கலைஞர் கருணாநிதி மீது சந்தேகம்!! : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! – (பகுதி-2)
தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும்?
அரசியல் விரோதம். எளிய காரணம். போதாது? வட நாட்டு அதிகாரிகள் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போதைக்குக் கிடைத்த எளிய ஆதாரங்கள் எடுத்து வீசப்பட்டன. அதே மே 21ம் தேதி, அதே ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த கலைஞர் கருணாநிதியின் பொதுக்கூட்டம்.
சந்தேகங்களும் சடங்குகளும்
சற்றும் முன்னறிவிப்பின்றி, அது அன்றைய தினம் காலை சடாரென்று ஒத்திவைக்கப்பட்டது.
கலைஞரின் ஸ்ரீபெரும்புதூர் வருகை தவிர்க்கப்பட்டது. அன்றைய தி.மு.கவின் முக்கிய நபராக இருந்த வைகோவின் விடுதலைப் புலிகள் நெருக்கம், அவர் கள்ளத் தோணி ஏறி இலங்கைக்குச் சென்று வந்தது, தமிழகத்தில் இலங்கைப் போராளிகளுக்கு அளிக்கப்பட்டுக்கொண்டிருந்த முக்கியத்துவம், அரசாங்க உதவிகள் இன்ன பிற.
‘அபத்தம்.
விடுதலைப் புலிகள் இதைச் செய்திருந்தாலும், தி.மு.க.வுக்காகச் செய்திருக்கலாம் அல்லவா?’ ‘வாய்ப்பே இல்லை.
இது சி.ஐ.ஏவின் திட்டமிட்ட சதி.’ ‘இருக்காது. இத்தனை தைரியம் மொஸாடுக்குத்தான் உண்டு.’ ‘அதெல்லாம் இல்லை. இது உல்ஃபா அல்லது காஷ்மீர் இயக்கங்கள் ஏதாவது திட்டமிட்டிருக்கும்.
தெற்கே யாருக்கும் இத்தனை துணிச்சல் கிடையாது.’ ‘இங்கே ராஜிவுக்கு விரோதிகள் யாரும் கிடையாது. கொலை செய்யுமளவு விரோதம் பாராட்டத்தக்க சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.’
‘இலங்கை இயக்கங்களைச் சந்தேக லிஸ்டிலிருந்து முதலில் தூக்குங்கள். அவர்கள் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.
அதுவும் தமிழ்நாட்டில் இப்படியொரு காரியம் செய்வது தற்கொலைக்குச் சமம் என்பது அவர்களுக்குத் தெரியும்.’ ‘தவிரவும் தமிழ்நாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போன்ற இலங்கை இயக்கங்கள் இந்தியாவை வலுவாக ஆதரிப்பவை.
மத்திய அரசுக்கும் நெருக்கமாக இருந்தவை. இப்படியொரு அபாயம் புலிகளால் உண்டு என்றால் நிச்சயம் அவர்கள் மூலம் தெரியவந்திருக்கும்.
’ ‘புலிகள் பேச்சே வேண்டாம். வெறும் நேர விரயம். மற்ற கோணங்களை நாம் அலசுவோம்.’
‘நோ. இதற்குமுன் தமிழ்நாட்டில் நடந்த பத்மநாபா கொலை வழக்கைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள். அதை நாம் முதலில் பார்க்க வேண்டும்.
எதையும் விடக்கூடாது.’ ’கொலை, அபாயகரமான ஆயுதங்கள், சதித்திட்டம் இன்னும் என்னென்னவோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தடா ஏன் சேர்க்கப்படவில்லை? முதலில் அதைச் செய்யவேண்டும்.’
இடம், நுங்கம்பாக்கம் தென்னக ரயில்வே விருந்தினர் விடுதி. சி.பி.ஐ. இயக்குநர் ராஜா விஜய் கரன் அமர்ந்திருந்தார். எஸ்.கே. தத்தா அருகில் இருந்தார்.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த டி.ஆர். கார்த்திகேயன் இருந்தார்.
இன்னும் பல சி.பி.ஐ. அதிகாரிகள், மாநில காவல் துறை அதிகாரிகள், சிபிசிஐடி பிரிவின் அதிகாரிகள், க்யூ ப்ராஞ்ச் அதிகாரிகள் மிகப்பெரிய கூட்டம்
மே 22ம் தேதி சிபிசிஐடி பிரிவினர் முதல் கட்ட விசாரணை நடத்தியபிறகு, 24ம் தேதி வழக்கு முறைப்படி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, நாங்கள் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று சம்பவ இடத்தில் பார்வையிட்டு, முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துத் திரும்பியிருந்தோம்.
யார் செய்திருப்பார்கள்? அனைவர் மனத்திலும் ஒரே கேள்வி. அவரவர் யூகங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. நான் அமைதியாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.
புலனாய்வில் யூகங்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல், தடயங்களின் அடிப்படையில் செயல்படுவதே முடிவைக் கண்டடைய சிறந்த வழி என்பது பணிக்காலத்தில் எப்போதும் நான் கடைப்பிடித்த வழி.
யூகிப்பது முழுத்தவறல்ல. ஆனால் யூகமே அபிப்பிராயமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. நமது சுய அபிப்பிராயம் சேர்ந்துவிட்டால் வழக்கின் நிறம் நாம் விரும்பும்படியாக உருமாறத் தொடங்கிவிடும்.
இது உண்மையைக் கண்டுபிடிக்கும் பாதையில் பெரிய தடைகளை உருவாக்கக்கூடியது. எனவே எத்தகைய யூகங்களுக்கும் நான் இடம் கொடுக்கவில்லை என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி என்னும் முறையில், புலனாய்வைத் தொடங்குவதுதான் நான் செய்ய வேண்டிய முதல் பணி.
தடாவைச் சேர்ப்பதா இல்லையா என்பதெல்லாம் பிறகுதான் என்று முடிவு செய்துகொண்டேன்.
முன்னதாக, சி.பி.ஐ. குழுவினர் 23ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தபோது, பொதுக்கூட்ட மைதானம் போர்க்களம் மாதிரி இருந்தது.
ஆங்காங்கே எரிந்த மிச்சங்கள். சிதறிய பொருள்கள். குப்பைகள். பதறி ஓடிய மக்களின் காலடித் தடங்கள். எல்லாம் முடிந்துவிட்டதற்கு சாட்சியாக காவலுக்கு இருந்த பொலிசார்.
பதினெட்டுப்பேர் (விபரம் பின்னிணைப்பில் )இறந்திருந்தார்கள். காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்று சரியாகத் தெரியவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மதுரம் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை அளித்திருந்தார். படுகொலை நடவடிக்கை ராஜிவ் உள்ளிட்ட பதினெட்டுப் பேரின் மரணம், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆகியவை மட்டுமே அதில் இருந்தன.
மேல் விவரங்கள் ஏதும் கிடையாது. முன்னதாக, தடய அறிவியல் துறை வல்லுநர் டாக்டர் சந்திரசேகர் சம்பவ இடத்துக்குச் சென்று நிறைய ஆதாரங்களைச் சேகரித்திருந்தார்.
பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் ஆர்.டி. எக்ஸ் என்பது தெரியவந்திருந்தது. தவிரவும் இறந்தவர்கள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய இரும்புக் குண்டுகள் (Pellets), ஒரு ஒன்பது வோல்ட் பேட்டரி, ஒயர் துண்டுகள் என்று கிடைத்தவற்றை வைத்துத் தொகுத்தால், திட்டமிட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதல் மாதிரி தெரிந்தது.
வலுவான தாக்குதல். அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் சென்றோம். அங்கே அரசுப் பொது மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்தார்கள்.
அங்கே ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. முற்றிலும் சிதைந்து போயிருந்த சடலம். பார்க்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். நான்கு உறுப்புகளைத்தான் சற்றே ஒழுங்காக அடையாளம் காண முடிந்தது. தலை. இடது கை. மற்றும் இரு தொடைகள்.
நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். கருகருவென்று நீண்டதலைமுடி. நல்ல கருப்பான அந்தப் பெண், தீயில் மேலும் கருகியிருந்தாள்.
’பார்த்துக்கொண்டே இருந்த இயக்குநர் விஜய் கரன், சட்டென்று, ‘அந்தத் தொடைகளைப் பாருங்கள். இந்த அமைப்பும் இறுக்கமும் கண்டிப்பாக இவள் ஒரு தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்றவள் என்பதைச் சொல்கின்றன’ என்றார். எவ்வளவு உண்மை!
அவளது கருத்த தேகமும் அந்தக் கட்டுறுதியும் அவள் ஒரு தீவிரவாதி அதே சமயம் நிச்சயமாக காஷ்மீர் அல்லது வடகிழக்கு மாகாணப் பெண் அல்ல என்பதை அப்போதே எங்களுக்குச் சொல்லிவிட்டது.
ராஜிவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் சொன்ன விவரங்கள், தடய அறிவியல் துறையினர் தெரிவித்திருந்த விவரங்களுடன் ஒத்துப்போயின. உடலெங்கும் அந்த உலோகத் துண்டுகள் துளைத்திருந்தன.
மூளை சிதறியிருந்தது. கபால எலும்புகள் நொறுங்கியிருந்தன. உடல் பாகங்கள் பெருமளவு சிதைந்துபோயிருந்தன.
சரி, வேறென்ன ஆதாரங்கள்?
ஒரு சினான் கேமரா, சம்பவ இடத்தில் கிடைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் உருப்படியாக உள்ளே ஒன்றுமில்லை என்று முதலில் சொல்லிவிட்டார்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் ப்ரிண்ட் போட வசதியில்லாதபடியால் சுங்குவார் சத்திரத்துக்கு எடுத்துச் சென்று, அங்கும் முடியவில்லை, சென்னைக்குத்தான் கொண்டு போயாகவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.
அந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட கலர் நெகடிவ் சுருளை டாக்டர் சந்திரசேகர் வசம் ஒப்படைத்துவிட்டதாக மேற்கொண்டு விசாரணையைத் தொடர இயலும்.
எங்கே கிடைக்கப் போகிறது? என்ன கிடைக்கப்போகிறது? புரியவில்லை. மறுநாள் (24 மே) ஹிந்து நாளிதழில் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது.
21ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜிவ் வருகை தந்தபோது அவருக்கு மாலையிட நெருங்கியிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் அது. ஆரஞ்சு நிற சல்வார் கம்மீஸ் அணிந்திருந்த பெண்.
அருகே வேறு இரண்டு பெண்களும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தவர்கள். அந்தக் கணம் வரை சிபிசிஐடிக்கே வந்திராத படம், அதற்குள் எப்படி ஹிந்து பத்திரிகைக்குச் சென்றது? குழப்பமும் அதிர்ச்சியுமாக இருந்தது.
நாங்கள் யாரையும் குறிவைக்கத் தொடங்கியிருக்கவில்லை. ஒரு ஈ, எறும்பு மீதுகூட அப்போது சந்தேகம் வந்திருக்கவில்லை.
கொன்றது யார், கொலைக்கான நோக்கம் என்ன, எப்படிச் செய்தார்கள், எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், தனி நபரா, இயக்கமா எதுவும் தெரியாது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்ட மைதானத்தில் ஒரு கேமரா கண்டு எடுக்கப்பட்டிருந்தது.
அது ஓர் ஆதாரமாகுமா? அதுவும் தெரியாது அப்போது. எங்கள் கைக்குக் கிடைத்த கேமராவில் எக்ஸ்போஸ் ஆகாத பிலிம் சுருள் மட்டுமே இருந்தது. அதன் எக்ஸ்போஸ் ஆகியிருந்த பகுதிகள் தனியே கத்திரிக்கப்பட்டு ப்ரிண்ட் போட அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது.
எனவே அந்த கேமராவை மட்டும் வைத்துக்கொண்டு புலன் விசாரணையைத் தொடங்கவேண்டியிருந்தது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கேமராவுக்குரிய பையினுள் ஒரு விசிட்டிங் கார்ட் இருந்தது.
தொடரும்..
கே. ரகோத்தமன்
தொடரும்..
Average Rating