேல்கூடலூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆனந்தன் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பெரிய தச்சூர் போலீசில் புகார் செய்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கிந்த் தேவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் ஆனந்தனை அவரது மனைவி சங்கீதா கள்ளக்காதலன் முருகவேலுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையொட்டி அவர்களை போலீசார் தேடி வந்தனர். செஞ்சி பஸ்நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசில் சங்கீதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஆனந்தன் சொந்தமாக டிராக்டர் வைத்திருந்தார். அந்த டிராக்டரை மேல்கூடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் (22) ஓட்டி வந்தார். எங்கள் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார். இதனால் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினோம். தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம்.
எனது நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள் நான் முருகவேலுடன் பேசிகொண்டிருப்பதை என் கணவர் பார்த்துவிட்டார். அவருடன் பழகுவதை நிறுத்துமாறு என்னை கண்டித்தார். ஆனால் நான் அவருடன் பழகுவதை நிறுத்தவில்லை. முருகவேலை தனிமையில் சந்தித்து பேசிவந்தேன்.
இதனால் என் கணவர் கோபம் அடைந்தார். முருகவேலை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். பின்னர் முருகவேல் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து செல்போன் மூலம் அடிக்கடி என்னிடம் பேசி வந்தார். இதை அறிந்து என் கணவர் தொடர்ந்து என்னை கண்டித்து வந்தார்.
எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். அதன்படி நான் இரவு வீட்டின் அருகே உள்ள கருவேலமர காட்டுபகுதிக்கு சென்றேன். சந்தேகம் அடைந்த என் கணவர் ஆனந்தன் பின்தொடர்ந்து வந்தார்.
அப்போது கருவேல மர காட்டுபகுதியில் முருகவேல் நின்றுகொண்டிருந்தார். எங்களை பார்த்து ஆனந்தன் சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்து நாங்கள் இருவரும் சேர்ந்து ஆனந்தனின் கழுத்தை கயிற்றால் இறுக்கினோம். சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
என் கணவர் ஆனந்தன் இதயநோயால் பாதிக்கப்பட்டவர். எனவே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லிவிடலாம் என நினைத்தோம். ஆனந்தனின் உடலை அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக்கு தூக்கிச் சென்றோம். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தூக்கி வீசினோம். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு தப்பி செல்லலாம் என நினைத்தோம். செஞ்சி பஸ்நியைத்தில் நின்றபோது போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
Average Rating