சோமவன்சவும் இனப்பிரச்சினையும்…!!

Read Time:18 Minute, 49 Second

article_1466525035-aubeஇடதுசாரி அரசியல்வாதியொருவரின் வித்தியாசமானதோர் இறுதிக் கிரியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வழமையாக, இடதுசாரி அரசியல்வாதிகளின் இறுதிக் கிரியைகளை, போட்டி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளில், அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போட்டிக் கட்சிகள் அனைத்தினதும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த போதுதான், விமல் வீரவன்ச, நந்தன குணதிலக போன்றோர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று, தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கினர். அதன் பின்னர் புபுது ஜாகொட, சேனாதீர குணதிலக போன்றோர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்று, முன்னணி சோசலிசக் கட்சியை ஆரம்பித்தனர். அதனையடுத்து, சோமவன்சவே, கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்று தனிக் கட்சியொன்றை ஆரம்பித்தார்.

அரசியல்வாதிகளின் இறுதிக் கிரியைகளில், மாற்றுக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வதில் ஏதும் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர்கள் மனப்பூர்வமாக அவ்வாறு கலந்து கொள்வதில்லை.
எனினும்;, மக்கள் விடுதலை முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் முன்னணி சோசலிசக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், சோமவன்சவின் இறுதிக் கிரியைகளில் மனப்பூர்வமாகவே கலந்து கொண்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி, தாமே முன்னின்று இறுதிக் கிரியைகளை நடத்த விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சோமவன்ச, தமது அரசியல் ஆசான் என, புபுது ஜாகொட தெரிவித்திருந்தார். சோமவன்ச, கடைசிக் காலத்தில் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியுடன் மிக நெருக்கமாக இருந்தமை தெரிந்ததே. எனவே, விமலின் கட்சிப் பிரதிநிதிகளும் மனப்பூர்வமாகவே அதில் கலந்து கொண்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சோமவன்ச, மக்கள் விடுதலை முன்னணியின் சித்தாந்தப் பரிணாமத்தில் முக்கிய பங்காற்றியவர். குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அக்கட்சியின் சித்தாந்தத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த அவர் பெரும் பங்காற்றியுள்ளார். இறுதியில், 45 வருடங்களாக அவர் கட்டிக் காத்த அக்கட்சியிலிருந்து அவர் விலகிச் செல்ல, இனப்பிரச்சினை தொடர்பான சித்தாந்த முரண்பாடும் ஒரு காரணமாகி இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

1971ஆம் ஆண்டு இடம்பெற்ற, ம.வி.முவின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியிலும் 1988-89 ஆண்டுகளின் கிளர்ச்சியிலும் சோமவன்ச கலந்து கொண்டுள்ளார். அவ்விரு கிளர்ச்சிகளில் முதலாவது கிளர்ச்சியின் போது, அவர் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவைக் கடத்திச் செல்லவிருந்த குழுவில் அங்கத்தவராக இருந்துள்ளார். இரண்டாவது கிளர்ச்சியின் போது, தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தார் என்பது தெளிவில்லாத போதிலும், அப்போது அவர், ம.வி.மு தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவற்றில் 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியே, தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்த வழிகாட்டியது என, சில அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இக்கிளர்ச்சிகளின் போது, மக்கள் விடுதலை முன்னணி, பாதுகாப்புப் படையினரால் இரண்டு முறை அழிக்கப்பட்டது.

குறிப்பாக, 1988-89ஆம் ஆண்டுகளின் கிளர்ச்சியின் போது, 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. முப்பதாண்டு கால வடக்கு, கிழக்குப் போர், சுமார் ஒரு இலட்சம் உயிர்களைப் பலி கொண்டதாகவே, நடுநிலையான ஆய்வளர்கள் கூறுகின்றனர். அந்த அழிவுகளின் பின்னர், சோசலிச நாடுகள் சின்னாபின்னமாகி, சோசலிச சித்தாந்தம் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், சோசலிசத்தையே இலட்சியமாகக் கொண்ட கட்சியொன்றை மீண்டும் கட்டியெழுப்ப சோமவன்ச தலைமை தாங்கினார்.

2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது, புலிகள் இயக்கத்தின் சகல தலைவர்களும் கொல்லப்பட்டதைப் போல்,
1988-89 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, சோமவன்ச அமரசிங்க தவிர்ந்த, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவரும், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

அவர் மட்டும், படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியினர், தமது முதலாவது கிளர்ச்சியின் போது போலவே, இரண்டாவது கிளர்ச்சியின் போதும்; கடும் இந்திய எதிர்ப்பாளர்களாகவே இருந்தனர். ஆயினும், இரண்டாவது கிளர்ச்சி தோல்வியடைந்த போது, அக்கட்சியின் உயிர் தப்பிய ஒரே அரசியல் குழு உறுப்பினர், உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றார் என்றால், அது எந்தளவு விந்தையான விடயம்?

மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், மக்கள் கொல்லப்பட்ட நிலையிலும் அக்கட்சியின் ஒருவர் தவிர்ந்த அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையிலும், அக்கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப நினைப்பதானது, சிந்தித்தும் பார்க்க முடியாத காரியமாகும். அந்தப் பாரிய பணிக்கே அமரசிங்க தலைமை தாங்கினார்.

ஆனால், அவர் அப்போது இங்கிலாந்திலேயே இருந்தார். கட்சியைக் கட்டி எழுப்பும் பணியில், நாட்டிலிருந்தவர்களே நடைமுறை ரீதியான சவால்களை எதிர்நோக்கினர். கட்சி பாரிய அழிவைச் சந்தித்த போது உயிர் தப்பி, நாட்டின் பல திக்குகளில் சிதறிக் கிடந்த உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகளைத் தேடிச் சென்று ஒன்று திரட்ட, அவர்களே தனிப்பட்ட முறையில் முன்வர வேண்டியிருந்தது. இதற்கான சாதகமான நிலைமைகள், 90களின் ஆரம்பத்தில் ம.வி.முவுக்கு கிடைத்தன.

அக்கட்சியை இரண்டாவது முறையாக அழித்த ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ, புலிகளால் கொல்லப்பட்டார். கொல்லப்படும் போது, நாட்டின் தென் பகுதியிலும் பெரும்பாலான மக்களின் வெறுப்பைப் பிரேமதாஸ சம்பாதித்துக் கொண்டிருந்தார். அதன் விளைவாக, பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரபல்யம் பெறத் தொடங்கியது.

பிரேமதாஸ, தென் பகுதி மக்களால் வெறுக்கப்படுவதற்கு ஒரு காரணம், ம.வி.முவின் இரண்டாவது கிளர்ச்சியை அடக்கிய போது, அவரது அரசாங்கம் காட்டிய குரூரத் தன்மையை அம்மக்கள் கண்டமையே. இதன் காரணமாக, (வட பகுதியில் புலிகளின் குரூரத் தன்மை மறைக்கப்பட்டதைப் போல்) ம.வி.முவின் குரூரத் தன்மை மறைக்கப்பட்டு, அதன் பக்கம் தென் பகுதி மக்களின் அனுதாபம் திரும்பியிருந்தது.

இந்த அனுதாபத்தை தமக்குச் சாதகமாகப் பாவிப்பதற்காக, ஸ்ரீ.லசு.க இரகசியமாக அரசாங்கத்தின் அடக்கு முறையை ஆதரித்து, பகிரங்கமாக ம.வி.முவுக்கு அனுதாபம் தெரிவித்தது. ம.வி.மு ஆயுதம் ஏந்திப் போராடும் போதே, ஸ்ரீ.ல.சு.க, அக்கட்சியோடு அரசியல் கூட்டணி அமைக்கப் பகிரங்கமாக நடவடிக்கை எடுத்தது.

1993ஆம் ஆண்டு பிரேமதாஸ கொல்லப்பட்டதன் பின்னர், ஸ்ரீ.ல.சு.க நாளுக்கு நாள் பிரபல்யம் பெற்று வந்த நிலையில், தமக்கு எதிராக இருந்த ஆபத்துக்கள் நீங்கி, தம்மீதான அனுதாபத்தை அரசியலாக்கக் கூடிய வாய்ப்பு, ம.வி.முவுக்கும் கிடைத்தது. 1988ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி, ம.வி.மு மீதான தடையும் நீக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், அவர்களது கிளர்ச்சி உக்கிரமடைந்த போதிலும், அத்தடை மீண்டும் விதிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அக்கட்சியின் இலட்சியமான சோசலிசமும் நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. எனவே, 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் ம.வி.மு போட்டியிட்டது.

1989ஆம் ஆண்டு அடக்குமுறையின் பின்னர் எஞ்சியிருந்த ம.வி.மு உறுப்பினர்கள் ஒன்று சேர்வதற்கு, சாதகமானதோர் அரசியல் கல்வி முறையொன்றும் அமைப்பு முறையொன்றும், அக்கட்சியில் ஆரம்பத்திலிருந்தே இருந்தது.

அந்தக் கல்வியைப் பெற்றவர்கள் பலர், தனியாக இயங்கும் சுபாவத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவின் நெருங்கிய சகா என்ற வகையில், சோமவன்சவின் தலைமையும் அவர்களுக்குப் பெரும் தைரியத்தையளித்தது.

அவர், 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், கட்சித் தலைமையை அநுர குமார
திஸாநாயக்கவிடம் கொடுத்துவிட்டு, சாதாரண அரசியல் குழு உறுப்பினராகினார். 1969ஆம் ஆண்டு ம.வி.மு.வில் இணைந்த சோமவன்ச, 45 வருடங்களாக அக்கட்சிக்காக உழைத்து, கடந்த வருடம் ஜூலை மாதம் திடீரென அக்கட்சியிலிருந்து விலகினார்.

அதன் பின்னர் அவர் செய்தவற்றைப் பார்க்கும் போது, உண்மையிலேயே மக்கள் விடுதலை முன்னணியென்ற புரட்சிகரமான கட்சியை இவ்வளவு காலம் வழிநடத்தியவர் இவர் தானா அல்லது சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் இவரைக் காட்சிக்கு வைத்துக் கொண்டு, அக்கட்சியின் ஏனைய தலைவர்கள் தான் முக்கிய முடிவுகளை எடுத்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இரவு,
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரத்தை கையளிக்காமல் இருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சதி செய்ததாகவும் அது தொடர்பான விசாரணையை வலியுறுத்தி ம.வி.மு. செயற்படவில்லை என்றும் கட்சியில் இருந்து விலகிய சோமவன்ச குற்றஞ்சாட்டினார்.

பின்னர், அந்த விசாரணையை வலியுறுத்தி சுதந்திர சதுக்கத்தில் தனியாக சத்தியாக்கிரகம் செய்தார். பின்னர் அதே மஹிந்தராஜபக்ஷவுடன் கைக்கோர்த்துக் கொண்டு, மைத்திரிபால சிறிசேனவையும் மக்கள் விடுதலை முன்னணியையும் விமர்சித்தார். அவ்வாறாயின், 45 ஆண்டுகளாக தாம் கட்டிக் காத்த கட்சியிலிருந்து அவர் ஏன் விலகினார் என்ற கேள்வி எழுகிறது.

அவர், ம.வி.மு.வின் ஏனைய தலைவர்களை விட, இனப்பிரச்சினை விடயத்தில் பிற்போக்கான கொள்கையுடையவர் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போது அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகக் கடமையாற்றும் லயனல் போப்பகே அவரது மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து எழுதியிருந்த கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ம.வி.மு, மாக்சிஸத்தை பின்பற்றுவதாக கூறிய போதிலும், அதன் ஆரம்ப காலத்தில், அதாவது 1971ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு முன்னர் அதன் ஐந்து வகுப்புக்களில் இந்திய விஸ்தரிப்புவாதம் என்றதோர் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. அதில்; நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக தமிழ் எதிர்ப்பு கலக்கப்பட்டிருந்தது.

ஆனால், அக்கிளர்ச்சியின் பின்னர், அக்கட்சியின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது, அவர்களிடையே பாரிய சித்தாந்த மாற்றம் ஏற்பட்டது. அதன் பிரகாரம், இனப்பிரச்சினை தொடர்பாகவும் அவர்களின் நிலைப்பாடு வெகுவாக மாறி, இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தனியாகப் பிரிந்து செல்லும் உரிமை (சுய நிர்ணய உரிமை) இருக்கிறது எனப் பகிரங்கமாகக் கூறிய முதலாவது இடதுசாரிக் கட்சியாகவும் அது மாறியது.

1977ஆம் ஆண்டு ம.வி.மு தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததன் பின்னர், அக்கட்சி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக புத்தகங்களையும் வெளியிட்டனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டாலும் அம்மக்கள் அவ்வுரிமை பிரகாரம் பிரிந்து செல்லக் கூடாது என்றும், மாறாகத் தமிழ், சிங்கள, முஸ்லிம் பாட்டாளிகள் ஒன்று சேர்ந்து நாட்டில் சோசலிசத்துக்காகப் பாடுபட வேண்டும் என்றுமே அக்கட்சி

அக்காலத்தில் கூறியது.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை

தூண்டினார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் ம.வி.மு உட்பட மூன்று கட்சிகள் தடைசெய்யப்பட்டன. அதன் பின்னர், இரகசிய அரசியலில் ஈடுபட்ட காலத்தில், இனப்பிரச்சினை விடயத்தில் ம.வி.மு.வின் நிலைப்பாடு பழைய நிலைக்கு மீண்டும் மாறிவிட்டது. அக்காலத்தில் கட்சித் தலைவர்களிடையே

இப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழர்களின்
சுயநிர்ணய உரிமையை சோமவன்ச கடுமையாக எதிர்த்ததாக லயனல் போப்பகே மேற்படி கட்டுரையில் கூறியிருக்கிறார்.

அண்மைக் காலத்தில், ம.வி.முவுக்குள் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புபுது ஜாகொட போன்றவர்கள், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீண்டும் வலியுறுத்தினர். கட்சியின் பெரும்பாலானவர்கள் அதனை ஏற்க மறுக்கவே, அவர்கள் பிரிந்து சென்று முன்னணி சோசலிசக் கட்சியை உருவாக்கிக் கொண்டனர்.

அதன் தாக்கத்தால் ம.வி.முவும் ஓரளவுக்கு தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. போரின் போது அவல நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ் மக்களுக்காக, தமது கட்சி குரல் கொடுக்கத் தவறிவிட்டது என்றெல்லாம் ம.வி.மு தலைவர் அநுர குமாரதிஸாநாயக்க கூறி வருவதற்குக் காரணம் அதுவே. சிலவேளை, சோமவன்ச அந்த மாற்றத்தை ஏற்க மறுத்திருக்கலாம்.

அவர், மக்கள் விடுதலை முன்னணியை விட்டுப் பிரிந்து செல்லக் காரணம் அதுவாகவும் இருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெகு நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கிறீர்களா பெண்களே? இது ஆபத்து…!!
Next post இயற்கையின் கோரத்தாண்டவம்… சாரதியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி…!! வீடியோ