கள்ளக்காதலியின் குழந்தையை கொன்று புதைத்த தூத்துக்குடி டிரைவர் எங்கே?: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை…!!
பாளையங்கோட்டை சாந்திநகர் 28-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் லட்சுமணன் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமையா என்பவரது மகள் வேலம்மாள் என்ற சித்ரா (வயது 22) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷியாம் ரக்சன் (3) என்ற மகன் இருந்தான்.
லட்சுமணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் சித்ரா பாளை சாந்திநகரில் உள்ள மாமனாருடன் வசித்து வந்தார். அப்போது தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த கார்டிரைவர் அய்யாத்துரை (30) என்பவர் கான்டிராக்டர் ஒருவரை அழைத்துச் செல்ல அடிக்கடி சாந்திநகர் வந்துள்ளார். இதில் அய்யாத்துரைக்கும், சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்தநிலையில் சித்ராவின் மாமனார் தங்கவேல் தனது மனைவியுடன் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இது கள்ளக்காதல் ஜோடிக்கு மிகவும் வசதியாகிவிட்டது. அய்யாத்துரை, சித்ரா வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்தார்.
வெளியூர் சென்ற மாமனார் திரும்பி வந்தால் இதுபோல உல்லாசம் அனுபவிக்க முடியாது என்று நினைத்த கள்ளக்காதல் ஜோடியினர் வெளியூர் சென்று தனிக்குடித்தனம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி 8-6-16 அன்று சித்ரா தனது 3-வயது மகன் ஷியாம் ரக்சன் மற்றும் கள்ளக்காதலன் அய்யாத்துரையுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். இதை சித்ரா கோவில்பட்டியில் உள்ள தனது தாயார் கலாவதியிடமும் கூறியதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல் ஜோடி ஊட்டி, ராமேஸ்வரம், மதுரை என்று ஊர் ஊராக சுற்றிவிட்டு தூத்துக்குடி அண்ணாநகரில் ஒரு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்த தொடங்கினர்.
வெளியூர் சென்ற தங்கவேல் வீடு திரும்பிய போது சித்ராவையும், பேரன் ஷியாம் ரக்சனையும் காணாததால் விசாரித்தார். அப்போது சித்ரா கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
கள்ளக்காதல் ஜோடி ஓடிய போது, லட்சுமணன் வீட்டில் இருந்து எல்.இ.டி. டி.வி. மற்றும் விலை உயர்ந்த பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தங்கவேல், பாளை போலீசில் தனது மருமகள் சித்ரா, பேரன் ஷியாம்ரக்சனுடன் மாயமாகிவிட்டார் என புகார் செய்தார்.
பாளை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அனிதாவேணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவில்பட்டியில் உள்ள சித்ராவின் தாயாரிடம் விசாரணை நடத்திய போது அவர் முதலில் கள்ளக்காதல் ஜோடி பெங்களூருவில் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பிறகு தூத்துக்குடி அண்ணாநகரில் தனிக்குடித்தனம் நடத்துவதை கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தூத்துக்குடி அண்ணாநகர் சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு சித்ரா மட்டுமே இருந்தார். கள்ளக்காதலன் அய்யாதுரையும் குழந்தை ஷியாம்ரக்சனையும் காணவில்லை.
அவர்களை தேடிய போது சித்ரா முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். முதலில் ஊட்டிக்கு அழைத்து சென்ற போது காணவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் குழந்தை உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை சித்ராவும் அய்யாத்துரையும் சேர்ந்து அடித்து கொலை செய்த திடுக் தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீசார் சித்ராவையும், அவர் தலைமறைவாக இருக்க உதவிய அவரது தாயார் கலாவதியையும் கைது செய்து பாளை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இங்கு சித்ரா போலீசாரிடம் குழந்தையை கொலை செய்தது தொடர்பாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தனிக்குடித்தனம் நடத்திய போது, கள்ளத்தொடர்புக்கு குழந்தை அடிக்கடி இடையூறு செய்தது. மேலும் அந்தக்குழந்தை எங்களுடன் இருப்பது அய்யாத்துரைக்கு பிடிக்கவில்லை. இதனால் குழந்தை ஷியாம் ரக்சனை அய்யாத்துரை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்தார். இதனால் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நாங்கள் ஒன்றாக இருக்கும் போது குழந்தை அழுததால் அய்யாத்துரை குழந்தையை கீழே தள்ளி அடித்தார். இதில் குழந்தை இறந்து விட்டது.
இறந்த குழந்தையை நான் புதைத்து விட்டு வருகிறேன் என்று அய்யாத்துரை இரவோடு இரவாக குழந்தை உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றி எடுத்துச் சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர் குழந்தையை புதைத்து விட்டதாக கூறினார். எங்கே புதைத்தார்? என்ன செய்தார்? என்று எனக்கு தெரியாது. யாராவது குழந்தை எங்கே என்று கேட்டால் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டது என்று கூறச் சொன்னார். அதன்படி நானும் எனது தாயார் கலாவதியிடமும், பக்கத்தில் உள்ளவர்களிடமும் குழந்தை உடல்நலம்சரி இல்லாமல் இறந்து விட்டதால் ஊருக்கு கொண்டு சென்று புதைத்து விட்டதாக கூறினோம்.
எங்களை கண்டு பிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் போலீசார் கண்டு பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் தூத்துக்குடியைச் சேர்ந்த டிரைவர் அய்யாத்துரையை தேடி வருகிறார்கள். அய்யாத்துரைக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகிவிட்டது என்றும் 2 மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் 3-வதாக சித்ராவுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அய்யாத்துரையை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அய்யாத்துரை, 3வயது குழந்தையை எங்கே புதைத்துள்ளார் என்று தூத்துக்குடி, சிப்காட் போலீசாரும் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள்.
அய்யாத்துரை பிடிபட்டால் தான் குழந்தையின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பாளை, தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating