மட்டக்களப்பில் பத்து மணித்தியாலங்கள் காத்திருந்த கற்பிணித் தாய்மாரை திருப்பி அனுப்பிய கொடுமை…!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து இன்று ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற கற்பிணித்தாய்மார்கள் பலரை பத்துமணித்தியாலங்கள் காத்திருக்க வைத்து திருப்பியனுப்பிய கொடுமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, மாவடிவேம்பு, செங்கலடி, கொக்கட்டிச்சோலை, மங்கிகாடு, வந்தாறுமூலை, இலுப்படிச்சேனை போன்ற பல பிரதேசங்களில் இருந்து அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரிகளினால் ஸ்கான் பரிசோதனைக்காக இன்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 30 இற்கும் மேற்பட்ட கற்பிணித்தாய்மார்களை காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை காத்திருக்கச் செய்துவிட்டு வைத்தியர் வரவில்லை என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் இருந்து வந்த பல வறுமையான கர்ப்பிணித்தாய்மார்களுக்கே இந்நிலை நடந்துள்ளது.
இதில் ஒருவர் மங்கிக்காடு பிரதேசத்தில் இருந்து தனது மனைவியை சைக்கிளில் ஏற்றிவந்திருந்ததுடன் அவர் தனது ஒருநாள் கூலி தொழிலை விட்டு விட்டே தனது மனைவியை கூட்டிவந்ததாக கூறினார்.
கொக்கட்டிச்சோலை மற்றும் வாகரையில் இருந்துவந்த பெண்கள் தாங்கள் காலை 6 மணிமுதல் காத்திருப்பதாகவும் உணவு கூட அருந்தாமல் இருந்த தங்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதாகவும் வைத்தியர் வரமாட்டார் என்று முன்னரே கூறி எங்களை அனுப்பியிருந்தால் நாங்கள் வீட்டிற்கு போய் சாப்பிட்டிருப்போம் தானே ஏன் எங்களை இவர்கள் 4மணிவரை காக்கவைத்து அவஸ்த்தைப்பட வைக்க வேண்டும்.
அவர்கள் மட்டும் உணவருந்திவிட்டு வந்தார்கள் எங்களைப்பற்றி கவலைப்படவே இல்லை இது தான் வைத்தியசாலையின் மனிதாபிமானமா கற்பிணித்தாய்மார்கள் நேரத்திற்கு சாப்பிடவேண்டும் என்று கூறுகின்ற வைத்தியர்கள் அவர்களை இப்படி நடத்துவது நியாயமா” என தெரிவித்தார்கள்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் எல்லாம் நன்றாகத்தான் நடக்கின்றது என கூறும் நிர்வாகம் இதற்கு என்ன பதில் சொல்லப்பேகின்றது என பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வைத்தியர் வரவில்லை என்றால் அந்த வைத்தியசாலையில் அந்த துறைசார்ந்த வேறு வைத்தியர் இல்லையா?
இது குறித்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முன்னரே தெரிவிக்காதது ஏன்? பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் கற்பிணித்தாய்மாருக்கு இன்றைய திகதியை வழங்கியது ஏன்? மனிதநேயத்துடன் நோக்கவேண்டிய கற்பிணித்தாய்மார்களை இவ்வாறு அவஸ்தைகளுக்கு உட்படுத்துவதுதான் வைத்தியத்துறையின் ஒழுக்கம்.
இந்த சம்பவமானது தனியார் வைத்தியத்துறையை ஊக்குவிக்கும் திட்டமாகவே அமைந்துள்ளது. “இவ்வாறு நாள்முழுவதும் காத்திருந்து அவஸ்தைப்படுவதை விட நகையை ஈடுவைத்தாவது 3000 ஆயிரம் கட்டி இதே ஐயாட்ட தனியார் வைத்தியசாலையில் ஒருமணித்தியாலத்துக்குள்ள பார்க்கலாம்” என்று கூறியவாறு மனவேதனையுடன் பல கற்பிணித்தாய்மார் வைத்தியசாலையை விட்டு வெளியேறியதை காணமுடிந்தது.
உண்மையில் இவ்வாறு பாதிக்கப்படும் ஒரு கற்பிணித்தாய் எப்படி மீண்டும் வைத்தியசாலைக்கு செல்வாள். அவள் நிச்சயம் இனி தனியார் வைத்தியசாலையையே நாடுவாள். அதற்கான அழுத்தங்களை அரச வைத்தியசாலைகள் கொடுக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.
எனவே இது குறித்து சிலர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் சுகாதார அமைச்சு இது குறித்து விசாரணைகளை நடாத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Average Rating