விழுப்புரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!
விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். காட்பாடி ரெயிவே கேட் அருகே உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மங்கலட்சுமி. இவர் தள்ளு வண்டியில் கூழ் விற்பனை செய்து வருகிறார்.
இவர்களது மகள் ஜமுனா(வயது 18). இவர் 10–ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 3 மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெற இருந்தது.
ஜமுனா திருமணத்திற்கு அவரது பெற்றோர் சீட்டுகட்டி பணம் சேர்த்து வந்தனர். அதில் கிடைத்த 1¼ லட்ச ரூபாயை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர்.
நேற்று நாகப்பனும், மங்கலட்சுமியும் வெளியே சென்று விட்டனர். ஜமுனா மட்டும் வீட்டில் தனியே இருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் ஜமுனா வீட்டிற்கு வந்தனர். அவர்கள் ஜமுனாவிடம் சீட்டு கட்டியதில் கிடைத்த பணத்தை உன்னுடைய அப்பா வாங்கி வரச் சொன்னார். அதை எடுத்துக் கொண்டு வா என்று கூறினர். ஜமுனா அவர்கள் கூறியதை நம்பவில்லை.
உடனே அந்த வாலிபர்கள் தங்கள் செல்போனில் நம்பரை டயல் செய்து இதோ உங்கள் தந்தை பேசுகிறார் என்று கூறி செல்போனை ஜமுனாவிடம் கொடுத்தனர்.
எதிர்முனையில் செல்போனில் பேசியவர் ஜமுனாவின் தந்தை குரலில் பேசினார். சீட்டு பணத்தை கொடுத்துவிடும்படி கூறினார்.
தனது தந்தைதான் பேசுகிறார் என்று நம்பிய ஜமுனா வீட்டில் வைத்திருந்த 1¼ லட்சம் ரூபாயை எடுத்து அந்த வாலிபர்களிடம் கொடுத்தார். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் மின்னல்வேகத்தில் சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து ஜமுனா தனது தந்தை நாகப்பனுக்கு செல்போனில் பேசினார். நீங்கள் அனுப்பி வைத்த வாலிபர்களிடம் 1¼ லட்சம் ரூபாயை கொடுத்து விட்டேன் என்றார்.
ஆனால் அவரோ நான் எந்த வாலிபர்களையும் அனுப்பவில்லை. நீ ஏன் அவர்களிடம் பணத்தை கொடுத்தாய் என்றார்.
இதைக்கேட்ட ஜமுனா அதிர்ச்சி அடைந்தார். மர்ம வாலிபர்கள் தன்னை ஏமாற்றி 1¼ லட்சத்தை பறித்துக்கொண்டு போய்விட்டார்களே என்று மனம் வருத்தம் அடைந்தார்.
திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணம் பறிபோய்விட்டதே என்ற வேதனையில் ஜமுனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலையில் நாகப்பனும், மங்கலட்சுமியும் வீட்டிற்கு வந்தனர். மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர்.
இந்த சம்பவத்தால் திருமணம் நடைபெற இருந்த வீட்டில் சோகம் சூழ்ந்தது. மணக்கோலம் காண இருந்த ஜமுனா பிணமாக கிடந்ததை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜமுனாவிடம் நூதனமுறையில் பணத்தை பறித்துச்சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating