சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர்
சென்னை: சுவாதி கொலை சம்பவத்தில் ராம்குமாருக்கு யாரும் உடந்தை கிடையாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.
சுவாதி கொலை தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சென்னையில் காலை 11.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் கமிஷனர் ராஜேந்திரன்.
கமிஷனர் கூறியதாவது: சுவாதி கொலையாளியின் சிசிடிவி புகைப்படத்தை வைத்து சென்னையின் பல பகுதிகளில் போலீசார் விசாரித்தனர்.
சுவாதி தினசரி பயணிக்கும் இடங்களுக்கும் போலீசார் சென்று விசாரித்தனர். விசாரணையின்போது, பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து போலீசாருக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன.
சுவாதி குடும்பத்தாரும் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். சோகமான நிலையிலும் கூட போலீசாருக்கு, சுவாதி பெற்றோரும், குடும்பத்தாரும் ஒத்துழைத்ததற்கு நன்றி.
பல கோணங்களில் நடந்த விசாரணையினால் குற்றவாளி யார் என்பது தெரிய வந்தது. குற்றவாளி பற்றி அடையாளம் தெரிந்ததும், அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை உறுதி செய்து கொண்டு, கொலையாளியை பிடிக்க நெல்லை காவல்துறை உதவியை அணுகினோம்.
இதையடுத்து, நெல்லை போலீசார் ராம்குமாரை கைது செய்ய உதவினர். காவல்துறையினர் நெருங்கிய போது ராம்குமார் வீட்டின் பின்னால் மறைந்திருந்தார்.
போலீசாரை பார்த்ததும் அவர்களை பயமுறுத்தும் நோக்கத்தில் ராம்குமார் கூரிய ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
நெல்லை மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சென்னையிலிருந்து சிறப்பு விசாரணை குழு நெல்லை சென்று விசாரணையை தொடங்கியுள்ளது.
புலன் விசாரணைக்கு உதவி செய்த பொதுமக்கள், சுவாதியின் பெற்றோர் மற்றும் மீடியாக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
பொதுமக்கள் அச்சத்தை போக்குவதற்காக சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கொலையாளியை விரைந்து கைது செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன்பிறகு, நிருபர்கள் மடக்கி மடக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு நழுவியபடியே பதிலளித்தார் கமிஷனர்.
அதுகுறித்த விவரம்: சுவாதி வேலைக்கு செல்லும் நேரங்களில் ராம்குமார் பின் தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். இது சிலகாலமாகவே நடந்து வந்துள்ளது.
அதேநேரம், கொலைக்கான காரணம் குறித்து இப்போது முழுமையாக கூற முடியாது.
சிகிச்சை முடிந்து, நெல்லை டாக்டர்கள் அனுமதியளித்த பிறகே ராம்குமார் சென்னை அழைத்து வரப்படுவார்.
சுவாதி கொலையில் ராம்குமாருக்கு உடந்தையாக யாரும் செயல்படவில்லை. அவர் மட்டுமே கொலைக்கு பொறுப்பாளி.
ராம்குமாருக்கு கொலையிலுள்ள நேரடி தொடர்பு பற்றிய ஆதாரங்களை இப்போது வெளியிடமுடியாது.
மீடியாக்கள் தயவு செய்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
குற்றவாளியின், அடையாள அணிவகுப்பு முடியாமல் குற்றவாளியின் போட்டோவையும் காவல்துறை தற்போது வெளியிட முடியாது. இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.
Average Rating