“ராஜீவ் கொலை நடந்த இடத்தில் நின்ற குர்தா, பைஜாமா அணிந்த நபர் யாா??: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-3)

Read Time:19 Minute, 37 Second

timthumbசம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கேமராவுக்குரிய பையினுள் ஒரு விசிட்டிங் கார்ட் இருந்தது.

போட்டோகிராபரின் அடையாள அட்டை கிடைத்தது.

அதனை வைத்து, அவர் யார் என்று அடையாளம் காணலாம். அவ்வளவே. ஏற்கெனவே க அடையாளம் காணப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்தது.

அது அந்த கேமராமேனாக இருக்கலாம். படம் எடுக்கும்போது குண்டு வெடித்து இறந்திருக்கலாம்.அடையாள அட்டையில் அந்த போட்டோகிராபரின் பெயர் ஹரி பாபு என்று தெரிந்தது.

அவர், சென்னையில் அன்றைக்கு மிகப் பிரபலமான போட்டோகிராபராக இருந்த சுபா சுந்தரத்தின் ஸ்டுடியோவில் பணியாற்றுகிறார் என்கிற விவரமும் இருந்தது.

அவரது கேமரா பேகில் இருந்த விசிட்டிங் கார்ட் ‘வைட் ஆங்கிள்’ என்னும் புகைப்பட நிறுவனத்தை நடத்தி வந்த ரவிசங்கரன் என்பவருடையது.

இந்த இரண்டு பெயர்கள்தான் தொடக்கம். சரி, போன் செய்து விசாரிக்கலாமே? சுபா சுந்தரமும் சரி, ரவி சங்கரனும் சரி. பத்திரிகை உலகில் அனைவருக்கும் தெரிந்த பெயர்கள்.

எத்தனையோ பத்திரிகை போட்டோகிராபர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். அவர்களில் யாரோ ஒருவர் இந்த இருவருக்குத் தெரிந்த நபராக அவர் இருக்கலாம்.

அல்லது இருவரில் ஒருவரேவா? சந்தேகம் தெளிய போன் செய்ததில், ரவி சங்கரன் சென்னையில் இருப்பது தெரிந்துவிட்டது.

சரி, அவர் இல்லை. அவரது விசிட்டிங் கார்ட் எப்படியோ இவரது பையில் வந்திருக்கிறது.

மறுபுறம் சுபா சுந்தரத்தைத் தொடர்புகொண்டபோதுதான் முதல் நெருடல் உண்டானது. ‘ஹரி பாபுவா? என் நிறுவனத்திலா?

அப்படி யாரும் இல்லையே’ என்று சொல்லியிருந்தார்.

ரவி சங்கரனை மேற்கொண்டு விசாரித்ததில் சில விஷயங்கள் கிடைத்திருந்தன. ஹரி பாபு அவருடைய நண்பர்தான்.

இருவருமே சுபா சுந்தரத்திடம் பணியாற்றியவர்கள்தாம். தமிழ்நாட்டில் எந்த ஒரு பத்திரிகையாளரை அல்லது பத்திரிகை புகைப்பட நிபுணரைக் கேட்டாலும் ஹரி பாபு, சுபா ஸ்டூடியோவில் பணியாற்றிய விவரம் கிடைத்துவிடும்.

இந்த எளிய யதார்த்தத்தை யோசிக்காமல் சட்டென்று சுபா சுந்தரம், ஹரி பாபுவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதுதான் ஆரம்பம்.

அந்த கேமரா, ரவி சங்கரனுடையது.

சொந்தமாக கேமரா வைத்துக்கொள்ளும் அளவுக்குக் கூட வசதியில்லாத ஹரி பாபு, ராஜிவ் பொதுக்கூட்டத்துக்காக அதனைத் தனது நண்பர் ரவி சங்கரனிடம் இரவல் வாங்கிச் சென்றிருக்கிறார்.

மே 21ம் தேதி இரவு சம்பவம் நடந்த வினாடி முதல், மைதானத்தில் சிதறிக்கிடந்த ஆதாரங்களைச் சேகரிப்பதும், இறந்த உடல்களை அடையாளம் காண்பதும், காயமுற்றவர்கள், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள் குறிப்பாக சம்பவ இடத்தில் வெகு அருகில் இருந்தவர்களிடம் ஆரம்ப விசாரணை செய்வதுமாக இருந்தார்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார்.

மே 24ம் தேதி இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் முறைப்படி வந்து சேர்ந்து, அன்று பிற்பகல் நாங்கள் அதனை ஒரு புதிய வழக்காகப் பதிவு செய்தோம்.

ஆனால் 23ம் தேதி இரவே அந்த பிலிம் ரோல் ஹிந்து நாளிதழுக்குச் சென்று சேர்ந்து ப்ரிண்ட் போடப்பட்டு 24ம் தேதி சொல்லக் காத்திருந்த மூன்று பெண்கள் அதில் ஒரு படத்தில் இடம்பெற்றிருந்தார்கள்.

புடைவை கட்டிய பெண் ஒருவர். பச்சையும் ஆரஞ்சும் கலந்த வண்ணத்தில் சல்வார் கம்மீஸ் அணிந்த பெண் ஒருவர். ஒரு சிறுமி.

சல்வார் கம்மீஸ் அணிந்த பெண்ணின் கரங்களில் ஒரு சந்தன மாலை. அவ்வளவுதான்.

பின்னாளில் உலகப் புகழ்பெற்ற இந்தப் புகைப்படத்தில் வெள்ளை நிற குர்தா, பைஜாமா அணிந்த நபர் ஒருவரும் இருந்த காட்சி உங்கள் மனக்கண்ணில் வருமானால், அது உண்மையே.

ஆனால் ஹிந்து நாளிதழில் வெளியான படத்தில் அந்த குர்தா பைஜாமா நபர் இல்லை.

படத்தின் இடது ஓரத்தில் அந்த மூன்று பெண்களை அடுத்து சற்றுத் தள்ளி நின்றிருந்த அந்த நபரின் உருவத்தை ஹிந்து நீக்கிவிட்டு, பெண்களை மட்டும் பிரசுரித்திருந்தது.

மிக எளிய காரணம்தான் அதற்கு.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், சந்தேகத்துக்குரிய நபர்கள் என்னும் அளவில் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில், ஒரு பத்திரிகையாளர் தோற்றத்தில் யாரோ ஒரு நபரும் இருக்கிறார்.

பொதுவாக எந்தப் பத்திரிகையும் காரணமில்லாமல் இன்னொரு பத்திரிகையாளரின் புகைப்படத்தைத் தனது இதழில் வெளியிட விரும்பாது.

எதற்கு அந்த குர்தா பைஜாமா நபருக்கு வீண் விளம்பரம் என்று நினைத்து அவரை மட்டும் நீக்கிவிட்டிருந்தார்கள்!

ஹரி பாபு எடுத்த அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பத்து புகைப்படங்களும் ஹிந்துவுக்குப் போய்விட்டு, பின்னால் தடய அறிவியல் துறையில் சி.பி.சி.ஐ.டி. பிரிவினர் மூலம் ப்ரிண்ட் போடப்பட்டு முறைப்படி எங்களுக்கும் வந்து சேர்ந்தபோதுதான், அதே படத்தின் இடது ஓரம் குர்தா பைஜாமா நபர் ஒருவரும் இருக்கும் விஷயத்தைக் கண்டோம்.

யார் அவர்?

யோசித்துக்கொண்டிருந்த வேளையில், ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த பகவான் சிங் என்ற பத்திரிகையாளர் சம்பந்தப்பட்ட புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு தகவலை எங்களுக்குச் சொன்னார்.

பொதுக்கூட்ட மைதானத்தில் அவர் ஹரி பாபுவுடன் அந்த குர்தா பைஜாமா அணிந்த நபரைப் பார்த்திருக்கிறார்.

யார் அவர் என்று விசாரித்தபோது, ‘இவர் வைட் ஆங்கிள் ரவிசங்கரனின் பார்ட்னர்’ என்று ஹரி பாபு சொல்லியிருக்கிறார்.

பொதுக்கூட்டத்தில் காவலுக்கு இருந்த சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா, குண்டு வெடிப்பில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தார்.

அவரிடம் அந்தப் புகைப்படங்களைக் காட்டியபோது, அவர்களைப் பொதுக்கூட்ட மைதானத்தில் பார்த்ததை நினைவுகூர்ந்தார்.

சரி. இதுதான். இவ்வளவுதான். ஹரி பாபு படமெடுத்திருக்கிறார். பத்துப் படங்கள் இருக்கின்றன. இதிலிருந்து எதாவது துப்புக்கிடைத்தால்தான் உண்டு.

அது பிறகு. ஹரி பாபுவின் உறவினர்களுக்குத் தகவல் சொல்லியாகிவிட்டதா? அவர்கள் உடலைப் பெற்றுச் சென்றுவிட்டார்களா?

காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனையில் உடலை அடையாளம் சொல்லி, பெற்றுக்கொண்டு அங்கேயே இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு அவர்கள் சென்னைக்குப் போய்விட்டார்கள் என்று சொல்லப்பட்டது.

குழப்பமாக இருந்தது. அப்படியா? என்ன அவசரம்? வீட்டுக்குக் கூட எடுத்துச் செல்ல விரும்பமாட்டார்களா? சரி. ஒருவேளை சிதைந்திருந்த உடலை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கருதியிருக்கலாம்.

நான் சில விசாரணை அதிகாரிகளுடன் சைதாப்பேட்டையில் இருந்த ஹரிபாபுவின் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

பார்த்ததுமே ஏழைமை தெரியும் எளிய குடிசை அது. மிகச் சிறிய குடிசை. ஒரு சில தட்டுமுட்டுச் சாமான்கள். அழுக்குத் துணிகள். சுவரில் கண்ணாடி. அலுமினியப் பாத்திரங்கள். தாழ்வான வாசல். ஒரே பையன். நிகழ்ச்சியைப் படமெடுக்கப் போனான்.

இப்படி அவனே படமாகிவிட்டானே. அழுகைகள், வருத்தங்கள், சோகம். அப்போதும் எங்களுக்குத் தெரியாது. அவனிடமிருந்துதான் இந்த வழக்கே ஆரம்பமாகப்போகிறது என்பது.

சுபா சுந்தரம்….

போ ட்டோகிராபர் சுபா சுந்தரம், தமிழ் மீடியா உலகில் பிரபலமானவர்.

எண்பதுகளில் அவரைத் தெரியாதவர்கள் பத்திரிகை உலகில் இருக்கமாட்டார்கள். பிரபலமான போட்டோகிராபர் என்பதுடன் பல அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், சினிமா உலகத்தினர், வேறு பல்வேறு துறைகள் சார்ந்த வி.ஐ.பிக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.

அவர் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களுள் ஒருசாரார், விடுதலைப் புலிகள்.

எண்பதுகளில் தமிழகத்தில் பல முக்கியஸ்தர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டு.

தமிழகத்தை அவர்கள் தமது இரண்டாம் தாயகமாகவே கருதி வந்தார்கள்.

விடுதலைப் புலிகள் மட்டுமல்லாமல், இலங்கையில் செயல்படும் பல்வேறு போராளி இயக்கங்களுக்கும் தமிழகம் அடைக்கலம் அளித்திருந்தது.

அரசியல் தலைவர்களின் ஆதரவும் உதவிகளும் அவர்களுக்குக் கிடைத்து வந்தன. பொதுமக்கள் அனுதாபமும் இருந்தது.

ஆனால் சுபா சுந்தரத்துக்கு விடுதலைப் புலிகளுடன் இருந்த தொடர்பு என்பது வெறும் அனுதாபம் அல்ல.

உள்ளார்ந்த தொடர்பு. புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.

அரசியல் பணியாற்றிக்கொண்டிருந்த பேபி சுப்பிரமணியத்துக்கு அவர் மிக நெருங்கிய நண்பர்.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் விடுதலைப் புலிகளுக்கு சுபா ஸ்டூடியோ ஒரு முக்கியமான ஜாயிண்ட்.

இந்த விவரமெல்லாம் உளவுத்துறைக்குத் தெரியும்.

காவல் துறையில் அனைத்துப் பிரிவினருக்கும் தெரியும். இருப்பினும் ராஜிவ் கொலை வழக்கில் சுபா சுந்தரமும் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் பல அரசியல் கட்சிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பினைப் போலவே காங்கிரசிலும் அவருக்குத் தொடர்புகள் இருந்தன.

வாழப்பாடி ராமமூர்த்தியின் வலக்கரம் போல் இருந்த கிள்ளி வளவனுக்கு அவர் மிகவும் நெருக்கமானவர்.

அன்றைய தமிழ்நாடு காங்கிரசில் அநேகமாக அனைத்து முக்கியஸ்தர்களுடனும் அவருக்குப் பழக்கம் உண்டு.

ஒரு வினோதம், சி.பி.ஐ.க்கேகூட சுபா சுந்தரம் மீது முதலில் சந்தேகம் வரவில்லை.

அவரே தனது சொந்தப் பதற்றத்தால் மூன்று விதங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொண்டு பிடிபட்டதுதான் இதில் முக்கியமான அம்சம்.

இதனை முதலில் விளக்கிவிடுகிறேன்.

சைதாப்பேட்டையில் இருந்த ஹரி பாபுவின் வீட்டுக்கு விசாரிக்கச் சென்றபோது, அவரது தந்தை வி.பி. சுந்தரமணி சொன்ன முதல் விஷயம், தன் மகன் சுபா ஸ்டூடியோவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் என்பது.

முதல் முதலில் சிபிசிஐடி போலீசார் ஹரி பாபுவின் உடலருகே கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையைப் பார்த்து சுந்தரத்துக்கு போன் செய்தபோது அவர் ஏன் தனக்கு அவனைத் தெரியாது என்று சொல்லவேண்டும்?

முதல் சந்தேகம் அங்கே விழுந்தது.

தொடர்ந்த விசாரணைகளில் மேலும் பல தகவல்களை ஹரி பாபுவின் தந்தை சொன்னார்.

மே 21ம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் ‘ஒரு போட்டோகிராபர்’ இறந்துவிட்ட விவரத்தை, சென்னையைச் சேர்ந்த தினசரிப் பத்திரிகை நிருபர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு, ஹரி பாபுவின் தந்தை முதலில் சுபா சுந்தரத்தைப் பார்க்கத்தான் ஓடியிருக்கிறார்.

உடனே ஸ்ரீபெரும்புதூருக்குப் போகவேண்டும். உங்கள் காரைக் கொடுங்கள். இந்த நேரத்தில் நான் வேறு யாரைப் போய்க் கேட்க முடியும்?

‘யோவ், தேவையில்லாத பிரச்னை வரும்யா. நீ வேற வண்டி புடிச்சிப் போயிடு’ என்று சொல்லி சுபா சுந்தரம் வண்டி தர மறுத்திருக்கிறார்.

மகன் இறந்த பதற்றத்தில் மேற்கொண்டு பேசிக்கொண்டிராமல் அவர் வேறு ஏற்பாடு செய்துகொண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு விரைந்திருக்கிறார்.

காஞ்சிபுரம் சென்று பொது மருத்துவமனையில் அடையாளம் தெரியாதிருந்த ஓர் ஆண் உடலைப் பார்த்து, அது தன் மகன் என்று காவல் துறையினரிடம் கூறி, உடலைப் பெற்றுக்கொண்டு, அங்கேயே இடுகாட்டில் எரித்துவிட்டுச் சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

‘ஹரி பாபுவா? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே’ என்று சொன்ன சுபா சுந்தரம். தன்னிடம் வேலை பார்த்த ஒருவன் நேரே சுந்தரமணியிடம் சென்று, ‘இதோ பாருங்கள். விசாரணை எங்கெங்கோ போகிறது.

உங்கள் மகனுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவெல்லாம் பேசுகிறார்கள். அதெல்லாம் இல்லை என்று நீங்கள் ஒரு மறுப்பு அறிக்கை கொடுத்துவிடுங்கள்.

இல்லாவிட்டால் பெரிய பிரச்னையாகிவிடும்’ என்று சொல்லி மறுப்பு அறிக்கை எழுத வைத்ததும் பின்னால் நடந்தது.

ஹரி பாபுவின் தந்தை சொன்ன இந்தத் தகவல்கள் சுந்தரத்தின்மீது சந்தேகத்தை உண்டாக்கினாலும் அவரை நாங்கள் முதலில் கைது செய்யவில்லை.

கைது செய்யுமளவுக்கு அவை வலுவான காரணங்களாகத் தோன்றவில்லை. ஆனால் அத்தகைய வலுவான காரணம் வேறொரு இடத்திலிருந்து எங்களுக்குக் கிடைத்தது.

மே 21ம் தேதி குண்டு வெடிப்பு நடந்து மக்கள் கன்னாபின்னாவென்று சிதறி ஓடத் தொடங்கி, பிராந்தியமே அதகளமானதல்லவா? அன்றிரவு சென்னையிலிருந்து பொதுக்கூட்டத்துக்குச் சென்றவர்கள் யாரும் அத்தனை சுலபத்தில் சென்னை திரும்ப முடியாத சூழ்நிலை.

வண்டி கிடையாது. எங்கும் கலவரம், களேபரம். பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களில் பலர் பூந்தமல்லிவரை சென்று, அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனில் அன்றிரவு தங்கவேண்டிய சூழ்நிலை.

சென்னைக்கு போன் செய்யவும் தத்தமது பத்திரிகைகளைத் தொடர்புகொள்ளவும் அதுவே சிறந்த வழி. செல்போன்கள் புழக்கத்துக்கு வராத காலம் என்பதால் எங்காவது ஓரிடத்தில் நின்றுதான் போன் செய்தாக வேண்டும்.

அப்படி பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர்.

அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் அவரது முதலாளியான சுபா சுந்தரத்தையும் நன்கு அறிந்தவர் ராமமூர்த்தி.

சுபா சுந்தரம் பூந்தமல்லி காவல் நிலைய தொலைபேசி மூலம் இந்த ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

ஹரி பாபு இறந்துவிட்டான் என்று அவர் சொன்னதுமே சுபா சுந்தரத்திடமிருந்து வந்த முதல் ரியாக்ஷன்,‘அவன் போகட்டும். முதலில் அந்த கேமராவை எடுக்க வேண்டும்.’ தேள்கடி ராமமூர்த்திக்கு இது முதல் அதிர்ச்சி.

கே. ரகோத்தமன்
(தொடரும்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நுவரெலியா பதுளை பிரதான பாதையில் விபத்து…!!
Next post காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த மனிதர்… பதபதைக்க வைக்கும் காட்சி…!! வீடியோ