புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “மாமனார் அனுருத்த ரத்வத்தயினால் தனது உயிருக்கு ஆபத்து!! : அச்சமடைந்திருந்த சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-5)
பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இப் பின்னணியில்தான் அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு செய்து தமது பாரிஸ் காரியாலயம் மூலமாக சோல்கெய்ம் உடன் தொடர்புகொள்ள புலிகளால் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே நோர்வேயுடன் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் விபரங்கள் கடந்த வாரம் தரப்பட்டிருந்தன.
கதிர்காமர்
இதன் விளைவாக நோர்வே தூதுவர் வெஸ்ற்பேர்க் (Westborg) வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோருக்கிடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தூதுவரினதும், கதிர்காமரினதும் வீடுகள் அருகருகே இருந்ததால் தூதுவர் அடிக்கடி பின் வாசல் வழியாக சென்று பேசி வந்தார். இவை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த சங்கதிகளாக இருந்தன.
அமைச்சர் கதிர்காமர் தனது அலுவல்களைப் பெரும்பாலும் தனது வீட்டிலேயே தங்கி கவனித்து வந்தார்.
அரசாங்கத்தோடு 1998 ம் ஆண்டு செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் தூதுவர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த அதேவேளை எரிக்சோல்கெய்ம் விடுதலைப்புலிகளோடு பேசி வந்தார்.
இவ் விபரங்களில் சில பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் அவர்களின் நூலிலும் வெளியாகி உள்ளன.
பாலசிங்கத்தின் வியாதி அவ்வப்போது சிக்கலாகிய வேளையில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சில வைத்திய அதிகாரிகள் அங்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது நிலமை மோசமாகியுள்ளதால் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. இப் பேச்சுவார்த்தைகளின்போது அரசு சில நிபந்தனைகளை விதித்தது.
ஆனால் புலிகள் அவற்றில் பலவற்றை நிராகரித்தனர். தாம் இப் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் நோக்கும்படி கோருவதாக தெரிவித்தனர்.
1998ம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி பீரிஸையும், 18ம் திகதி கதிர்காமரையும், 26ம் திகதி சந்திரிகாவையும் தூதுவர் சந்தித்தார்.
இதன் விளைவுகள் புலிகளுக்கும், அரசிற்கும் மாறி மாறித் தெரிவிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் அரசாங்கம் இப் பிரச்சனையில் மிகவும் ஆர்வமாக இருந்தது. அரசின் சமாதான முயற்சிகளுக்கு புலிகளை உள்ளே கொண்டுவருவதற்கு நல்ல சந்தர்ப்பமெனக் கருதப்பட்டது.
இவை யாவும் பாலசிங்கத்திற்கு பூரணமாக தெரிந்திருந்தது.
Anuruddha
இப் பேச்சுவார்த்தைகளின்போது இன்னொரு அச்சமூட்டும் அம்சம் காணப்பட்டது.
அதாவது சந்திரிகாவின் மாமனார் அனுருத்த ரத்வத்த பாதுகாப்பு அமைச்சராகவும், புலிகளை ராணுவ ரீதியில் ஒழிக்க திட்டமிடுபவராகவும் இருந்தார்.
சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் தனது மாமனார் குறித்து அச்சமடைந்திருப்பது உணரப்பட்டது.
இருப்பினும் சந்திரிகா, கதிர்காமர் ஆகியோர் பல நூறு உயிர்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு புலிகளோடு பேசும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.
அத்துடன் பாலசிங்கத்தின் உயிரைக் காப்பதற்கு நிபந்தனைகளை விதிப்பதற்கும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
அரசு இன்னொரு கொலைக்கு உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டிற்கும் துணைபோக தயாராக இல்லை. ஆனால் இச்சந்தர்ப்பத்தை ரணில் தனது எதிர்ப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவார் என்பது குறித்து கவலை அடைந்திருந்தனர்.
இலங்கையின் ஐ நா சபையின் ராஜதந்திரியாகவும், பின்னர் சமாதான செயலகத்தின் அதிகாரியாகவும் செயற்பட்ட பேர்னார்ட் குணதிலக அவர்களின் கருத்துப்படி……
அதாவது பாலசிங்கத்தின் பிரச்சனை மனிதாபிமானப் பிரச்சனையாக இருந்த போதிலும் அதனால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைக் கருத்தில் கொண்டு புலிகளே அதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக புலிகள் 1999ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி பாலசிங்கம், மனைவி அடேல் ஆகியோர் நாட்டை விட்டு படகில் வெளியேறி தாய்லாந்தை அடைந்தனர்.
இவர்களது வெளியேற்றம் குறித்த முழு விபரங்களும் சந்திரிகா, கதிர்காமர் ஆகியோர் ஏற்கெனவே தெரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் வெளியேற்றத்தின்போது அதனைத் தடுக்கும் சக்தி இலங்கைக் கடற்படைக்கு போதியதாக இருந்ததில்லை. அத்துடன் பாலசிங்கம் பிரித்தானிய பிரஜை என்பதும் கவனத்திற்குரியது.
( அடுத்த வாரம் )
Average Rating