நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும்…!!
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகள், பெரும்பாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த சிறுபான்மைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் பிரதானமாவை. அப்படிப்பட்ட நிலையில், அந்தக் கட்சிகளை அரசாங்கத்துக்குள் இணைத்துக் கொள்வது தொடர்பிலான பேச்சுக்கள் கவனம் பெறுவது இயல்பானது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்து அமைச்சரவை போன்று, மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையும் உப்பி வளர்கின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏதோவொரு வடிவில் அமைச்சர் அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்று பொறுப்புக்கள் வழங்கப்பட்டு அழகு பார்க்கப்படுகின்றனர். நல்லாட்சிக்காரர்களின் தேர்தல் வாக்குறுதிகள் பறக்க விடும் காட்சி, 30 பேருக்குள் அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும் என்கிற கணக்கு மீறப்பட்ட தருணத்திலேயே ஆரம்பித்துவிட்டது.
இலங்கை அரசியல் வரலாற்றில் என்றைக்கும் இல்லாத வகையில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ள போதிலும், அதன் பின்னாலுள்ள நடைமுறைச் சிக்கல் பெரியது. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் (தேசிய அரசாங்கம்) என்கிற அடையாளத்துக்கு அப்பால், தற்போது ஆட்சியிலுள்ளது ஐக்கிய தேசியக் கட்சியே என்கிற பார்வை வெளிப்படையானது. அமைச்சரவைக்குள் இருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் அந்த உணர்வோடுதான் இருக்க வேண்டியிருக்கின்றது. அது எதிர்கால அரசியல் மற்றும் ஆட்சியதிகாரம் பற்றிய விடயங்களில் சுதந்திரக் கட்சியினருக்கு பெரும் மனத் தடையாகும். அப்படிப்பட்ட நிலையில், அதனைத் கடந்து எதிர்காலத்தினை கட்டமைக்க வேண்டிய கடப்பாடு அந்தக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதன்போக்கிலேயே, டக்ளஸ் தேவானந்தாவையும் ஆறுமுகன் தொண்டமானையும் அரசாங்கத்துக்குள் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுதந்திரக்கட்சி ஆர்வம் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்று தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் தோல்வி கண்டிருக்கின்ற சுதந்திரக் கட்சி, வரவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலை வெற்றிகொள்ள வேண்டும் என்று கருதுகின்றது. அதனூடு, எதிர்கால தேர்தல்களை வெற்றி கொள்வதற்கான பக்கத்துக்குச் சென்று சேரலாம் என்று நம்புகின்றது. அப்படிப்பட்ட நிலையில், சிறுபான்மைக் கட்சிகளைத் தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டிய சுதந்திரக் கட்சியின் தேவை, புரிந்து கொள்ளப்படக் கூடியது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சுதந்திரக் கட்சி தலைமையேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு ஒட்டிக்கொண்டிருந்த பெரும்பான்மையான சிறுபான்மைக் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து சவாரி செய்யப் புறப்பட்டுவிட்டன. ஒப்பீட்டளவில் சுதந்திரக் கட்சியோடு சார்ந்திருந்தல் என்பதைக் காட்டிலும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு யானைச் சவாரியே அதிக நன்மையைக் கடந்த காலங்களில் பெற்றுத் தந்திருக்கின்றன.
அதுதான், அவர்களை நாடாளுமன்றத்துக்குள் அதிக உறுப்பினர்களோடு வலம் வரவும் வைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், தற்போதைக்கு யானையில் சவாரி செய்ய முடியாதவர்களாக கருதப்படுகின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும்
பழைய பாசத்தோடு வரவழைத்துக் கொள்ள முடியும் என்பதை சுதந்திரக் கட்சி உறுதியாக நம்புகின்றது. அப்படியானதோர் அழைப்பினை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸோ நிராகரிக்கும் நிலையும் தற்போதைக்கு இல்லை.
மஹிந்த ராஜபக்ஷவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து, தங்களில் பூசிக் கொண்ட பழிபாவத்தினை மைத்திரிபால சிறிசேனவோடு ஒட்டிக்கொண்டு கழித்துவிடலாம் என்பதுவும் அதற்கு காரணம்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் பிராந்தியங்கள் மற்றும் வாக்கு வங்கியின் நிலை என்பன வேறுவேறாக காணப்பட்டாலும், நாடாளுமன்றத்துக்குள் இரு கட்சியின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அதாவது, டக்ளஸ் தேவானந்தாவும், ஆறுமுகன் தொண்டமானும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு, தொடர்ச்சியாக பதவிகளோடு வலம்வந்த தரப்புக்களுக்கு கடந்த ஒரு வருட காலம் பெரும் ஆற்றாமையை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையோ, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையோ அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எந்தவித தேவையும் இல்லை. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடுகளின் போக்கிலும் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பின் பேரிலும் அதற்கு உடன்படலாம்.
இந்த இடத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வருகையை முழுமையாக எதிர்க்கும் தரப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கப் போகின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் இந்த விடயம் தொடர்பில் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், அந்தக் கூட்டணியின் இணைத் தலைவர்களின் ஒருவரும், மலையக மக்களிடம் இம்முறை அதிகமாக வாக்குப் பெற்றவருமான அமைச்சர் பழனி திகாம்பரம் பெரும் எதிர்வினையை ஆற்றியிருக்கின்றார். அது, தர்க்க நியாயங்கள் சார்ந்தும் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ என்கிற எதேச்சதிகாரத்துக்கு எதிராக ஒன்றிணைந்த தரப்புக்களை மக்கள் இம்முறை அதிகமாக ஆதரித்தனர். அதனையே, மலையக் தமிழ் மக்களும் பெரும் ஆரவாரத்தோடு பிரதிபலித்தனர். அதன்விளைவுதான், தமிழ் முற்போக்குக் கூட்டணி 6 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தது.
ஆனால், வாக்கு வங்கி மற்றும் கட்சியொன்றுக்கான அபிமானம் சார்ந்து மலையகத் தமிழ் மக்களுக்கிடையில் எப்போதுமே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முதலிடத்திலிருக்கின்றது. அதன் அடிமட்டப் பலத்தினை அழிப்பதென்பதோ, அதனைப் பிரதியிடுவதென்பதோ தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று.
அப்படியான முயற்சிகள் மலையகத் தமிழ் மக்களிடத்திலிருந்து கட்டியெழுப்பப்படவும் இல்லை. அப்படியான நோக்கத்துதோடு உருவான கட்சியான மலையக மக்கள் முன்னணியே சில காலத்துக்குள் ஆட்டம் கண்டது. தேர்தல் நியமங்களின் போக்கில் மீண்டும் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராவது என்பது தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு உகந்தது அல்ல. அப்படிப்பட்ட நிலையில், அதனை எதிர்க்க வேண்டிய தேவையுண்டு. அதனை, தார்மிக உரையாடல்களினூடு தடுத்து நிறுத்த முடியும் என்றும் நம்புகின்றது. அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமை என்கிற விடயத்தினூடு கையாள எத்தனிக்கின்றது.
அத்தோடு, தமிழ் முற்போக்குக் கூட்டணி உதயமாகிய தருணத்தில் மலையக தமிழ் மக்களினால் வெளிப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பு என்பது கடந்த ஒருவருடத்தில் இயல்புக்கு மாறான வேகத்தில் காணாமற்போவதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பரிதவிப்பு புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்.
ஆனால், மறுபுறத்தில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவியேற்கலாம் என்கிற விடயம் வடக்கில் அவ்வளவு பெரிய உரையாடல்களை தோற்றுவிக்கவில்லை. அது, அரசியல் ரீதியாகவோ, தேர்தல் ரீதியாகவோ பெரும் தாக்கங்களைச் செலுத்தும் ஒன்றாக இருக்கப் போவதில்லை என்கிற விடயம் சார்ந்தது. அதாவது, ஈழத் தமிழ் மக்களைக் பிரதிபலிப்பதாக சொல்லிக் கொண்டு யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருக்கிய கட்சிகள் பல உண்டு. அதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன பிரதானமாவை.
1990களின் ஆரம்பத்திலிருந்து ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களோடு ஒட்டிக்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தன்னுடைய 25 வருட தேர்தல் அரசியல் பயணத்தில் இறுதியாக பெற்றது ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றியே. அதுவும்கூட, எதிர்கால தேர்தல்களில் காணாமற்போகக் கூடியதான போக்கினைக் காட்டுகின்றது.
அதுதான், அந்தக் கட்சிக்குள்ளும், மக்களுக்குள்ளும் அபிமானம் மிக்க முருகேசு சந்திரகுமாரையே கட்சியிலிருந்து விலகிச் செல்லவும் வைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக வருவது என்பது அரசியல் மாற்றங்களை பெரியளவில் ஏற்படுத்த முடியாது என்கிற அளவில் மக்கள் அதனை சிரத்தையோடு நோக்கவில்லை.
ஆனால், தேர்தல் அரசியல் சார்ந்து குற்றஞ்சாட்டுவதற்கான எதிரி என்கிற அளவில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் இருப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கலாம்.
ஏனெனில், தன்னுடைய எதிரியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வளர்வதினை அந்தக் கட்சி விருப்பவில்லை. அது, தமிழ்த் தேசிய அடையாளம் சார்ந்து இயங்குவதாக காட்டிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே, டக்ளஸ் தேவானந்தா அமைச்சராவதை அந்தக் கட்சி எதிர்க்காது என்று கொள்ளலாம். அது, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இன்னொரு இணைத்தலைவராக டக்ளஸ் தேவானந்தாவையும் அமரச் செய்யும் அவ்வளவுதான். வேறு எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தாது.
Average Rating