இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
தற்போது ஏராளமான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, மேன்மேலும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதனால் உடல் பருமன், இரத்த அழுத்த பிரச்சனை முதல் இதய நோய்கள் வரை பலவற்றை விரைவில் பெறக்கூடும்.
எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரி, உணவுகளில் கொலஸ்ட்ராலே இல்லை என்பது தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
ஏனெனில் இங்கு 0% கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உட்கொண்டு, நன்மைப் பெறுங்கள்.
உருளைக்கிழங்கு
ஆம், உண்மையிலேயே உருளைக்கிழங்கில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. அதிலும் இதனை எண்ணெயில் பொரித்து உட்கொள்வதைத் தவிர்த்து, வேக வைத்து உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தக்காளி
தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் சாலட்டுகள், சாண்விட்ச்களில் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸைக் குடிக்கலாம்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களான பைட்டோ ஸ்டெரால்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள்.
பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள்
இவைகளிலும் கொலஸ்ட்ரால் இல்லை ஆனால் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. எனவே பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்து, அதன் முழு சத்துக்களையும் பெறுங்கள்.
அவகேடோ/வெண்ணெய் பழம்
பலரும் வெண்ணெய் பழம் என்ற பெயரினால், இதில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் இப்பழத்தில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் தான் அதிகம் உள்ளது. மேலும் பல்வேறு ஆய்வுகளிலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. ஆனால் இதில் கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் புரோட்டீன் அளவு உயர்வதோடு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 8-10 சதவீதம் குறையும்.
ஓட்ஸ்
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள். ஆகவே காலையில் இதனை உணவாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூண்டு
பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, இதய நோய் தாக்கும் அபாயத்தில் இருந்தும் குறைக்கும்.
ஆளி விதை
ஆளி விதையில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் ஆல்பா லினோலியின் அமிலம் அதிகம் உள்ளது. ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், ஆளி விதையை தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் உட்கொள்வது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
பழங்கள்
பழங்களிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத் தான் இருக்கும். அதிலும் வாழைப்பழம், தர்பூசணி, எலுமிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள், பீச், ப்ளம்ஸ் போன்றவற்றை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் நார்ச்சத்தின் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
Average Rating