இந்தியாவில் மீண்டும் ஒரு கொடூரம் ! ஒரு தலைக்காதலால் பறிபோன மற்றோர் உயிர்…!!
தமிழகத்தின் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.ரீ. ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுவாதியைக் கொலை செய்த ராம்குமார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
காதலிக்க மறுத்து தோற்றத்தை குறித்து விமர்சனம் செய்ததாலே சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே தெலுங்கானாவிலும் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் ஒருவர் வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சருபாய் என்பவரது மகள் சந்தியா (19). இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மகேஷ் (20), தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சந்தியாவை கடந்த ஓராண்டாக ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால், அவரின் காதலை சந்தியா ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து சந்தியாவைக் காதலிக்கும்படி நச்சரித்து வந்துள்ளார் மகேஷ். இதுகுறித்து மகேஷ் மீது சந்தியா பொஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், சந்தியாவிற்கு அவரது குடும்பத்தினர் வரன் பார்த்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் திட்டமிட்டனர். பக்கத்து வீடான மகேஷுக்கு இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் நேற்று முன்தினம் பகல் காய்கறி வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்குச் சென்ற சந்தியாவிடம் அவர் தன் காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அப்போதும் மகேஷின் காதலை ஏற்க சந்தியா மறுத்துள்ளார். இதன்போது, ‘தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதால், தன் பின்னால் சுற்ற வேண்டாம்’ என்றும் அவர் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், சந்தியாவைப் பின் தொடர்ந்து ‘எனக்கு கிடைக்காத நீ, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியாவின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார்.
சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த சந்தியாவின் தாய் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தலைமறைவாக இருந்த மகேஷைத் தேடிச் சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் மாலை மகேஷ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்துள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரச்சினை எழுந்த போது பொலிஸார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலங்களாக இந்தியாவில் ஒருதலைக்காதலுக்காக பெண்கள் கொலை செய்யப்பட்டு வருகின்ற கொடூரத்தன்மை அதிகரித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
Average Rating