அரூர் அருகே விவசாயி சுட்டுக்கொலை: மர்ம நபர் வெறிச்செயல்…!!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி, நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளப்பன் (வயது 65), விவசாயி.
இவர் அந்த பகுதியில் தோட்டம் மற்றும் வயல் களில் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி ஆராயி (60). இவர்களுக்கு கண்ணன்(45) என்ற மகன் உள்ளார்.
இவர்கள் அனைவரும் அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அங்கிருந்த படியே தோட்டம் மற்றும் வயல்களில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பக்கத்து கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக நேற்றிரவு ஆராயி மற்றும் தனது மகன் கண்ணன் ஆகிய இருவரும் புறப்பட்டு சென்றனர்.
விவசாயி குள்ளப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இன்று அதிகாலையில் எழுந்து விவசாய தோட்டப்பணியில் ஈடுபடுவதற்காக நின்றபோது, சுமார் 5 மணியளவில் திடீரென துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்து வந்து குள்ளப்பனின் வலது காலில் பட்டது. இதனை சற்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. காலில் ரத்தம் மளமளவென வடிந்த நிலையில் அவர் கீழே சுருண்டு விழுந்தார்.
என்னை காப்பாற்றுங்கள், என்னை காப்பாற்றுங்கள் என்று உயிருக்கு போராடியவாறு அலறல் விடுத்தார். அவர் வலியால் அலறி துடிக்கும் சத்தத்தை கேட்டதும் அக்கம் பக்கம் தோட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர்.
அவர்கள் குள்ளப்பனை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேய அவர் பரிதாபமாக இறந்தார்.
விடியற்காலை 5 மணி என்பதால் அந்த பகுதி முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது. இதனால் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் அங்கு கூடியதும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதற்கிடையே கணவர் தூப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மனைவி ஆராயிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மகனுடன் கதறி அழுதவாறு அரூர் அரசு மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார். மருத்துவ மனையில் வைத்திருந்த கணவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இந்த துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். துப்பாக்கி குண்டு எங்கிருந்து வந்தது? யார் அவரை சுட்டார்கள்? என அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த வர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், துப்பாக்கி குண்டு பாய்ந்து குள்ளப்பன் வலியால் அலறி துடித்த சத்தம் கேட்டதும் நாங்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றோம் என்றும் தெரிவித்தனர்.
குள்ளப்பன் வலது காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு எந்த ரக துப்பாக்கி குண்டு என உடனடியாக போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. டாக்டர்கள் அவரது காலில் பட்ட துப்பாக்கி குண்டை அகற்றி வெளியே எடுத்த பிறகு தான் அந்த குண்டு எந்த ரகத்தை சேர்ந்த துப்பாக்கி குண்டு என தெரியவரும்.
இதற்கிடையே இருளப்பட்டி, நாகலூர் ஆகிய கிராமங்களில் யாராவது நாட்டு துப்பாக்கி அல்லது வேறு ஏதேனும் நவீன ரக துப்பாக்கிகளை வைத்துள்ளார்களா? என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சொத்து தகராறு காரணமாக அவர் தீர்த்துக் கட்டப்பட்டாரா? அல்லது வேட்டைக்கு வந்தவர்கள் யாராவது சுட்டப்போது குண்டு குறி தவறி குள்ளப்பன் மீது பாய்ந்ததா? என்பன போன்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating