தேனி அருகே 4 பேரை மணந்து பணம் மோசடி செய்த பெண்…!!
தேனி மாவட்டம் போடி டி.வி.கே.கே. நகரைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 27). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் வேலை செய்து வந்தார்.
அப்போது பேஸ்புக் மூலம் சேலத்தைச் சேர்ந்த அனுஷா (24) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வருவதாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவர்கள் பேஸ்புக் மூலம் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பாண்டி கூறினார். அதற்கு அனுஷா எங்கள் குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டது. நம் காதலை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே ரகசியமாக திருமணம் செய்து கொள்வோம். குழந்தை பிறந்ததும் பேரன் பேத்தி பாசத்தில் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.
இதனை நம்பிய பாண்டி அனுஷாவின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் பாண்டி அமெரிக்கா செல்லாமல் சென்னையில் காதல் மனைவியுடன் தங்கியிருந்து அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
டாக்டருக்கு படித்து வருவதாக தெரிவித்திருந்த அனுஷா அதற்காகவும் வேறு செலவினங்களுக்காகவும் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். பாண்டியும் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்து வந்தார். மொத்தம் 15 லட்சம் ரூபாய் வரை அனுஷா வாங்கியுள்ளார். மேற்கொண்டும் பணம் கேட்டதால் பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரித்த போது அவர் மருத்துவக்கல்லூரியில் படிக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் பாண்டி அதிர்ச்சியடைந்தார். தன்னை ஏமாற்றி பணம் பறித்ததால் அதிருப்தியடைந்த பாண்டி அனுஷாவை விட்டு பிரிந்து போடி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுஷாவின் உறவினர்கள் என்று கூறி கரூரைச் சேர்ந்த ரகுபதி, சரவணன், பாபு, வினோத் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் பாண்டியிடம் அனுஷாவுடன் சேர்ந்து வாழுமாறு எச்சரித்து விட்டு சென்றனர்.
இதனால் பாண்டிக்கு அனுஷா மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. குடும்ப பிரச்சனை என்றால் அவளோ அல்லது பெற்றோர்தானே வர வேண்டும். ஏன் வேறு நபர்களை அனுப்பினாள் என்று சந்தேகப்பட்டார்.
அது பற்றி விசாரித்த போது அனுஷா ஏற்கனவே 3 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி, தீபன், திருச்சி முருகன் ஆகியோரை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து பணம் மோசடி செய்துள்ளார்.
அவர் மீது திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகிய விபரங்கள் தெரிய வந்தன.
3 பேரை ஏமாற்றி விட்டு தற்போது தன்னையும் ஏமாற்றி பணம் பறித்த அனுஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாண்டி போடி டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இதனை அறிந்த அனுஷாவும் அங்கு வந்து ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் நான் எந்தவித மோசடியும் செய்யவில்லை. கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற பாண்டி என் மீது வீண் பழி சுமத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகார் மனுக்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating