நாமக்கல்லில் வங்கி அதிகாரி மனைவி கொலையில் மாமனார் – மாமியார் கைது…!!
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சந்தோஷ்(வயது40). தனியார் வங்கி மேலாளர்.
இவரும் வேலூர் மாவட்டம் ராயவேலூர் பகுதியை சேர்ந்த சுமதி (34) என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதை பொருட்படுத்தாக காதல் ஜோடி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டது. பின்னர் நாமக்கல் பிள்ளையார் கோவில் தெருவில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர்.
தற்போது சந்தோஷ் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருவதால் நாமக்கல்லில் உள்ள வீட்டில் சுமதி தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி சந்தோஷ் மனைவிக்கு பல முறை போன் செய்தும் எடுக்காததால் தனது நண்பர்களை அங்கு சென்று பார்க்க சொன்னார்.
அப்போது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சந்தோசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு ஓடோடி வந்த சந்தோஷ், சுமதியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதற்கிடையே தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை நடந்த வீட்டில் நகை-பணம் ஏதும் கொள்ளை போகாததால் கொள்ளையர்கள் இந்த கொலையை செய்யவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
சுமதி கொலை செய்யப்பட்ட வீட்டின் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுமதியின் மாமியார் மாதேஸ்வரி உள்பட 2 பேர் அங்கு வந்து சென்றதும், அதன் பின்னர் தான் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இதையடுத்து திருச்செங்கோட்டில் தனது வீட்டில் இருந்த பழனிவேல், அவரது மனைவி மாதேஸ்வரி ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சந்தோஷ் -சுமதி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்ததை சந்தோஷ் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும் தற்போது வரை குழந்தையும் இல்லாததால் சுமதி மீது தீராத ஆத்திரத்தில் இருந்த சந்தோஷின் பெற்றோர் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சந்தோஷிடம் நைசாக பேசிய அவரது பெற்றோர் திருச்செங்கோட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதாக கூறி சந்தோஷை மட்டும் தனது வீட்டுக்கு அழைத்தனர்.
அதை நம்பிய சந்தோசும் கடந்த 20-ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி அங்கிருந்து வெளியேறிய பழனிவேல் மற்றும் மாதேஸ்வரி ஆகிய இருவரும் நேராக சுமதி தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர்.
பின்னர் மனதை கல்லாக்கிய பழனிவேல் மருமகள் சுமதியை படுக்கை அறையில் வைத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது யாராவது வருகிறார்களா? என்பதை வாசலில் நின்று மாதேஸ்வரி நோட்டமிட்டுள்ளார்.
பின்னர் சுமதி இறந்ததை உறுதி செய்த அவர்கள் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அங்கிருந்து நைசாக சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து பழனிவேல், மாதேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
வேறு ஜாதி என்பதால் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு மாமனாரே மருமகளை கழுத்தை அறுத்து கொலை செய்ததும், அதற்கு மாமியார் உடந்தையாக இருந்து கைதாகியதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating