நொண்டிக் குதிரைகள்…!!

Read Time:15 Minute, 14 Second

article_1466827886-TM600மலையகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் ‘சுமைதாங்கிக் கல்’ இருக்கும். நகர்புறங்களுக்குச் சென்று வாங்கும் பொருட்களை மூடையாய்க் கட்டி, தலையில் சுமந்து வருகின்றவர்கள், அந்தச் சுமைதாங்கியின் மேல் மூடையை வைத்துவிட்டு இளைப்பாறியதன் பின்னர், அவ்விடத்திலிருந்து வீட்டை நோக்கி நடப்பர்.

எனினும், நிறைமாதமாய் இருக்கின்ற கர்ப்பிணிப் பெண் திடீரென இறந்துவிட்டால், அப்பெண்ணின் நினைவாகவே சுமைதாங்கிக் கல், ஊர் எல்லையிலுள்ள ஒரு முச்சந்தியில் அமைக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியது இன்னுமே ஞாபகத்தில் இருக்கின்றது. அந்தச் சுமைதாங்கிக் கல், பெரும்பாலும் ஊர் (தோட்டத்தின்) எல்லையிலேயே இருக்கும். பிறிதொரு தோட்டத்துக்குச் சென்று, விறகுகளைச் சேகரிப்பவர்கள், சுமைதாங்கிக் கல்லிருக்கும் சந்தியைக் கடக்கவேண்டி ஏற்பட்டால், அக்கல்லின் மீது சுமையை இறக்கிவைத்துவிட்டு, இளைப்பாறியதன் பின்னரே நடையைக் கட்டுவர்.

அவ்வாறு நடைபயின்றோருக்கு, ஐந்து வருடங்களுக்கு ஒருதடவை சுண்டுவிரலுக்கு மையைப் பூசிக்கொள்ளும் மலையக மக்களுக்கு, தங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து கொள்வதில் இன்னுமே விளக்கமில்லாமல் இருப்பதுதான் வெட்கக்கேடான கதையாக இருக்கின்றது. தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைப்பதற்காக, அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவிகளுக்காகவும் வரப்பிரசாதங்களுக்காகவும் ‘மை காயும் முன் விபசார அரசியல்’ செய்வோரே இன்னுமிருக்கின்றனர்.

ஆட்சியை அமைக்கும் மிகப்பெரும் சக்தியாகத் திகழ்ந்த மலையகக் கட்சிகள், பேரம் பேசும் சக்தியை இழந்து, இன்று சின்னாபின்னமாகி, சீரழிந்து வாய்ச்சண்டை இட்டுக்கொண்டிருக்கின்றன. அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் பெரியசாமி சந்திரசேகரனுக்கு பின்னர், மழைக்கு முளைக்கும் காளான்கள் போல மலையகத்தில் கட்சிகள் முளைத்துவிட்டன.

ஆகையால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் மலையக மக்கள் முன்னணியும், ஆட்சிபீடம் ஏறுகின்ற பிரதான கட்சிகளுக்கு செல்லாக்காசாகி, பலவருடங்கள் ஆகிவிட்டன. இரு கட்சிகளுக்கும் போட்டியாக வேர்விட்ட கட்சிகள், மலையக அரசியலில் தற்போது சுடர்விட்டுக்கொண்டிருக்கின்றன.

அது தமிழ் முற்போக்குக் கூட்டணி வரையிலும் கொண்டுவந்துவிட்டுவிட்டது. அதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் கையாலாகாத தனம் மற்றும் அவற்றின் மீதான மக்களின் வெறுப்புக்களே காரணமாகும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல, பொதுத்தேர்தலும் நாட்டுக்கு எவ்வாறு முக்கியமானதாக இருந்ததோ, அதேபோல மலையகத்துக்கும் மிக முக்கியமானதாகவே இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை வெற்றியடையச் செய்த மலையக மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் மலையகத்திலிருந்து, தமிழ்ப் பிரிதிநிதிகள் 9 பேரைத் தெரிவுசெய்தனர். அதில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆறுபேரும் காங்கிரஸுக்கு இருவரும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருவரும் கிடைத்தனர்.

அதில், திகாவும் மனோவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சராக இராதாகிருஷ்ணனும் இருக்கின்றார். இவ்வாறானதொரு நிலையில், கடந்த காலங்களில் ஆட்சியமைத்த அரசாங்கங்களுடன் ஒட்டி உறவாடி, சுகபோகங்களை அனுபவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய அரசாங்கத்திலும் இணைந்துகொள்ளவுள்ளதாக வெளியான தகவலையடுத்து மலையக அரசியலும் சூடுபிடித்துள்ளது. அரசியலில் கொட்டை போட்டதாகக் கூறப்படும் ஆறுமுகன் தொண்டமான், அரசியல் சாணக்கியம் உள்ளவர்.

அவருக்கு, எதனை எப்போது செய்யவேண்டும் என்று நன்றாகத் தெரியுமென காங்கிரஸ் தரப்பு வாதிடுகிறது. அவ்வாறு சாணக்கியம் உள்ளவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தை முறையாகக் கையாண்டு தீர்த்துவைத்து, வேலைப்பளு மற்றும் செலவுகளுக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடிப்பதற்கு உறுதுணையாய் இருப்பது, வெட்கக்கேடானதாகவே உள்ளது.

இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில், பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது பலருக்கும் ஜீரணிக்க முடியாமலேயே இருந்தது. அவ்விருவரையும் எப்படியாவது தூக்கியெறிந்துவிட்டு, தாங்கள் குந்திக்கொள்ளவேண்டும் என்ற நினைப்புடன் காங்கிரஸும் இருப்பதாகவே அறியமுடிகிறது.

வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அரசியலில் தவழ்ந்துகொண்டிருக்கின்ற திகாம்பரம் போன்றவர்களுக்கு, கொஞ்சம் கொஞ்சமாவது ஏதாவது செய்வதற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுவதாய் இல்லை என்றே காங்கிரஸ் காரர்கள் முன்வைக்கும் விமர்சனங்களிலிருந்து தெரிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அமைச்சராக சி.பீ.ரத்னாயக்க பதவியேற்று, 3,129 ஆசிரியர்களை மலையத்துக்கு நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கொஞ்சக் காலம் கூட அவ்வமைச்சின் அமைச்சராக அவரை செயற்படவிடாத இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அவ்வாட்சியுடன் இணைந்து அதே அமைச்சைத் தட்டிப்பறித்துக்கொண்ட வரலாறும் உண்டு. அந்த ஆசிரியர் நியமனத்தை தாமே பெற்றுக்கொடுத்ததாகவே காங்கிரஸ் கட்சி, பிற்காலத்தில் கூறியது. எனினும், உண்மை எதுவென்பது காங்கிஸுக்கும் தெரியும்.

இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் வீடமைப்புத் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்களைத் தயாரித்ததும் நாமே என்று காங்கிரஸார் எதிர்காலத்தில் கூறிவிடுவார்களோ என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணி அஞ்சுவதிலும் ஒருவகையான நியாயமான சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றது. ஏனென்றால், ஆறுமுகன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், கொட்டகலையிலிருந்து ஹட்டன் வரைக்கும் பிரமாண்டமான வாகனப் பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்த தற்புகழ்ச்சி தேவைதானா, ‘இணைத் தலைவருக்கே இப்பிடினா, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு கிடைத்துவிட்டால் எப்படியிருக்கும்’ என்று சிலர் கேட்காமலும் இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் மட்டுமல்ல கடந்த ஆட்சியின் போதெல்லாம். மலையக மக்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அபிவிருத்திகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறான நிலையில் தான், ‘நான்தான் தலைவன், நேற்று வந்தவனுக்கு ஒண்ணுமே தெரியாது, அன்றிலிருந்து ஆட்சியிலிருந்தவன் என்னதான் செய்து கிழித்தான்?’ போன்ற வீரவசனங்கள் மலையக மேடைகளை குலுங்கச்செய்துவருகின்றன.

மலையகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுகளை இன்னும் இன்னும் பெற்று, பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தியை நோக்கி முன்னகர்த்திச் சென்றால் அதுவே சிறப்பானதாக இருக்கும். இல்லையேல், திகாம்பரத்திடம் இருக்கின்ற அமைச்சைப் பறித்து தொண்டமானுக்கும் மனோ கணேசனிடம் இருக்கின்ற அமைச்சை பறித்து மற்றொருவருக்கும், இராதாகிருஷ்ணனிடம் இருக்கின்ற இராஜாங்க அமைச்சுப் பதவியை அபகரித்து இன்னுமொருவருக்கும் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுமாயின், அபிவிருத்தியில் நத்தைவேகத்தில் நகரும் மலையக அபிவிருத்தியும், அப்படியே செத்துவிடும். நாட்டப்பட்டுள்ள அடிக்கற்கள் யாவும் முளைத்துவிடும்.

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் கட்டாயம் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஏனென்றால், தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கின்ற எம்.பி.க்களான அரவிந்தகுமார், திலகராஜ், வேலுகுமார், ஏன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வடிவேல் சுரேஸ் ஆகியோர், அரை அமைச்சுப் பதவிகள் இன்றி, தங்களுடைய ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கி, சேவையை முன்னெடுக்கவில்லையா, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு ஏன் அவ்வாறு செய்யமுடியாது என்ற கேள்வியும் எழும்பத்தான் செய்கின்றது.

அரசாங்கத்துக்கு ஆதரவளித்து சன்மானமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி, அரை அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்வதில் தவறில்லை, ஆனால், மற்றொருவரிடம் இருப்பதை பிடுங்க நினைப்பது அல்லது அவ்வமைச்சின் கீழான செயற்பாடுகளில் மூக்கை நுழைத்துகொள்ளத் துடிப்பது உசிதமானது அல்ல.

அந்த நினைப்பு சுமைதாங்கிக் கல்லில், மேலே இருகின்ற கல்லை கீழே தள்ளிவிடுவதற்கு ஒப்பானதாக அமைந்துவிடும். சுமைதாங்கிக் கல் என்றவுடன்தான் ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகின்றது. அந்த சுமைதாங்கிக் கல்லுக்குக் கீழே, நொண்டிக் குதிரையுடன் நொண்டியன் போல அமர்ந்திருக்கும் ஏமாற்றுப் பேர்வழி, அவ்வழியாகச் செல்வோரை ஏமாற்றிப் பணம் பறித்துக்கொண்டு, இரவோடு இரவாக வீட்டுக்குக் கிளம்பிவிடுவதாகவும் அந்த அச்சத்தினால் தான், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கடந்த காலங்களில் கடைகளுக்கு சென்றுவந்ததாகவும் வாய்வழிக் கதைகள் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில், மலைய மக்களுக்கு உண்மையாகவே சேவை செய்யவேண்டும் என்ற நினைப்பு மலையகப் பிரதிநிதிகளுக்கு இருக்குமாயின், அவர்கள் அனைவரும், கட்சி அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுகூடி, பல்வேறு துறைசார்ந்த அமைச்சுக்குகள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பேரம்பேசி பெற்றுச் சேவை செய்தால், மலையகத்தில் ஓரளவு மாற்றத்தைக் காணலாம்.

இல்லையேல், குழப்பங்களை ஏற்படுத்தி, அரசாங்கத்தை சிக்கல் நிலைக்கு தள்ளிவிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமாயின், கிடைப்பதும் கிடைக்காமலே போய்விடும். அது நொண்டிக் குதிரையின் கதைக்கு ஒப்பானதாகவே இருக்கும். மலையக அரசியலைப் பொறுத்தவரையில், ஏமாற்றுப் பேர்வழிகள் நிறைந்த சாக்கடையாகவே இருக்கிறது.

அதனைப் பூக்கடையாக மாற்றவேண்டியது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் சுட்டுவிரலுக்கு மையைப் பூசிக்கொள்கின்றவர்களின் கைகளிலேயே உள்ளது. இல்லையேல், நொண்டிக் குதிரைகளும் ஓடிவிடும். நாமெல்லாம் நடுத்தெருவிலேயே நிற்கவேண்டியதுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் படுக்கையறையில் நுழைந்த ராட்சத பாம்பு… அடுத்து என்ன தலைதெறிக்க ஓட வேண்டியது தான்…!! வீடியோ
Next post அமெரிக்காவில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 5 பேர் பலி…!!