பஸ் உரிமையாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது…!!
வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்களினால் இன்று 27.06.2016 மாகாணம் தழுவிய பணிப்பகிஸ்கரிப்பு இருவேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளபட்டது அவையாவன:
தனியார் பேருந்து உரிமையாளர் ஒன்றியத்திற்கும், இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட 60:40 எனும் நேர அட்டவணை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் பொதுவான பஸ்நிலைய தரிப்பிடத்தில் இருந்து சேவையை வழங்க வேண்டும்.
இச்சூழ்நிலையில் வடமாகாண போக்குவரத்துக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் கௌரவ ஆளுநரின் அலுவலகத்தில் மதியம் 12.30 மணியளவில் விசேட கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். இக்கூட்டத்தில் கௌரவ ஆளுநர், அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர், நிருவாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்போது வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர் சி.சிவபரன் அவர்களினால் கௌரவ ஆளுநருக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்படி தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது என ஏற்றுக்கொண்டதோடு, நியதிச்சட்டத்தினை கௌரவ ஆளுநர் அவர்கள் இரண்டு வாரத்திற்குள் அனுமதித்து தருவதாகவும் அவ்வாறு அனுமதித்து தரும்பட்சத்தில் தங்களது இணைந்த நேர அட்டவணை அமுலாக்க கோரிக்கையானது மிகவிரைவாக அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார் அத்தோடு ஒழுங்கு விதிகளை மீறுபவர்கள் எவராயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அதற்கான நேரம் தற்பொழுது கை கூடியுள்ளது எனவும் தெரிவித்திருகின்றார்.
மேலும் அங்கு உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் குறித்த நியதிச்சட்டத்தை இரண்டு வாரத்தினுள் அனுமதித்து தருவதாகவும் தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் கூறியதோடு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் பயணிகளுக்கு பற்றுசீட்டு வழங்குதல், சாரதி மற்றும் நடத்துனருக்கான சீருடை மற்றும் வீதி ஒழுங்குகளை கடைபிடித்தல் போன்ற விடயங்களில் அதிகூடிய அக்கறை செலுத்துமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இப்பிரச்சனையானது வடமாகணத்தில் மட்டுமல்ல இலங்கையின் எல்லா பாகங்களிலும் காணப்படுவதாகவும் இதனை சீர் செய்வது பலத்த சவாலுக்கு உட்பட்டதெனவும் கூறியதோடு, வடமாகாணத்துக்கு இவ்விடயம் தொடர்பில் அர்ப்பணிப்போடும் துடிதுடிப்போடும் செயற்படும் அமைச்சர் ஒருவர் உங்களுக்கு கிடைத்திருக்கின்றார் எனவும் அவரது முயற்சி மிகவிரைவாக வெற்றியளிக்கும் எனவும் அவ்வாறு வெற்றியளிக்கும் பட்ச்சத்தில் அது எமது நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு ஓர் முன்னுதாரணமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருகின்றார்.
இதன்பின்னர் தனியார் பேருந்து உரிமையாளர் ஒன்ரியத்தின் தலைவர் அவர்கள் கௌரவ ஆளுனரினதும் அமைச்சரினதும் கருத்துக்களை தான் மதிப்பதாகவும் விரைவில் இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்திதருமாறும் தங்களது வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிடுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
Average Rating