இலங்கையின் கிழக்கே திருகோணமலைப் பகுதியில் கடும் மோதல்

Read Time:3 Minute, 13 Second

artillery.jpgஇலங்கையின் கிழக்கே திருகோணமலைப் பகுதியில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் மோதல் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மூதூர் நகரினையடுத்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், மூதூர் நகரில் விடுதலைப் புலிகள் நுழைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மூதூர் நகரம் இன்னமும் அரசக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, திருகோணமலை துறைமுகத்தின் மீது மோர்ட்டார் மற்றும் எறிகணைத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இலங்கை விமானப் படையின் விமானங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பகுதி மீது பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உள்ளூர்ச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளின் ராணுவ விவகாரப் பேச்சாளர் இளந்திரையன்
திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு அணைப் பகுதியில் வாழும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கம் அதிகப்படியான படையினரைக் குவித்து தாக்குதல் மேற்கொண்டதாலும், பொது மக்கள் அவதிக்குள்ளானதாலும், தங்களின் அமைப்பு பதில் தாக்குதலை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகளின் ராணுவ விவகாரப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையே நடைபெற்று வரும் மோதலில், விடுதலைப் புலிகள் தரப்பில் நாற்பது பேர் வரை கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத் தரப்பு கூறுகிறது. இருபத்து மூன்று ராணுவத்தினர் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த சில தினங்களாக நடந்து வரும் சண்டையில் தங்கள் தரப்பில் இருபத்தைந்து போராளிகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கும் இளந்திரையன் ராணுவத் தரப்பிற்கு தாங்கள் பெருத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றார். இரு தரப்பினரும் கூறும் சேத விபரங்கள் குறித்து பக்கச்சார்பற்ற வகையில் செய்தியாளர்களால் உறுதி செய்ய இயலவில்லை.
artillery.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை கடற்படை கப்பலுக்கு… -வைகோ
Next post 12 ஆயிரம் இஸ்ரேல் வீரர்கள் லெபனானுக்குள் புகுந்து தாக்குதல்: ஏவுகணை வீசி தீவிரவாதிகள் பதிலடி