84 பேர் கொன்று குவிப்பு: நீஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு..!!
84 பேரை கொன்று குவித்த பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி மும்பை தாக்குதல் பாணியில் விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி 137 பேரை கொன்று குவித்தது, உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது.
இந்த கொடூர சம்பவங்கள் நடந்து ஓராண்டு ஆவதற்குள், அங்குள்ள நீஸ் நகரில் பாஸ்டில் தின கொண்டாட்டம் 14-ந் தேதி இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 2 கி.மீ. தொலைவுக்கு கூட்டத்தினர் மீது பயங்கரவாதி ஒருவர் லாரியை ஏற்றியதில் 84 பேர் உடல் நசுங்கி உயிரிழந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதலை நடத்திய நபர், துனீசியாவை சேர்ந்த 31 வயது முகமது லாகோயேஜ் பவுலெல் என்று தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் சுட்டுக்கொன்று விட்டனர்.
தாக்குதல் நடத்திய நபரைக் குறித்து பிரான்ஸ் உளவுத்துறைக்கு தெரியவில்லை, ஆனாலும் இந்த தாக்குதல் அப்பாவி மக்களை கொன்று குவிக்க பயங்கரவாத குழுக்கள் விடுத்த அழைப்பின் தொடர்ச்சியாக நடந்திருப்பதாகத்தான் கருத முடிகிறது என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு அரசு வக்கீல் பிராங்கோயிஸ் மோலின்ஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, ‘முகமது லாகோயேஜ் பவுலெல் கையில் துப்பாக்கி இருந்திருக்கிறது. அந்த வெறியாட்டத்தை நடத்தி முடித்து விட்டு அவன் 3 போலீஸ் அதிகாரிகள் மீது மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். கடைசியில் அவனை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்று விட்டனர்’ என்றார்.
அந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய லாரிக்குள் போலி துப்பாக்கி, போலி கைத்துப்பாக்கி, போலி கையெறி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே துனீசியாவில் மசாக்கின் நகரில் வசிக்கும் முகமது லாகோயேஜ் பவுலெல்லின் தந்தை முகமது மொந்தர் லாகோயேஜ் பவுலெல், நீஸ் நகர தாக்குதல் பற்றி கூறும்போது, ‘என் மகன் மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. 2002-2004 இடையே அவனுக்கு நரம்பு முறிவு பிரச்சினை இருந்தது. அவன் திடீர் திடீர் என கோபப்படுவான். சத்தம் போடுவான். அவன் முன்னால் எது இருந்தாலும் எடுத்து உடைத்துவிடுவான். இந்த சம்பவம் குறித்து அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பிரான்சுக்கு அவன் சென்ற பின்னர் நான் அவனை பார்த்ததில்லை’ என கூறினார்.
இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறி உள்ளார். பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ், “நீஸ் நகர தாக்குதல் நடத்திய முகமது லாகோயேஜ் பவுலெல்லுக்கு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அப்பாவி மக்களை கொன்று குவித்ததின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமது லாகோயேஜ் பவுலெல்லின் முன்னாள் மனைவியையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே நீஸ் நகர தாக்குதல்களுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகிற “அமாக்” செய்தி நிறுவனம் ‘டெலகிராம்’ சமூக ஊடகத்தில்,’நீஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தியவர், ஐ.எஸ். இயக்கத்தின் வீரர்களில் ஒருவர். ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் நடத்துகிற நாடுகளில் தாக்குதல் நடத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் அந்த தாக்குதலை நடத்தி உள்ளார்’ என கூறி உள்ளது.
Average Rating