தேவையேற்படின் வாய் திறப்பேன்: எமில் காந்தன்…!!
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எனக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்று நம்புகின்றனர். இந்தத் தகவல்களினால் எவருக்கு சாதகம், எவருக்குப் பாதகம் போன்ற விவரங்களே இங்கு பேசுபொருளாகின்றன. குறிப்பாக வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் வேளையில், அதனைப் பாதிக்கக்கூடிய விவரங்களைக் கூறுவது பொருத்தமற்றது.
எனினும் அதற்கான நேரமும் தேவையும் கூடிவரும்போது அவற்றை வெளியிடத் தயங்கப்போவதில்லை என்பதை மட்டுமே தற்போதைக்கு என்னால் கூறமுடியும்’ என, எமில் காந்தன் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டதா, ராடா நிறுவனத்தினால் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பன தொடர்பில் முதன்முதலாக ஊடகமொன்றுக்கு எமில் காந்தன் பதில் வழங்கியுள்ளார்.
கே: ராடா (RADA) எனப்படும் மீள் கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக்கான முகவரமைப்புக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
ராடா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டிரான் அலஸுக்கும் எனக்கும் இடையே, குறித்த அந்தக் காலப்பகுதியில் நெருக்கமான வர்த்தகத் தொடர்புகள் காணப்பட்டன.
டிரான் அலஸுடனான சந்திப்புக்களின் போது ராடா தொடர்பிலான விடயங்களும் ஆலோசிக்கப்பட்டமை வேறு சிலருக்கும் தெரிந்துள்ள நிலையிலேயே, ராடா விவகாரத்தில் என்னுடைய பெயரும் பயன்படுத்தப்படுகிறது.
கே: ராடா நிறுவனத்துக்குள் நீங்கள் இல்லை என்கிறீர்கள். அப்படியென்றால் அந்நிறுவனத்தின் கூட்டங்களில் நீங்கள் எவ்வாறு கலந்து கொண்டீர்கள்?
ராடா நிறுவனத்தின் எந்தவித உத்தியோகபூர்வக் கூட்டங்களிலும் நான் கலந்து கொள்ளவில்லை என்பதனைக் கூட்டக் குறிப்புகள் மூலம் எவரும் இலகுவில் அறிந்து கொள்ள முடியும்.
எனினும் பல்வேறு தேவைகள் கருதி, பல்வேறு இடங்களிலும் என்னை அடிக்கடி டிரான் அலஸ் சந்தித்துள்ளார். ராடா தொடர்பிலும் ஆலோசித்துள்ளார். அதனை அடிப்படையாக வைத்தே இந்த விவகாரத்திலும் எனது பெயர் இணைத்துப் பேசப்படுகிறது.
கே: அப்படியென்றால், ராடா நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட டிரான் அலஸுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
நான் ஏற்கெனவே கூறியுள்ளது போலவே, டிரான் அலஸ் என்பவர் அடிப்படையில் ஒரு வர்த்தகப் பிரமுகர் என்ற வகையில், வர்த்தக நண்பராக அறிமுகமான அவருடன் எனக்கு பலவித வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. அதனை எந்த நோக்கத்துக்காகவும் எப்போதும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.
கே: சுனாமி வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு என்ன காரணம்?
சுனாமி வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் டிரான் அலஸ் உள்ளிட்டவர்களுடன் நான் கலந்துரையாடியுள்ள போதிலும், அது தொடர்பிலான அதிகாரபூர்வ நிலைப்பாட்டினை மேற்கொள்ளும் நிலையில் நான் இருக்கவில்லை.
எனவே, அதன் செயலாக்கம் தொடர்பில் அதனை மேற்கொண்ட ராடா நிறுவனத்திடம், அல்லது அதனைக் கையாண்ட அரசாங்க பிரமுகர்களிடம், அல்லது அதனை நிறைவேற்றும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர்களிடம் கேட்பதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
கே: அன்றைய சூழலில் அரசுடனான நெருக்கம் அதிகமாகவே உங்களுக்கு இருந்திருக்கிறது. அப்படியிருக்கையில் சுனாமி வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக ஏன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?
அரசாங்கப் பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த போதிலும், குறித்த இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரபூர்வமான அழுத்தங்களை வெளிப்படுத்தும் தகுதி நிலையில் நான் இருக்கவில்லை.
கே: 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்காக உங்களூடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி பரிமாறப்பட்டதா? அல்லது உங்களூடாக பேச்சுக்கள் ஏதும் இடம்பெற்றனவா?
மஹிந்தவிடம் இருந்து நிதியைப் பெற்றுப் போராட வேண்டிய நிலையிலா புலிகள் இருந்தார்கள்? அல்லது மஹிந்தவிடம் நிதியைப் பெற புலிகள் தயாராக இருந்திருப்பார்களா? போன்ற பொதுவான வினாக்களுக்குப் பெருமளவானோருக்கு இலகுவாகவே விடை தெரிந்திருக்கும்.
எனினும் அரசாங்கத் தரப்பில் வௌ;வேறு மட்டங்களில் இருந்தோர் தமது அரசியல் வெற்றியை மையமாகக் கொண்டு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். எனினும் அவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் இது அல்ல என்று கருதுகிறேன்.
கே: அப்படியாயின் வேறு வகையிலான பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகக் கூற வருகிறீர்களா? பணப் பரிமாற்றம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அன்றைய காலகட்டத்தில் அரசாங்க, அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்கள் பல, விடுதலைப் புலிகளின் உப பிரிவுகளால் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
அவற்றுக்கான நிதிப் பரிமாற்றங்கள் அந்தந்தத் திட்டங்களின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கக்கூடும். அவற்றில் ஒரு சாராரின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடுகளும் இடம்பெற்றிருக்கக் கூடும்.
எனினும் குறிப்பாக ஓரிரு திட்டங்கள் தொடர்பிலான விடயங்களை, அதிலும் குறிப்பாக சில விடயங்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், தற்போது வெளியிடுவது பொருத்தமற்றதாக இருக்கும் என்பதையே கூற விரும்புகிறேன்.
கே: இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் எவ்வாறு குற்றவாளியானீர்கள்?
குறித்த இந்த விவகாரத்தில் எந்த இடத்திலும் நான் குற்றவாளியாகக் கூறப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் கூறப்படும் சில சம்பவங்களில் சாட்சியாக சிலர் எனது பெயரையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை.
சாட்சியாளராக என்னைக் குறிப்பிட்டுள்ளமையால் குற்றவாளி எனப் பலரும் நினைக்கின்றனர்.
கே: அப்படியென்றால் சாட்சிக்கான விடயங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
குறித்த அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எனக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்ற வகையிலேயே, இந்த விவகாரத்திலும் எனது பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு எனக்கு ஏதாவது தெரியுமா? அப்படியானால் அவை என்ன? அவற்றால் எவருக்குச் சாதகம், எவருக்குப் பாதகம் போன்ற விவரங்களே இங்கு பேசுபொருளாகின்றன.
குறிப்பாக வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் வேளையில், அதனைப் பாதிக்கக்கூடிய விவரங்களை இவ்விடத்தில் கூறுவது பொருத்தமற்றது.
எனினும் அதற்கான நேரமும் தேவையும் கூடிவரும்போது அவற்றை வெளியிடத் தயங்கப்போவதில்லை என்பதை மட்டுமே தற்போதைக்கு என்னால் கூறமுடியும்.
கே: புலிகளுடன் உங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்றாலும் 1997ஆம் ஆண்டு, புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதானீர்களே?
கடந்த சுமார் 30 ஆண்டுகால இலங்கை வரலாற்றில், புலிகளுடன் அல்லது போராட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தமிழர்கள் கைதாவதற்குக் காத்திரமான காரணங்கள் இருந்திருக்க வேண்டியதில்லை என்பதே உண்மை. அந்தவகையிலேயே என்னுடைய கைதும் இடம்பெற்றது. எனினும் பின்னர் மேல் நீதிமன்றமே என்னை விடுதலை செய்துள்ளது.
கே: எதற்காக இன்டர்போல் உங்களைத் தேடியது?
இலங்கையில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றில், வழக்கு வேறு ஒரு நீதிமன்றுக்கு மாறிய விடயம் எனது தரப்பு வழக்கறிஞர்களுக்குச் சரியான முறையில் தெரிய வரவில்லை. அதனால் குறித்த காலப்பகுதியில் அவர்கள் மன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்தப் பிடியாணையின் அடிப்படையில் இன்டர்போலுக்கும் அறிவிக்கப்பட்டு, இன்டர்போலின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
கே: தற்போது நடைபெறும் நீதிமன்ற விசாரணைகளில் ஏன் நீங்கள் கலந்து கொள்ளவில்லை?
நான் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை என்ற போதிலும், என் சார்பில் எனது தரப்பு வழக்குரைஞர்கள் நீதிமன்றில் முன்னிலையாகி வருகின்றனர்.
கே: இலங்கைக்கு எப்போது வருவீர்கள்?
இலங்கையில் சுதந்திரமாகத் தங்கியிருப்பதும், சுயாதீனமாகச் செயற்படுவதும் முடியாமல் இருந்த காலப்பகுதியில், தவிர்க்க முடியாத காரணத்தினால் இலங்கைக்கு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்ட போதிலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவரும் நிலையில், எவ்வேளையிலும் நான் இலங்கைக்கு வருவதில் சிக்கல் இருக்காது என்றே நம்புகிறேன்.
கே: தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் எவை?
கடந்த காலங்களில் இலங்கையில் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் எதிர்நோக்கிய பிரச்சினைகளையே தவிர்க்க முடியாத காரணங்கள் எனக் கூறியுள்ளேன்.
பிரதானமாக உயிருக்கான உத்தரவாதம் உட்பட, ஜனநாயக ரீதியான அணுகுமுறைக்கான இடைவெளி குறைந்திருந்தமையை குறிப்பிட முடியும்.
கே: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பிருக்கிறது உங்களுக்கு. இறுதி யுத்த காலத்தில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இறுதிப் போர் இடம்பெற்ற காலகட்டங்களில் நான் இலங்கையில் இருந்தவன் இல்லை என்பதனால், போர்க்குற்றங்கள் தொடர்பிலான நேரடி சாட்சியமாக நான் இருக்க முடியாது.
கே: நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸுடன் உங்களுக்கு என்ன முரண்பாடு?
டக்ளஸுக்கும் எனக்கும் எப்போது முரண்பாடு ஏற்பட்டதாகக் கருதுகிறீர்கள்?
கே: அப்படியென்றால் எதற்காக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது?
டக்ளஸ் மீதான தாக்குதல் ஒன்று இடம்பெற்ற வேளையில், நானும் குறித்த அந்தப் பகுதியில் இருந்ததை அடிப்படையாக வைத்து, அந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் சந்தேகநபராக எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
கே: சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்கள் உங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இவற்றுக்கு உங்களின் பதில் என்ன?
அந்தந்தக் காலப்பகுதியில் அந்தந்த அரசியல் தலைமைகளுடன் இணைந்தும் பிரிந்தும் இருப்பவர்கள், அந்தந்தக் காலப்பகுதியில் ஏற்படும் தேவைகளுக்கேற்ப பாராட்டுகளையும் குற்றச்சாட்டுகளையும் வெளியிடுவது வழமையே.
அவ்வாறே ராடா குறித்த விவகாரம் முக்கியத்துவம் பெறும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏனையவர்களது பெயர்களைப் போலவே எனது பெயரும் இலாவகமாகக் கையாளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் முதன்முதலாக 2007ஆம் ஆண்டில் என்ன கூறப்பட்டதோ, அதே விடயங்களே திரும்பத் திரும்ப மீட்கப்படுகின்ற போதிலும், காலத்துக்கு ஏற்றாற்போல ஒரு சிலர் மாறுபட்ட விளக்கங்களைக் கூற முன்வருகின்றனர்.
எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எனது தரப்பு நிலைப்பாட்டை உரியகாலம் வரும்போது தெரிவிக்கக் காத்திருக்கிறேன்.
கே: தற்போதைய நல்லாட்சி அரசுக்கும் உங்களுக்கும் எவ்வாறான சம்பந்தம் இருக்கிறது?
தற்போதைய நல்லாட்சி அரசு என்பது மட்டுமின்றி, பொதுவாகவே இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் எனக்குத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன.
அவற்றில் சிலவற்றை ஊடகங்களும் அவ்வப்போது வெளியிட்டுள்ளன. அந்தவகையில் தற்போதும் அதேமாதிரியான ஆரோக்கியமான தொடர்புகளை நான் தொடர்ந்து பேணி வருகின்றேன்.
Average Rating