‘கச்சதீவு’: சிறிமாவோவின் இராஜதந்திர வெற்றி…!!
அல்ஃப்றட் துரையப்பாவின் படுகொலைக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்காத தமிழரசுக் கட்சித் தலைமைகள், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்ததாகவே பலரும் கருதினர்.
குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் ‘தளபதி’ என்றறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இந்த ஆயுதக் குழு இளைஞர்களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார் என்று, அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், எந்த ஆயுதக்குழுவோடு அவர் தொடர்புபட்டார் எனப் பேசப்பட்டதோ, அதே குழுவினரால் 1989ஆம் ஆண்டு அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான் வரலாறு. அல்ஃப்றட் துரையப்பாவில் தொடங்கிய தமிழர் அரசியல் படுகொலை வரலாறு, பின்னர் நீண்டு விரிந்தது.
இந்த அனைத்துப் படுகொலைகளுக்குப் பின்னும் சில பல நியாயங்கள் சொல்லப்பட்டன. இவற்றை ஏற்போரும் உள்ளனர், மறுப்போரும் உள்ளனர். இந்த நியாய அநியாயங்களை ஆராய்வது இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமல்ல, மாறாக இந்த ஒவ்வொரு சம்பவங்களும் தமிழ் மக்கள், தமது அபிலாஷைகளை நோக்கிய அரசியல் பயணத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தின என்பதை மட்டும் நாம் கருத்திற்கொள்வோம். அல்ஃப்றட் துரையப்பா, தமிழினத் துரோகியா என்ற கேள்விக்கு பதிலளிக்க முயலும் பல விமர்சகர்களும் அதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை என்றே கருதுகின்றனர்.
தமிழரசுக் கட்சியினுடைய வெறுப்புப் பிரசாரத்தின் பலிகடாவாகவே, அல்‡ப்றட் துரையப்பா ஆக்கப்பட்டார். ஒவ்வொரு காலத்திலும், தமக்கான வெறுப்புப் பிரசார பலிகடாக்களாக சிலரை தமிழரசுக்கட்சி பயன்படுத்தியிருக்கிறது. ஆரம்பகாலத்தில், ஜீ.ஜீ.பொன்னம்பலம் மீது கடும் வெறுப்புப் பிரசாரத்தை தமிழரசுக்கட்சி கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதன் பின்னர், அல்‡ப்றட் துரையப்பா, செல்லையா குமாரசூரியர் ஆகியோர் மீது இந்த வெறுப்புப் பிரசாரம் திருப்பிவிடப்பட்டது. ‘
தமிழினத்துரோகி’ முத்திரைகுத்தி, கடுமையான வெறுப்புப் பிரசாரத்தை கட்டவிழ்த்துவிடும், இந்தத் தந்திரோபாயம் அவர்கள் கொண்டிருந்த திறமையான பேச்சாளர்களின் உணர்ச்சிமிகு பேச்சுக்களால் சாத்தியமாக்கப்பட்டது. உணர்ச்சி நரம்புகளைக் கிளர்ச்சிபெறச் செய்யும் பேச்சுக்கள் இளைஞர்களை அவர்கள்பால் ஈர்த்தது. தனித் ‘தமிழீழம்’ சாத்தியம் என்ற எண்ணத்தை, இளைஞர்களிடையே தமது மெய்கூச்செறியும் பேச்சுக்களால் விதைத்தார்கள், விதைத்துக்கொண்டிருந்தார்கள்.
கச்சதீவு விவகாரம் இன்றுவரை, இந்தியாவின் தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் ‘கச்சதீவு’, சிறிமாவோவின் காலத்திலேயே இலங்கைக்குச் சொந்தமானது என இந்திரா காந்தியால் ஒப்பந்தம் மூலம் அங்கிகரிக்கப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க உள்நாட்டு நிர்வாகத்தில், அதிலும் குறிப்பாக இனங்களுக்கிடையேயான உறவுகளில் மாபெரும் தவறுகளை இழைத்திருப்பினும், சர்வதேச அரசியலில் அவரது செயற்பாடுகள் வித்தியாசமானதாக இருந்தன. சிறிமாவோ பற்றிக் குறிப்பிடும் ப்ரட்மன் வீரக்கோன், சிறிமாவோ- சர்வதேச விவகாரங்களில், இராஜதந்திர நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டதாகக் கூறுகிறார்.
முன்னிருந்த பிரதமர்கள் எவரையும்விட சிறிமாவோ, சர்வதேச உறவுகளில் அதிலும் குறிப்பாக அணிசேரா நாடுகள், சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளைக்கொண்டிருந்ததாக ப்ரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார்.
கச்சதீவு என்பது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடுவே உள்ள ஏறக்குறைய, 285 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஒரு தீவாகும். அந்நியர் ஆட்சிக்கு முன்பதான காலப்பகுதியில் கச்சதீவானது, இராமநாதபுர அரசுரக்குச் சொந்தமானதாக இருந்தது என்று இந்திய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஜமீன்கள் ஒழிக்கப்பட்ட பின்னர், அது மதராஸ் ப்ரெஸிடென்ஸியின் ஓர் அங்கமாகியது என்பது அவர்களது கருத்து.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு கச்சதீவானது ஒரு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இருந்தது. மீனவர்கள் ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காயவிடவும் கச்சதீவைப் பயன்படுத்தியதாக வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. அத்தோடு, இத்தீவிலே ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளிலுமிருந்தும் இந்த அந்தோனியார் தேவாலய உற்சவத்துக்கு ஆட்கள் சென்று வருதல், நூறாண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமாக இருக்கிறது. இங்கு செல்வதற்கு இலங்கை கடவுச்சீட்டோ, இந்தியக் கடவுச்சீட்டோ, எவ்விதமான அனுமதியோ இரு நாட்டினருக்கும் தேவையில்லை. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளாலும் கச்சதீவு நிர்வகிக்கப்பட்டாலும், இரண்டுமே பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்தமையினால் பெரும்சிக்கல்கள் எதுவும் எழவில்லை.
ஆயினும், 1921ஆம் ஆண்டு முதலே இலங்கை கச்சதீவுமீதான உரிமையைக் கோரி வந்திருக்கிறது. இந்நிலையில், ஜூன் 1974லே இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்தியத் தலைநகர் டெல்லிக்கு விஜயம் செய்து, பாரதப் பிரதமர் இந்திரா காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏற்கெனவே, ஜனவரி 1974லே டெல்லி சென்ற பிரதமர் சிறிமாவோ, இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை தொடர்பாக தனது முன்னைய ஆட்சிக்காலத்தின் போது, அன்றைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரியுடன் செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கம் பெற்று வந்திருந்தார்.
மீண்டும் 1974 ஜூனிலே டெல்லிக்கு விஜயம் செய்த பிரதமர் சிறிமாவோ, பாரதப் பிரதமர் இந்திரா காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, நீண்டகாலமாக இருநாடுகளும் உரிமைகோரிவந்த கச்சதீவானது இலங்கைக்குச் சொந்தமானது என்பதை நிபந்தனையுடன் இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்.
இந்த 28 ஜூன் 1974 அன்று கைச்சாத்திடப்பட்ட இருநாடுகளுக்குமிடையிலான கடல் எல்லை பற்றிய ஒப்பந்தத்தின் படி, கச்சதீவில் தங்கும், அப்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு உண்டு என்ற நிபந்தனையின் பெயரில், கச்சதீவு மீதான இலங்கையின் உரிமையை பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். இலங்கையைப் பொறுத்தவரை, இது மாபெரும் இராஜதந்திர வெற்றியாகும். இதனைச் சாதிக்க சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் இந்திரா காந்தி ஆகியோரிடையே இருந்த நட்பு ஒரு முக்கிய காரணம் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சூரியநாரணயணன். அவர் மேலும் கூறுகையில், இது ஒரு சட்டரீதியான ஒப்பந்தம் அல்ல மாறாக நட்பினால் விளைந்த அரசியல் ஒப்பந்தம் என்கிறார்.
மீண்டும், 23 மார்ச் 1976இல் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கடல் எல்லையைத் தீர்மானிக்கும் இன்னொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா மற்றும் வங்கப் பெருங்கடல் ஆகியவற்றில், இரு நாடுகளுக்குமிடையிலான கடல் எல்லைகளைத் தீர்மானித்த இந்த ஒப்பந்தத்தின்படி, கச்சதீவு முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான பிரதேசமாகியது. இந்திய மீனவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமைகள் கூட இந்த கடல் எல்லைத் தீர்மானத்தின் பின் இல்லாமற்போனது.
ஏனெனில், இந்த ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு மீனவர்களும் தத்தமது எல்லைகளுக்குள் மீன்பிடிக்க வேண்டும் என்று இணங்கப்பட்டதோடு, கச்சதீவானது இலங்கைக்குரித்தான கடல் எல்லைக்குட்பட்டது என இணங்கப்பட்டது. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களின் படி, சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் கச்சதீவானது இந்தியாவின் இணக்கப்பாட்டோடு இலங்கைக்குச் சொந்தமானதாக அங்கிகரிக்கப்பட்டது.
ஆனால், இது சட்ட விரோதமானது, பிரதமர் இந்திரா காந்தியால் ஒப்பந்தம் செய்து இந்தியாவின் நிலப்பரப்பை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க முடியாது என இந்திய சட்டவல்லுனர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டபோது, அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இதற்கெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2008ஆம் ஆண்டிலே அன்றைய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய தமிழ்நாட்டு முதல்வருமான ஜெயலலிதா இந்திய உச்சநீதிமன்றத்திலே கச்சதீவு பற்றி, பிரதமர் இந்திராகாந்தி செய்த 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது என்று அறிவிக்க வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது. அதாவது இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பு ஒன்றை இன்னொரு நாட்டுக்கு வழங்குவதாயின், அல்லது விட்டுக்கொடுப்பதாயின் இந்திய அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும், அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதனை அங்கிகரிக்கவேண்டும். இதனைத் தவிர்க்கும் முகமாக, இந்திராகாந்தி தலைமையிலான அரசாங்கம், கச்சதீவை இந்தியாவுக்குரிய பிரதேசம் என்று கருதாது ‘சர்ச்சைக்குரிய பிரதேசம்’ என்று கருதியது. அந்த ‘சர்ச்சைக்குரிய பிரதேசம்’ இலங்கைக்குரியது என இணங்கப்பட்டது என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. ஆனால், இதனை எதிர்ப்பவர்களது நிலைப்பாடானது கச்சதீவானது இந்தியாவுக்குரிய நிலப்பரப்பாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதனை இலங்கைக்கு ஒப்பந்தம் போட்டு விட்டுக் கொடுத்தமையானது சட்டவிரோதம் என்பதாகும்.
இன்றுவரை இந்த சர்ச்சை, குறிப்பாக தமிழ்நாட்டரசியலில் முக்கியத்துவம் பெற்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் சிறிமாவோ பண்டாராநாயக்கவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மையினருக்கெதிரான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல.
இலங்கையின் இன்னொரு முக்கிய சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களும் இன்னல்களை எதிர்கொண்டனர். 1972லேயே, கொம்பனித்தெரு பள்ளிவாசல், காடையர்களின் தாக்குதலுக்குள்ளானது. 1975ஆம் ஆண்டு மஹியங்கனைக்கு அருகிலிருந்த பண்டாரகம என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்களின் 61 வீடுகளும், 7 கடைகளும் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
1976இன் ஆரம்பப் பகுதியில், கம்பளை, பாணந்துறை, நிக்கவெரட்டிய உட்பட முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்த ஏறத்தாழ 40 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. 1976 பெப்ரவரி மாதம், புத்தளத்தில் பொலிஸாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 200 வீடுகள், 50 கடைகள், இரண்டு தென்னந்தும்புத் தொழிற்சாலைகள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன.
அத்தோடு, இரண்டு பள்ளிவாசல்களும் தீக்கிரையாக்கப்பட்டன. எப்படி தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் கட்டவிழ்த்து விட்ட வன்முறை தொடர்பில், சிறிமாவோ அரசாங்கம் விசாரணை செய்ய மறுத்ததோ, அதே போன்று 1976 புத்தளம் பொலிஸ் வன்முறைகள் பற்றியும் சிறிமாவோ அரசாங்கம் விசாரணையொன்றை மேற்கொள்ளாது, மெத்தனப்போக்கைக் கையாண்டது. அன்றைய நிலையில் இலங்கைப் பொலிஸ் சேவையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 90 சதவீதமானவர்கள் சிங்களவர்களாகவே இருந்தனர். முப்படைகளிலும் இதுவே நிலைமை.
தெற்கிலே மாறிக்கொண்டிருந்த களநிலமைகள் வடக்கு – கிழக்கிலே தமிழரசுக்கட்சியும் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணியும், சிறிமாவோ அரசாங்கத்துக்குப் பெரும்சவாலாக விளங்கிய நிலையில், தெற்கிலே டட்லி சேனநாயக்கவின் மறைவுக்கு பின், 1973 ஏப்ரலில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக பதவியேற்றிருந்த ஜே.ஆர் என்றறியப்பட்ட ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தன, சிறிமாவோ அரசாங்கத்துக்குக் கடும் சவாலைத் தரத் தொடங்கினார். டட்லி சேனநாயக்கவைப் போன்று அடக்கிவாசிக்கும் தலைவராக ஜே.ஆர் இருக்கவில்லை. ஜே.ஆரிடம் எப்போதும் ஒரு தீவிரத்தன்மை இருந்தது. பதவியை அடைவதற்கான தாகம் இருந்தது.
அந்தப் பதவியை அடைவதற்காக எதையும் செய்யக்கூடிய துணிவும் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து, சிறிமாவோ அரசாங்கம் மீது கடும் விமர்சனங்களை ஜே.ஆர். முன்வைத்தார். அன்றைய சிறிமாவோ அரசாங்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. சிறிமாவின் மூத்த மகளான சுனேத்ரா பண்டாரநாயக்க, பிரதமர் சிறிமாவின் இணைப்புச் செயலாளராக இருந்தார். அவருடைய அன்றைய கணவரான குமார் ரூபசிங்க, தேசிய இளைஞர் பேரவையில் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் ‘ஜயவேகய’ என்ற வாரப் பத்திரிகையையும் நடத்தினார். சிறிமாவோவின் மற்றொரு மகளான சந்திரிகா பண்டாரநாயக்க, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவில் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
சிறிமாவின் மகனான அநுர பண்டாரநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்ததுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பத்திரிகையான ‘சிங்ஹலே’ அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
1974 மார்ச்சிலே நாடாளுமன்றத்தில் பேசிய ஜே.ஆர்.ஜெயவர்தன ‘இந்தநாட்டின் உண்மையான அரசாங்கமானது, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் அவரது மகள் மற்றும் மருமகனையும் அவர்களது வால்களையும் கொண்டமைந்துள்ளது’ என சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடும்பத்தினர் பதவிகளில் நியமிக்கப்பட்டு அரச இயந்திரத்தை தமது கரங்களில் வைத்திருக்கும் குடும்ப ஆட்சியைத் தாக்கிப் பேசினார். எப்பாடு பட்டேனும் 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் ஜே.ஆர் உத்வேகத்துடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
Average Rating