சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் ‘அற்புதம்’..!!
இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய இலங்கையில், நாடு புதிய நல்லாட்சியை ஓங்கிய குரலில் அறிவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படியோர் அறிவிப்பு வந்திருப்பது கவலையளிக்கும் விடயம். அதிலும் குறிப்பாக, சிறார்களின் நிலை இப்படி ஆகியிருப்பது அபாயத்தின் அறிகுறி. சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல், தொழிலில் ஈடுபடுவதற்கான வளர்ச்சிப் பருவத்தை எட்டாமலே தொழிலில் ஈடுபடுவது, நாடுமுழுவதும் உள்ள ஒரு பொதுப்பிரச்சினையாக மாறியிருக்கிறது.
இந்தப் பிரச்சினை எதிர்காலத்தை உச்சமாகப் பாதிக்கக் கூடியது. ‘பாடசாலைக்குச் செல்வதென்பது, அநேக பிள்ளைகளுக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது.
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், 13.9 சதவீதமான சிறுவர் தொழிலாளர்கள், 5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது பாடசாலை வரவு கட்டாயமான ஒரு காலப்பகுதியாகும். கிராமப்புறங்களில் உள்ள சிறுவர் தொழிலாளர்களின் பாடசாலைக்கு சமூகமளிக்கும் விருப்புரிமை 58.7 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் ஒப்பிடும்போது, அங்கு 39.1 சதவீதமாகவும் மற்றும் தோட்டப்பகுதிகளில் 10.5 சதவீதமாகவும் உள்ளது. தோட்டப் பகுதிகளில், பத்துக்கு ஒன்பது சிறுவர் தொழிலாளிகள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை (89.5 சதவீதம்).
பெரும்பாலும் 20,000 வீட்டுடமைகளைச் சேர்ந்த 70.3 சதவீதமான 107,259 பிள்ளைகளை கடந்த வருடம் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 5 முதல் 16 வயது வரையான குழுவைச் சேர்ந்த அந்தப் பிள்ளைகள் ஆரம்பத் தொழில்களான வீதியோர வியாபாரிகள் மற்றும் நகரும் வியாபாரிகளாகவும், வீதிச் சேவைகள், வீட்டு உதவியாளர்கள், விவசாயம் மற்றும் அது தொடர்பான வேலையாட்களாகவும் உள்ளனர். சுரங்கத் தொழில், கட்டுமானப் பணி உற்பத்தி, போக்குவரத்து மற்றும் அது தொடர்பான தொழில்களிலும் தொழிலாளியாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சிறுமிகளுக்கு மாதாந்தம் வேதனம் வழங்கப்படும் அதேவேளை, சிறுவர்களுக்கு நாட் சம்பளம் வழங்கப்படுகிறது’ என்று அனுஷியா சதீஸ்ராஜா குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம் என்ன? நாட்டின் பொருளாதாரம் மிகப் பிந்தங்கியிருப்பதே இதற்குப் பிரதான காரணம். என்னதான் கவர்ச்சிகரமான பொருளாதாரத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தினாலும், யதார்த்தத்தில் நிலைமை தலைகீழாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லாமலிருந்தால், அது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும்.
ஒவ்வொரு மனிதரையும் தாக்கும். அதன் விளைவே இது. பொருளாதாரத்தைச் சீராக்காமல், என்னதான் சட்டங்களையும் திட்டங்களையும் விதிகளையும் உருவாக்கினாலும் அதனால் பயனில்லை. சிறுவர் நலத்திட்டங்களும் சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களும் விதிகளும் இருக்கும்போதே இத்தனை பெரிய அளவில் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகியிருக்கின்றமை இதற்கு நல்ல உதாரணம்.
சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதும் ஈடுபடுத்தப்படுவதும் சம காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பெரிய பாதகமான விளைவுகளை உண்டாக்கும். சமகாலத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடக்கம் வன்முறைகள் வரை பலதும் நடப்பதற்கு ஏதுவாகும்.
குறிப்பாக, இலங்கையின் கடலோரங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். சுற்றுலாவுக்குரிய இடங்களில் இந்தப்பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இடையில் வந்த அறிவிப்புகள் இந்தப் பகுதிகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவித்தன.
ஆனால், அனுஷியா சதீஸ்ராஜாவின் ஆய்வு இதை மறுக்கிறது. அப்படியென்றால், நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? நாட்டுப்புறங்களிலும் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும், சிறார்கள் வௌ;வேறு நிலைகளில் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். அப்படி வேலைக்கு அமர்த்தப்படும் இடங்களில் இவர்களுக்கு முறையான பாதுகாப்போ, உள மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளே இருப்பதில்லை. போதிய உணவு, உறக்கம், அரவணைப்பு போன்றவையும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. பதிலாகத் தனிமை உணர்வும் அதிகாரத்துக்கு கீழ்ப்படியும் நிலையும் இவர்களை உளரீதியாக மோசமாகத் தாக்கும்.
வேறு வழியில்லாமல் இப்பொழுது எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள். சிலர் இந்தப் பிராயத்திலேயே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் உண்டு. பலர் மனப்பிறழ்வுக்குக் கூடிய கெதியில் ஆளாகி விடுகின்றனர். இதனால் சிறார் நிலையைக் கடந்து இவர்கள் பெரியவர்களாக வளரும்போது சமூகத்தில் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
விளைவாக நாடு எதிர்காலத்தில் பாரிய குற்றவாளிகளையும் குற்றச்செயல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். இப்பொழுதே அநேகமான நீதிமன்றங்களில், நாளாந்தம் சிறார்கள், நீதிபதிகளின் முன்னே கூண்டுகளில் நிறுத்தப்படுகின்றனர்.
அவர்கள் நன்னடத்தைக்காக சிறார் பாதுகாப்பு நன்னடத்தை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இது ஆரோக்கியமான நிலைமையின் வெளிப்பாடல்ல. இவ்வளவும் நம் கண்முன்னால் நடப்பதுதான் இன்னும் கொடுமையானது. பல இடங்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் சிறுவர் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
ஏன், அவர்களுடைய கையாலேயே தேநீர் வாங்கிக் குடித்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம். அவர்கள் வேலை செய்யும் கராஜ்களில் எங்கள் வாகனங்களைத் திருத்தியிருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் அங்கிருக்கும் அவர்களிடம் நாமே வேலை சொல்லியுமிருப்போம். அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் செல்லும்போது பார்த்திருக்கிறோம். இப்படிப் பல இடங்களில் அவர்களை நாம் இந்த நிலையில் கண்டபோதும் எதுவும் செய்ததில்லை.
நமக்கென்ன, என்றவாறாக விலகிச் சென்று விடுகிறோம். இன்னும் சொல்லப்போனால், பல இடங்களிலும் சிறார்களைத் தொழிலுக்கு அமர்த்தியிருப்பதே பெரியவர்கள்தான், பெரிய கைகள்தான். வீடுகளில், தோட்டங்களில், தொழில் மையங்களில், சில தொழிற்சாலைகளில் பொதியிடல், கணக்கிடல் போன்ற வேலைகளைச் சிறார்களே செய்கிறார்கள்.
இந்தியாவில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் பகிரங்கமாகவே சிறார் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதைப்போல, இலங்கையிலும் ஒரு பகிரங்க நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இலங்கையில் படிப்பறிவு பெற்றோரின் தொகை ஆசியப் பிராந்தியத்திலேயே முதன்மையானது.
ஏறக்குறைய 98 வீதமானது என்ற புள்ளிவிவரச் சுட்டியுமுண்டு. இது எப்படிச் சாத்தியமாகும். ஒரு சுட்டி சொல்கிறது, படிப்பை விட்டு விட்டு, ஐந்து வயதுக்கும் பதின்நான்கு வயதுக்குமிடைப்பட்ட பல ஆயிரம் மாணவர்கள், சிறுவர் தொழிலாளிகளாக உள்ளனர் என்று, இன்னொரு சுட்டி சொல்கிறது. படிப்பறிவு பெறுவோரின் வீதம் 98 சதவீதம் என்று. எங்கே உதைக்கிறதே. ஆகவே இது ஒரு மாய உலகம்.
‘நான் கடவுள்’ படத்திலும், ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலில் சொல்லப்படுவதைப்போல, இதன் பின்னணியில் இருக்கும் அதிகாரத்தின் கரங்கள் மிகப் பயங்கரமானவை. இந்த மாதிரி விடயங்கள் எல்லாம் ஏதோ தானெழுந்தவாரியாக நடப்பதில்லை. சமூகம் இதற்குப் பின்னால் ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் சட்டங்களை உருவாக்கிக்கொண்டே, அதே சட்டங்களுக்கு ஓட்டையைப்போடும் காரியங்களையும் செய்வோம் அல்லவா, அதைப்போலத்தான் இதுவும்.
சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களும் சிறுவர் எதிர்காலச் சிந்தனைகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டே, அதை மெல்லக் கடந்து காரியங்கள் பார்க்கிறோம். இதற்குத் தண்டனை என்ன, இந்தத் தண்டனையை யாருக்கு யார் வழங்குவது, இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி என்ன, தீர்வு என்ன? சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களும் சிறுவர் எதிர்காலச் சிந்தனைகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டே, அதை மெல்லக் கடந்து காரியங்கள் பார்க்கிறோம்.
இதற்குத் தண்டனை என்ன, இந்தத் தண்டனை, பொதுவாகவே சிறார்கள் பல இடங்களிலும் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதற்கு நாட்டிலுள்ள பலருக்கும் பொறுப்புண்டு. ‘சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது’ ‘அவர்கள் கட்டாயமாகப் பாடசாலைக் கல்வியைப் பெறவேண்டும்’ என்ற சட்டங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தாராளமாகவே இருக்கும்போதே, இந்தமாதிரிப் புள்ளிவிவரம் ஏறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
யாருக்கு யார் வழங்குவது? இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி என்ன? தீர்வு என்ன? பாடசாலைக்குச் செல்லாமல் இடைவிலகும் பிள்ளைகளை இணைக்கும் விசேட திட்டம் நடைமுறையில் இருக்கும்போது, எப்படி ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள், கண்களை உச்சிக்கொண்டு, சிறார் தொழிலாளர்களாக நாடு முழுதும் பரந்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் எந்த நாடகமும் தேவையில்லை. ஏனென்றால் இது உண்மை.
உண்மையின் முன்னே வேசங்களைப் போடக்கூடாது. அதாவது, சிறார்கள் என்பது நமக்கான நாளை என்ற உணர்வு நமக்கு முதலில் வரவேண்டும். அப்படி ஒரு புரிதல் ஏற்பட்டால்தான், நாம் அடுத்த கட்டத்தில் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையும் விழிப்புணர்வும் வரும். நமது பிள்ளைகள் மட்டும் படித்து உயர்நிலைக்கு வரட்டும். மற்றப்பிள்ளைகள் எப்படியானால் நமக்கென்ன என்றிருந்தால், அந்த மற்றப்பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்போது பிரச்சினைகள் உருவாகும். அவர்கள் ஆளாகும்போது அவர்களுக்குரிய உலகம் நெருக்கடி மிக்கதாக இருக்கும். அதை எதிர்கொள்வதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள்.
அப்படியான ஒரு சூழலில், அவர்கள் எதிர்நிலையெடுப்பர். அந்த எதிர்நிலை நிச்சயமாக நம் பிள்ளைகளையே பாதிக்கும். ஏனென்றால், அந்த உலகத்தில், அந்தக்காலகட்டத்தில் சமூகத்தில் அவர்களும் ஓர் அங்கமே. ஆகவே, வன்முறைகளும் பிரச்சினைகளும் உள்ள ஒரு காலத்தையும் ஒரு சமூகத்தையும் உருவாகுவதற்கு நாமும் இன்று காரணமாகி விடுகிறோம். எனவேதான், இந்தப்பிரச்சினையில் நாம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
இயங்க வேண்டும் என்ற நிலையுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கண்காணிப்பும் வழிப்படுத்தலும் தொழில் திணைக்களத்தின் சட்டதிட்டங்கள், பொது அமைப்புகளின் அவதானிப்பு என பல தரப்புகளும் சிறார்களின் பாதுகாப்பிலும் அவர்களுடைய எதிர்காலத்திலும் அக்கறையாக இருக்கின்றன. இந்த அக்கறைகள் நடைமுறையில் எப்படி உள்ளன? இதைக்குறித்த வினாக்கள் எழுப்பப்படுவது அவசியம்.
அதிகரித்த அளவில் சிறார்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கிறார்கள், பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகிறார்கள் என்றால், அதைக்குறித்து இவை கவனம் செலுத்தத் தவறியிருக்கின்றன என்றே அர்த்தம். கடந்த ஆண்டு, கிளிநொச்சியில் ஒரு குடிசைக்குள் முதலை புகுந்து பாடசாலைக்குச் செல்லும் சிறுமியைக் கடித்து விட்டது.
ஆற்றோரமாக ஒரு சிறு குடிசையை அமைத்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, முதலைக்கடிக்குள்ளான பின்னர் பாடசாலைக்குச் செல்லவில்லை. இவ்வளவுக்கும் சிறுமி இருக்கும் இடத்துக்கும் சிறுமி படிக்கும் பாடசாலைக்குமிடையிலான தூரம் வெறும் 400 மீற்றரே.
இருந்தும், சிறுமி ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்று யாரும் விசாரித்ததில்லை. அந்தச் சிறுமி வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்வதற்கான வாய்ப்புமில்லை. ஏற்கெனவே படித்த பாடசாலையில் இருந்து விடுவிப்புச் செய்யாமல் இன்னொரு பாடசாலையில் இணைந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் எட்டுமாதங்கள் கழிந்து விட்டன. இதனை அவதானித்த சமூகம்சார் கல்விச் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட முயற்சியின் பின்னர், மீண்டும் அந்தச் சிறுமியை பாடசாலைக்குச் செல்ல வைத்துள்ளனர்.
இதிலும் பல பிரச்சினைகள். எட்டுமாதமாகப் பாடசாலைக்கு வராதிருந்த பிள்ளையை தங்கள் வகுப்பில் இணைத்துக் கொள்வது பொருத்தமல்ல. அந்தப்பிள்ளையின் கல்வி நிலை பொருந்தாது என்று பாடசாலை நிர்வாகம் சொன்னது. ஆனால், இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
1. பாடசாலை
2. இடைவிலகும் மாணவர்களைக் கண்காணிப்பதற்கான அதிகாரி வலயக் கல்விப்பணிமனையில் இருக்கிறார்
3. பெற்றோர்
4. சிறுவர் பாதுகாப்புப் பிரிவு
5. சமூகம் ஆகவே, இந்த மாதிரி ஏராளமான சம்பவங்களும் உதாரணங்களும் நாடுமுழுவதும் உண்டு.
இவற்றை ஒவ்வொன்றாகப் பேசுவதல்ல இங்கே பிரச்சினை. நமக்கு முன்னே உள்ள எதிர்காலப்பிரச்சினைக்கு என்னமாதிரியான தீர்வைக் காணப்போகிறோம். அதை இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும் என்பதே.
மேலே சொன்ன ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வேறு யாருமல்ல. நமது குழந்தைகளே.
அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு கணம் நினைத்துப்பாருங்கள், உங்களின் பிள்ளைகளாக. நீங்கள் அந்தப் பிள்ளைகளுக்காக பெரிய பாடசாலைகளில் அனுமதிக்காக அலைய வேண்டாம். அவர்கள் ஏதாவதொரு பாடசாலையில் படிக்க வழி செய்யுங்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பான, நல்லதோர் எதிர்காலத்தை அது உருவாக்கும். அபாயவொலிகள் ஒரு போதும் வேண்டாம்.
Average Rating