வழிப்பறி சம்பவத்தில் 2 பேர் பலி: கொள்ளையன் மனைவி கண்ணீர் பேட்டி…!!
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த ஆசிரியை நந்தினி மற்றும் அப்பகுதியை சேர்ந்த முதியவர் சாகர் ஆகியோர் வழிப்பறி சம்பவத்தில் உயிரிழந்தனர். மொபட்டில் சென்ற நந்தினியிடம் கருணாகரன் என்ற கொள்ளையன் பணப்பையை பறித்த போது, இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
இதையடுத்து பொது மக்களால் தாக்கப்பட்ட கொள்ளையன் கருணாகரனை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அவன் அடைக்கப்பட்டுள்ளான்.
கருணாகரன், கண்ணன் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்துள்ளான். செங்குன்றம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த கருணாகரனுக்கு ரீனா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு ரீனாவை கருணாகரன் காதலித்து திருமணம் செய்து கொண்டான். திருமணத்துக்கு பின்னரும் கருணாகரன் தவறான செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றதால் ரீனா பிரிந்து சென்றார்.
பின்னர் 2009-ம் ஆண்டு, அவரிடம் சென்று சமாதானம் பேசி கருணாகரன் சேர்ந்துள்ளான். தற்போது கருணாகரன் வழிப்பறியில் ஈடுபட்டு 2 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதை நினைத்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக ரீனா கூறும்போது, கணவர் கருணாகரனின் குடிப்பழக்கமே அவரை இப்படி மாற்றியுள்ளது என்று வேதனைப்பட்டார். மது குடித்துவிட்டால் அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாது. மொத்தமாக மாறிவிடுவார். போதையில் இருக்கும் போது மட்டுமே அவர் தவறுகளை செய்துள்ளார் என்றார். பட்டினப்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டபோதும் எனது கணவர் மது குடித்திருந்துள்ளார்.
அவர் செய்த குற்றத்தால் நாங்கள் தண்டனையை அனுபவித்து வருகிறோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். 2 பேர் பலியானதை டி.வி.யில் பார்த்ததும் குடும்பத்தில் உள்ள அனைவருமே அழுதுவிட்டோம். எங்களால் சாப்பிடகூட முடியவில்லை. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. நந்தினியின் பெற்றோரை நினைத்தாலே அழுகை வந்து விடுகிறது.
புளியந்தோப்பில்தான் முதலில் நாங்கள் வசித்து வந்தோம். அப்போது திருந்தி வாழ்ந்து வந்தார். டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த அவர் வெளியில் எங்கு சென்றாலும் நானும் கூடவே செல்வேன். என் கணவருக்கு தொடர்பு இல்லாத வழக்குகளிலும் அவரை கைது செய்து வந்தனர். இதனை கேள்விபட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் போலீசாரை கண்டித்தார். இதன் பின்னர் அதுபோல நடக்காமல் இருந்தது. போலீசார் அடிக்கடி போன் செய்து கணவரை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார்கள்.
எனது கணவர் இரக்க குணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பார். மழை வெள்ளத்தின் போது எங்கள் வீட்டுக்கு, காலில் அடிபட்டு நாய் ஒன்று வந்தது. அதற்கு மருந்து போட்டு தினமும் வேப்பேரியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். இப்போதும் அந்தநாய் எங்கள் வீட்டிலேயே உள்ளது. இப்படி எல்லோரிடமும் பாசம் காட்டும் அவர் மது குடித்தால் மட்டுமே மாறிவிடுகிறார் என்று மனைவி ரீனா கண்ணீர் விட்டு அழுதார்.
Average Rating