“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -19)
போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின.
“சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை உருவாக்குதல்” என்ற அவர்களுடைய திட்ட எண்ணக் கருக்களின் தலைப்புகளைக் கேட்பதே புலிகளுக்குத் தாங்க முடியாத ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகச் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் எதுவுமே நேரடியாக மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதைப் புலிகள் விரும்பவில்லை.
கிளிநொச்சியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த திட்டமிடல் செயலகத்தின் வழிகாட்டுதலுக்கமையவே, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்கள் மத்தியில் வேலை செய்ய முடியும் என்று புலிகளின் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களின் புள்ளிவிபரங்களும், மக்களுடைய தேவைப் பகுப்பாய்வு அறிக்கைகளும், மக்களுக்குச் செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கான மாதிரித் திட்டமிடல்களும் கிளிநொச்சியில் அமைந்திருந்த திட்டமிடல் செயலகத்தில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்தன.
வெளியிலிருந்து வருகின்ற எந்த அமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் சென்று புள்ளி விபரங்கள் சேகரிப்பதையோ, மக்களின் தேவைகளைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாடுவதையோ புலிகள் அறவே விரும்ப வில்லை.
சமாதான நடவடிக்கைகளின் ஆரம்ப நாட்களில் பலவண்ணக் கொடிகளைப்
பறக்கவிட்டபடி, இலகுவில் புரிந்துகொள்ள முடியாத பல புதிய பெயர்களைத் தாங்கியவாறு, அரச சார்பற்ற நிறுவனங்களின் பல வாகனங்கள் ஏ9 வீதியில் அணிவகுத்ததை மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.
ஆனால் புலிகளின் நிபந்தனைக் கெடுபிடிகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனப் பல நிறுவனங்கள் ஓடியே போய்விட்டன.
2003இன் ஆரம்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வலுவூட்டும் வகையில் அரச தரப்புப் பெண் பிரதிநிதிகளுக்கும் புலிகள் தரப்புப் பெண் பிரதிநிதிகளுக்குமிடையேயான பேச்சு வார்த்தை, நோர்வே மத்தியஸ்த்துடன் கிளிநொச்சி சமாதானச் செயலகத்தில் நடத்தப்பட்டது.
அரச தரப்புப் பிரதிநிதிகளாக இரண்டு முஸ்லிம் பெண்கள் உட்பட ஐந்து பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கான தலைமைப் பேச்சாளராகக் கலாநிதி குமாரி ஜெயவர்த்தன அவர்கள் கலந்து கொண்டார். மூத்த பெண்ணியவாதியும் சமூக ஆய்வாளருமாகிய இவர் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.
இவருடன் கலந்து கொண்ட அனைவருமே பெண்ணியம், சமூகம், சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளில் செயற்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகளின் தரப்பில் தலைமைப் பேச்சாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன்.
என்னுடன் அரசியல் பிரிவில் செயற்பட்ட போராளிகள் நான்கு பேர் கலந்துகொண்டனர். இவர்கள் சமூகப் பெண்கள் மத்தியில் நீண்டகாலமாக வேலைசெய்த அனுபவம் கொண்டவர்கள்.
மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்கு அனுசரணையாளராக, நோர்வே நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமூக, உளவியல் ஆய்வாளருமான திருமதி அஸ்றிச் கெய்ப்பேர்க் அம்மையார் கலந்துகொண்டார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்காக எம்மைத் தயார்ப்படுத்தினார். சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் இப்படியான உப சந்திப்புகள் மிகவும் முக்கியத்துவம் வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்றுவந்த நீண்டகாலப் போரின் காரணமாகப் போரில் ஈடுபட்டிருந்த இருதரப்பையும் சேர்ந்த பெண்கள் அதிகமான இழப்புக்களையும் வாழ்வின் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் இப்படியானதொரு சந்திப்பைப் பெண் பிரதிநிதிகளிடையே நடாத்தி அவர்களால் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் தீர்மானங்களின் பிரகாரம் பெண்களுக்குரிய விசேட தேவைகளையும் கவனத்திலெடுத்து, வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும் எனவும், தேவையேற்படும்போது பிரதான பேச்சு வார்த்தை மேசைக்குப் பெண் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
“தென்னிலங்கையில் இருந்து வருகின்ற பெண் பிரதிநிதிகள் அதிகம் படித்தவர்கள். அனைவரும் கலாநிதிகள். அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை;
உங்களுக்கு இந்தப் போர்ச் சூழலுக்குள்ளே வாழும் பெண்களின் பிரச்சனைகளை நேரில் பார்த்த அனுபவம் இருக்கின்றது. எனக்கு உங்களில் நம்பிக்கை இருக்கின்றது; நீங்கள் கல்லாத நிதிகள்” என்று கூறி எமக்கு உற்சாகமூட்டினார்.
அத்துடன் எமக்குச் சந்தேகமான பல விடயங்கள் பற்றியும் அவரிடம் கேட்டறிந்துகொண்டோம். அவற்றுள் முக்கியமானது படுகொலைகள் தொடர்பானது.
கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகள், பொதுமக்கள் மீதான விமானக் குண்டுத் தாக்குதல்கள் இவற்றில் அதிக அளவு பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விடயங்கள் பற்றியும் அந்தச் சந்திப்பில் பேசப்பட வேண்டும் என்று எமது போராளிகள் அபிப்பிராயம் தெரிவித்தபோது, அன்ரன் பாலசிங்கம் அதனை மறுத்ததுடன், பின்வருமாறு குறிப்பிட்டார்.
“படுகொலைகளை அவர்கள் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள்.
ஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான் முடியும்” எனக் கூறினார்.
பெண்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளைப் பற்றி ஆராய்வது நல்லது. அவர்களுடைய அனுபவங்களை நீங்களும் உங்களுடைய அனுபவங்களை அவர்களும் பகிர்ந்துகொள்ளுவது பயனுள்ளதாக அமையும்.
எதிர்காலத்தில் உங்களுடைய திட்டங்கள் பிரதான பேச்சு வார்த்தை மேசைக்கு நிச்சயமாக வரும். ஏனென்றால் இன்று உலகத்தில் பெண்ணுரிமை பற்றிய விடயங்கள் முதன்மை பெற்று விளங்குகின்றன.
இது காலமும் நடந்த பேச்சுக்களில் இப்படியான ஒரு சந்திப்பு நடைபெறவில்லை. இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.
இதனை நல்ல விதமாகப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்குப் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் எனப் பலவகையான விளக்கங்களையும் எடுத்துக்கூறி எம்மைத் தயார்படுத்தியிருந்தார்.
அரச தரப்புப் பிரதிநிதிகள் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தியில் வந்து கிளிநொச்சி மைதானத்தில் இறங்கினார்கள்.
தரைவழியாக வருகை தந்திருந்த நோர்வே அனுசரணையாளர்கள், கிளிநொச்சிக் குளத்திற்கு அருகில் அமைந்திருந்த ‘ராங்வியு’ ஹொட்டலில் தங்கியிருந் தனர்.
காலை பத்து மணியளவில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில், வரலாற்றில் முதல்தடவையாக அரச மற்றும் புலிகள் தரப்புப் பெண்களின் பிரதிநிதிகள் நோர்வே நாட்டு அனுசரணையாளர்கள் முன்னிலையில் சந்தித்த நிகழ்வு இடம்பெற்றது.
பரஸ்பர அறிமுகங்களைத் தொடர்ந்து, அனுசரணையாளரின் தலைமையில் முக்கிய விடயங்கள் பேசப்பட்டன. போரினால் பாதிப்புற்ற தமிழ்ப் பெண்களுடைய பிரச்சனைகளை முன்வைத்துப் புலிகள் தரப்பு சார்பாக நான் உரையாற்றினேன்.
பெண்களின் பாதிப்புக்கள் தொடர்பான பல புள்ளி விபரங்களையும் முன்வைத்தேன். அரச தரப்புத் தலைமைப் பேச்சாளராக வருகை தந்திருந்த குமாரி ஜெயவர்த்தனா அவர்கள் “இனம் மொழி கடந்து நாங்கள் பெண்கள்.
இந்த நாட்டில் நடந்த யுத்தத்தால் பெண்கள் அதிக அளவு துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில், இந்தச் சமாதானச் சூழலில் நாங்கள் ஒன்றிணைந்து பெண்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றிப் பேசுவோம்” எனக் குறிப்பிட்டுத் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாலை வரை அந்தச் சந்திப்பு நடைபெற்றது. யுத்தத்தில் கணவரை இழந்துபோன சிங்களப் பெண்கள் எதிர்நோக்கும் துயரங்கள் மற்றும் போரில் காணாமல்போன இராணுவத்தினரைத் தேடியலையும் குடும்பத்தினர்,
எல்லைப்புறக் கிராமங்கள் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகும்போது இடம்பெயரும் சிங்களக் குடும்பங்கள், அவர்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகள் என அவர்களும் பல பிரச்சனைகளை முன்வைத்தனர்.
இறுதியில் பெண்களுக்கான சமாதானச் செயலகம் ஒன்றை அமைத்துச் செயற்படுத்துவதன்மூலம், அந்த இடத்தைத் தளமாகக் கொண்டு பெண்களுக்கான வேலைகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
பெண்களுக்கான பிரதானச் செயலகத்தைக் கொழும்பிலும் அதன் உப செயலகத்தைக் கிளிநொச்சியிலும் அமைக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, நாங்கள் முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அதற்கான எமது தரப்பு நியாயத்தையும் முன்வைத்தோம்.
“போரில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த பெண்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பது உண்மையானது.
அதேவேளை ஒப்பீட்டளவில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிற காரணத்தால், கூடுதலான வேலைகளை இப்பிரதேசங்களிலேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆகவே, பெண்களுக்கான சமாதானச் செயலகத்தின் பிரதான மையம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவதே பொருத்தமானதாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்ட எமது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகங்களுக்கான கூட்டு அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.
குமாரி ஜெயவர்த்தனா, நோர்வேஜிய அனுசரணையாளர் அஸ்ரிட்ஜ் ஹைட்பேர்க்குடன்
கிளிநொச்சியில் இரண்டு தடவைகள் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றன. இரண்டாவது சந்திப்பில் பெண்களுக்கான சமாதானச் செயலகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைப் பற்றிய செயல்திட்டமொன்று வரையப்பட்டது.
இந்தச் செயலகத்திற்கான நிதி உதவியை நோர்வே அரசு வழங்க முன்வருவதாகத் தெரிவித்திருந்த காரணத்தால், அதற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டது.
பிரதானப் பேச்சுவார்த்தை மேசையின் ஆயுட்காலம் எவ்வளவாக அமையும் என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலைமையில், பெண்களுக்கான சந்திப்புக்கள் அதிக அளவு முன்னேற்றகரமான விடயங்களைச் சாதிக்கும் என எனக்கு உண்மையாகவே நம்பிக்கை இருக்கவில்லை.
இருப்பினும் தமிழ்ப் பெண்களின் பிரச்சனைகளை ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெண்களிடம் மனம் திறந்து பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையும், அரசியலுக்கு அப்பால் போரின் காரணமாகப் பெண்களைப் பாதிக்கும் விஷயங்களில் ஒரேவிதமான மனப்போக்குடைய பல தரப்பட்டவர்களின் அபிப்பிராயங்களையும் பகிர்ந்துகொண்ட அனுபவமும் மிக வித்தியாசமானதாக இருந்தது.
சந்திப்பின் முடிவில் எமக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகளைவிட, ஒத்த தன்மையும், தனிப்பட்ட முறையிலான நட்புறவும் ஓங்கியிருந்ததை உணரக் கூடியதாக இருந்தது.
சமூகங்களுக்கிடையேயான அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் பெண்களும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்களேயானால் சமூகங்களின் முன்னேற்ற நலன் சார்ந்த சமரசங்கள் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்க முடியும் எனப் பின்னாட்களில் நான் சிந்தித்ததுண்டு.
இச்சந்திப்புக்குப் பின்னரான காலப் பகுதியில், பெண்களுக்கான சமாதானச் செயலகமொன்றை அமைப்பதற்கான பணத்தை நோர்வே பிரதிநிதிகள் கிளிநொச்சியில் வைத்து எம்மிடம் ஒப்படைக்க முன்வந்தபோது, சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதற்கான முடிவை இயக்கத் தலைமை எடுத்திருந்த காலமாக அது இருந்ததால், அப்பணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து இயக்கம் திருப்பியனுப்பியது.
இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்து கொண்ட பெண்கள் குழுவினருடனான சந்திப்பில் சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளை முறிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றிருந்தபோதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்களிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிக் கொண்டிருந்தது சமாதானம்.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்தைப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய ஓரிரு நாட்களில் நான் நேரடியாகக் கண்டேன்.
வன்னியில் சில வாரங்களாகத் தங்கியிருந்த அன்ரன் பாலசிங்கம் பல முக்கியச் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு லண்டன் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை உலங்கு வானூர்தியில் வழியனுப்பி வைப்பதற்காகப் பல பொறுப்பாளர்களும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். நானும் அங்கிருந்தேன். சற்று நேரத்தில் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து இறங்கினார்.
அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த சற்று நேரத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பெரும் பதற்றத்தோடு அங்கு வந்து சேர்ந்தார்.
தொடரும்…
Average Rating