ஓசூரில் போலீஸ் ஏட்டு குத்தி கொலை: வாட்ஸ்அப்பில் படங்களை வெளியிட்டது யார்?- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே ஆசிரியை பார்வதியிடம் (வயது 28) கடந்த 15-ந்தேதி ஒரு கும்பல் செயினை பறித்து விட்டு தப்பியது.
இந்த கொள்ளை கும்பலை ஓசூர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள், முனுசாமி, தனபால் ஆகிய 3 பேரும் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர்.
அப்போது கொள்ளை கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏட்டு முனுசாமி பலியானார். போலீசாரிடம் பிடிபட்ட பெங்களூரை அடுத்த ஜி.எம்.பாளையத்தை சேர்ந்த கொள்யைன் புஜ்ஜியும் (23) மர்மமான முறையில் இறந்தார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜ் தலைமையில் 80 போலீசார் அடங்கிய 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் தப்பியோடிய கொள்ளையர்களான பெங்களூர் ஜி.எம்.பாளையம் பகுதியை சேர்ந்த விக்கி, அமரா, சாகித் ஆகிய 3 பேரையும் கர்நாடக மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்று ஓசூர் வந்த சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. திரிபாதி கொள்ளையர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே நடந்த மோதல் குறித்து பாரதிதாசன் நகருக்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ.நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோரையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவ செலவுக்கான நிதி உதவியையும் வழங்கினார்.
இதை தொடர்ந்து பலியான ஏட்டு முனுசாமியின் சொந்த ஊரான கே.திப்பனப்பள்ளிக்கு சென்ற ஏ.டி.ஜி.பி. திரிபாதி, பலியான ஏட்டு முனுசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் கோவை மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜ், தர்மபுரி எஸ்.பி. பண்டி கங்காதர் மற்றும் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்திய அவர் கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதற்கிடையே கடந்த 15-ந்தேதி பாரதிதாசன் நகரில் நகை பறிப்பு கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் இறந்த போலீஸ் ஏட்டு முனுசாமி கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய படி கிடப்பது, கொள்ளையன் புஜ்ஜியை, ஏட்டு தனபால் மடக்கி பிடித்து இழுத்து வருவது, போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்துவது போன்ற புகைப்படங்கள் நேற்று வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படங்கள் அனைத்தையும் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சம்பவம் நடந்த போது மாடியில் இருந்து செல்போனில் படம் எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் தவிர மற்ற கொள்ளையர்களின் புகைப்படங்களையும் அந்த இளைஞர்கள் படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களை வெளியிட்டால் போலீசார் தங்களை விசாரணைக்கு அழைப்பார்கள் என்பதால் அதனை வெளியிடாமல் உள்ளனர்.
இதற்கிடையே வாட்ஸ்அப்பில் அந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் தப்பியோடிய கொள்ளையர்களின் படங்களையும் கைப்பற்றினால் கொள்ளையர்களை எளிதாக பிடித்து விடலாம் என்பதால் அதற்கான நடவடிக்கையில் தற்போது தீவிரமாக தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர்.
Average Rating