5 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றவரை வெடிகுண்டு ரோபோவை அனுப்பி தீர்த்துக்கட்டிய அமெரிக்க போலீஸ்…!!
அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை அடுத்தடுத்து போலீசார் சுட்டுக் கொல்லும் அத்துமீறலை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த சம்பவத்தில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை ‘வெடிகுண்டு ரோபோவை’ அனுப்பி போலீசார் தீர்த்துக் கட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மற்றும் மின்னெசோட்டா மாநிலங்களில் அடுத்தடுத்து போலீசாரின் தேவையற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு கருப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், இங்குள்ள டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான கருப்பினத்தவர்கள் போலீசாரின் மனிதஉரிமை மீறல் மற்றும் அராஜகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது அவர்களில் சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். ஆறு போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.
இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மிக்கா ஜான்சன் என்பவர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின. கருப்பின அமெரிக்கரான மிக்கா ஜான்சன், முன்னர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்றும் ஈராக் போரின்போது அமெரிக்க படையில் போரில் பங்கேற்றவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், டல்லாஸ் நகர போலீசார் மிக்கா ஜான்சனை எப்படி கொன்றனர்? என்பது தொடர்பான புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. போலீசாரை சுட்டுக் கொன்ற பிறகும் ஆத்திரம் தணியாமல் கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக கூச்சலிட்டப்படி நின்றிருந்த மிக்கா ஜான்சனை போலீசாரால் நெருங்கி சுட்டுக் கொல்ல முடியவில்லை.
ஒருதூணின் பின்புறமாக நின்றவாறு துப்பாக்கி முனையில் போலீசாரை மிரட்டிக் கொண்டிருந்த அவரைக் கொல்ல அமெரிக்க போலீஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அதிரடி திட்டத்தை டல்லாஸ் போலீசார் அரங்கேற்றினர்.
ரிமோட்டால் இயங்கும் நவீனவகை ரோபோவின்மீது வெடிகுண்டை வைத்து அனுப்பி மிக்கா ஜான்சனை தீர்த்துக்கட்ட போலீசார் முடிவு செய்தனர். அந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்து கைமேல் பலனாக மிக்கா ஜான்சன் கொல்லப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. உரிய நேரத்தில் மிக்கா ஜான்சன் கொல்லப்படாமல் இருந்தால் போலீஸ் தரப்பில் உயிர்பலி அதிகமாகி இருக்கும் என தெரியவந்துள்ளது
இந்நிலையில், டல்லாஸ் நகர போலீசாரின் அறிவுசாதுர்யத்தை அமெரிக்காவின் பிறநகரங்களில் உள்ள போலீஸ் துறையினரும், உலகின் அதிமுக்கிய நகரங்களில் உள்ள போலீஸ் துறையினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதற்கு முன்னர், போர்க்களங்களில் எதிரியின் படைகளை யாருக்கும் தெரியாமல் சென்று, தாக்கி அழிப்பதற்காக மட்டும் இத்தகைய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. இனி, சிக்கலான சூழ்நிலைகளில் பிறநாடுகளில் உள்ள போலீசாரும் இத்தகையை வெடிகுண்டு ரோபோக்களை பயன்படுத்தக்கூடும் என தெரிகிறது.
Average Rating