கல்லூரி மாணவி சாவு: தற்கொலை செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை – காதலன் வாக்குமூலம்…!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். கூட்டுறவு சங்க செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 22).
சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ.படித்து வந்த இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார். வழக்கம் போல கடந்த 4-ந்தேதி காலையில் கல்லூரிக்கு பஸ்சில் பிரியதர்ஷினி புறப்பட்டார்.
பஸ் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகே வந்த போது போனில் பேசிக்கொண்டிருந்த பிரியதர்ஷினி திடீரென யாருடனோ? ஆவேசமாக பேசினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் இருக்கையில் இருந்து எழுந்த அவர் பஸ்சின் கதவை திறந்து கீழே குதித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரியதர்ஷினி எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில்,
டியர் அரவிந்த என்று ஆரம்பித்து உன்னை என்னால் மறக்க முடியல, என் லவ்வை கடைசி வரைக்கும் நீ புரிஞ்சுக்கல, ஆனா இப்ப எனது உயிரை கொடுத்து என் லவ்வ நிரூபிக்கிறேன், நான் உன் கூட ஒரு நாள் பொண்டாட்டியா வாழ்ந்துட்டேன், இந்த ஜென்மத்துல அந்த சந்தோஷம் போதும் என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து ராசிபுரம் டி.எஸ்.பி. ராஜூ மற்றும் மங்களபுரம் போலீசார் அவரது காதலன் குறித்து விசாரித்தனர்.அப்போது கடந்த கல்வியாண்டில் அதே கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து முடித்த ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்த அரவிந்த் என்ற மாணவரும், பிரியதர்ஷினியும் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்ற போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தது தெரிய வந்தது.
அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரனை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நானும், பிரியதர்ஷினியயும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தோம், பல இடங்களுக்கு இருவரும் சேர்ந்து சுற்றினோம், அப்போது பிரியதர்ஷினி என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
இந்த விஷயம் எனது பெற்றோருக்கு தெரிந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் காதலை ஏற்க மறுத்ததால் நான் பிரியதர்ஷினியிடம் பழகுவதை குறைத்து கொண்டேன்.இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
நான் ஒதுங்குவதை அறிந்த பிரியதர்ஷினி தனது வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் என்னை அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
தற்போது எனக்கு வேலை எதுவும் இல்லாததால் திருமணம் செய்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது. இதனால் வேலை கிடைத்த உடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி வந்தேன்.
கடந்த 4-ந் தேதியும் கல்லூரிக்கு பஸ்சில் சென்ற போது அவர் போனில் என்னிடம் பேசினார். பின்னர் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இதற்காக அவர் தற்கொலை செய்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரிதர்ஷினி தற்கொலை தொடர்பாக மங்களபுரம் போலீசார் ஏற்கனவே விபத்து வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது மாணவி பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை மாற்றிய போலீசார் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அரவிந்த மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் நாமக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
காதலன் திருமணம் செய்ய மறுத்தால் மனம் உடைந்த கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்து கொடூரமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating