மதுரையில் பச்சிளம் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயன்ற காப்பக உரிமையாளர் உள்பட 6 பேர் கைது…!!
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகள் கடத்தப்பட்டு வந்தது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து சமீப காலமாக கடத்தல் இல்லாமல் இருக்கிறது.
இந்த நிலையில் மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் “ஒரு பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயற்சி நடந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்துங்கள்” என கூறி விட்டு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியவரின் போன் எண்ணை வைத்து அவரை போலீசார் கண்டுபிடித்து விசாரித்த போது சீனு என தெரியவந்தது.அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
மதுரை கே.கே.நகரில் உள்ள சித்ராபாய் என்பவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் சீனு வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகி விட்டார். தொண்டு நிறுவனம் பற்றி விசாரித்தபோது பச்சிளம் குழந்தை விற்கப்பட இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சித்ராபாயை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டு செல்போனில் தொடர்பு கொண்டு “வளர்க்க குழந்தை தேவைப்படுகிறது தொண்டு நிறுவனத்தில் குழந்தை இருந்தால் சொல்லுங்கள் பணம் கொடுத்து வாங்கி கொள்கிறோம்” என ஆசை வார்த்தை கூறி பேசினர்.
இதற்கு ஒப்பு கொண்ட சித்ராபாய் “திருமங்கலம் அருகே உள்ள மறவன் குளத்தில் ஒரு இடத்தில் குழந்தை இருக்கிறது அங்கு சென்று வாங்கி கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.
மப்டி போலீசார் அங்கு சென்றபோது மாற்று திறனாளி பெண் ஒருவர் ஆண் குழந்தையுடன் இருந்தது தெரியவந்தது. அப்பெண்ணிடம் விசாரித்தபோது சித்ராபாய் தான் குழந்தையை தந்து பரமரிக்க சொன்னார் என கூறினார். அக்குழந்தை குறித்து விசாரித்தபோது முடக்கத்தான் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தொண்டு நிறுவன தலைவி சித்ராபாய் அங்கு பணியாற்றும் கவிதா, பிரபாகர் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, முடக்கத்தானில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 11-ந் தேதி பிறந்த ஆண் குழந்தை எனவும், அக்குழந்தையை காப்பகத்தில் மறைத்து வைத்து விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையொட்டி சித்ராபாய், கவிதா, பிரபாகர், இவர்களுக்கு உடந்தையாக இருந்த பத்மாவதி, சாந்தி, ராஜசேகரன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை எல்லீஸ் நகரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
முடக்கத்தான் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை எப்படி காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டது? வேறு குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கைதான 6 பேரிடமும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
Average Rating