புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ரஞ்சன் விஜேரத்னா இன் படுகொலையின் பின்னணியில், பிரேமதாச?” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-2)
இலங்கை இந்திய ஒப்பந்தம் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சில காத்திரமான ஆரம்பத்தினை அளித்திருந்தது.
அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டடிருந்தது.
அத்துடன் இவ் இணைந்த பிரிவு தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமாக அதாவது தனி அலகாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறாக அமைந்த இவ் அலகு அதிகார பரவலாக்கல் மூலம் ஓர் சுயாட்சிப் பிரதேசமாக செயற்படுவதற்கான பல ஏற்பாடுகள் அதில் வழங்கப்பட்டிருந்தன.
இவ் ஒப்பந்தம் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் களையப்படுவதை முக்கிய அங்கமாக கொண்டிருந்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனாலும் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் களையப்படுவதை எதிர்த்ததன் காரணமாக சமாதானப் படைகளுடன் மோதல் ஏற்பட்டது.
இதனால் இந்தியப்படைகள் மிகக் கடுமையான இழப்புகளோடு வெளியேறிக்கொண்டிருக்கையில் விடுதலைப்புலிகள் தமது ஆதிக்கத்தை வட, கிழக்கு பகுதிகளில் படிப்படியாக பலப்படுத்த தொடங்கினார்கள்.
இதன் பிரகாரம் இப் பகுதிகளில் இனச் சுத்திகரிப்பு ஆரம்பமாகியது. குறிப்பாக வடபகுதியில் காலம்காலமாக வாழ்ந்த முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் இயங்கும் வகையிலான ஆட்சிக் கட்டுமானங்களையும் நிறுவத் தொடங்கினர். இதன் பொருட்டு ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் அரச ராணுவத்தினரை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
இவ்வாறான பின்னணயில் அதாவது இந்திய அமைதிப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே ஏற்பட்டு வந்த மோதல் போக்கை அரசு தனக்குச் சாதகமாக்க திட்டமிட்டது.
அதன் பிரகாரம் அப்போதைய வெளியுறவு அமைச்சரான ஏ சி எஸ் ஹமீட் புலிகளுடன் பேச்சுவார்தை நடத்த அனுப்பப்பட்டார்.
இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் மிகவும் சுமுகமாக காணப்பட்டதால் பிரேமதாச பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.
இதனால் அவரிடமிருந்து ஆயுதங்கள், பணம் போன்றவற்றை புலிகள் பெருமளவில் பெற்றுக் கொண்டார்கள்.
ஜே ஆர் தலைமையிலான அரசு இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தினை ஆரம்ப முதலே எதிர்த்து வந்த பிரேமதாச தான் பதவிக்கு வந்ததும் விடுதலைப்புலிகளுடன் ஏற்படுத்திய உறவைப் பயன்படுத்தி இந்திய அமைதிப்படையை வெளியேற்றினார்.
இவை ஒரு புறம் தொடர மறு பக்கத்தில் பிரேமதாச தலைமையிலான அரசு விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு, கிழக்கு மாகாணசபையைக் கலைப்பதாகவும், அரசியல் அமைப்பின் 6வது திருத்தத்தில் மாற்றங்களை எற்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்நதது.
இதனை புலிகள் அடிக்கடி வற்புறுத்திய நிலையில் ஐ தே கட்சியிலிருந்த கடும் போக்காளர்கள் இம் மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணசபையைக் கலைத்து புதிய தேர்தல் நடத்துவதற்கு முன்பதாக புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா வலியுறுத்தத் தொடங்கினார்.
தேர்தலுக்கு முன்னர் ஆயுதங்கள் களையப்படுவதை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
1990 ம் ஆண்டு யூன் மாதம் சுமார் 750 பொலீசார் புலிகளின் சுற்றி வளைப்பில் அகப்பட்டிருந்த போது கொழும்பு நிர்வாகம் அவர்களைச் சரணடையும்படி பணித்திருந்தது.
அதன்படி சரணடைந்த பொலீசார் புலிகளால் மிகவும் கொடுமையான விதத்தில் படுகொலை செய்யப்படார்கள். அதனைத் தொடர்ந்து ரஞ்சன் விஜேரத்னாவின் போக்கு மிகவும் கடுமையாகியது.
“இடை நடுவில் நிறுத்தும் போக்கு என்னிடம் இல்லை. முழுமையாக ஒழிப்பதே நோக்கம். இனிமேல் மீட்சியே இல்லை. ஒழிப்போம்” என சூழுரைத்தார்.
அம் மாதமே போர் நிறுத்தம் முறிந்து ஈழப் போர் 2 ஆரம்பமானது. இப் போரில் யாழ்ப்பாணத்தை மீளவும் கைப்பற்றவதே அரசின் நோக்கமாக இருந்தது.
இவை ஒரு புறத்தில் தொடர மறு பக்கத்தில் பிரேமதாச அரசு ஏ சி எஸ் ஹமீத் முயற்சியில் புலிகளுக்கும், நோர்வே இற்குமிடையிலான நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி இன்னனொரு பேரம் நடத்த முயற்சிக்கப்பட்டது.
இதில் புலிகளின் இன்னொரு தலைவரான மாத்தையா கலந்து கொண்டார்.
இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட நோர்வே தரப்பினரின் அபிப்பிராயப்படி பிரேமதாச தீர்வில் நாட்டம் கொண்டிருந்த போதிலும் விஜேரத்னாவின் போக்கில் அவர் அச்சம் கொண்டிருந்தார்.
ஏனெனில் தன்னால் இக் குற்றவாளிகளுடன் சமாதானம் பேச முடியாதெனவும், 3 மாதங்களுக்குள் புலிகளை ஒழிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அரசின் புதிய முயற்சி காரணமாக 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் நோர்வே வெளியுறவு அமைச்சர் புலிகளின் அழைப்புக் காரணமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
இப் பேச்சுவார்த்தைகளின் போது தாம் போர் நிறுத்தத்திற்கு தயார் எனவும், அரசு சம்மதிக்கும் பட்சத்தில் வருட இறுதியில் அறிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அச் செய்தியை இலங்கை அரசிற்கு தெரிவித்த பின் அரசின் பதில்: தாம், போர் நிறுத்தத்தினை ஏற்கவில்லை என்பதாக இருந்தது.
இப் பதிலைத் தொடர்ந்து ரஞ்சன் விஜேரத்னா படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் பிரேமதாச இருந்ததாக பரவலாக பேசப்பட்டது.
தொடரும்… (Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்)
Average Rating