300 ஆண்டுகளாக கதவுகள் இல்லாத வீடுகள்: வினோத “கடவுள்” கிராமம்..!!
இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளும் கதவுகளே இல்லாமல் 300 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. ஆனாலும், அங்கு எந்தவித திருட்டு பயமும் இல்லை. சனிபகவானே பாதுகாப்பு என நம்புகின்றனர்.
வீடு என்றாலே கதவு பாதுகாப்பு அவசியம் என கருதும் நம்மால் இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், சனி சிங்னாபூர் கிராமத்தினரின் நிஜமான நடைமுறை இதுதான்.
அந்த கிராம மக்கள் அனைவரும் சனி கடவுளை வணங்குகின்றனர். அந்த கடவுளின் மீது உள்ள பக்தியின் அதீத நம்பிக்கையால் இப்படிச் செய்கின்றனர். அதற்கு வியப்பான ஆரம்பமும் உண்டு.
வழக்கம் வந்த அதிசயம்
300 ஆண்டுகளுக்கு முன் கடும் மழையினால் பனாஸ்னாலா ஆற்றில் பெரும்வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் கனமான பலகை போன்ற 1.5 மீ. நீளமுள்ள கரியபாறை மிதந்து வந்தது.
அது சிங்னாபூர் கிராமத்தின் அருகே வரும்போது, கரை ஒதுங்கியது. அதை வினோதமான பொருளாக கண்ட சிலர் குச்சியால் குத்திப்பார்த்தனர். அதிலிருந்து ரத்தம் வழிந்தது. மக்கள் வியந்தனர்.
அன்று இரவு கிராம தலைவரின் கனவில் சனி கடவுள் தோன்றினார், கரை ஒதுங்கியது எனது சிலைதான். அது மகத்தான சக்தி படைத்தது.
அதை இந்த கிராமத்திலே வைத்து வழிபடுங்கள். அது உங்கள் எல்லோரையும் காப்பாற்றும். கிராமத்தினர் வீடுகளிலும் கதவுகள் வேண்டாம். அப்போது தான் தடையில்லாமல் நான் வந்து அருள் செய்ய முடியும். அனைத்துக்கும் நானே பாதுகாப்பு என்று உறுதியளித்து கிராம தலைவரை ஆசிர்வதித்து மறைந்தார்.
Swati Jain
கதவில்லா கோயில்
கிராம தலைவர் மறுநாள் கூறியதை கேட்ட மக்களும் நம்பினர். மிதந்து வந்த சனி பகவான் சிலைக்கு கதவுகள் ஏதுமில்லாது எளிமையாக கோயில் செய்தனர். பூஜிக்க ஆரம்பித்தனர். 300 ஆண்டுகளாக இன்று வரை வழுவாமல் தொடர்கின்றனர்.
கனவில் கூறியதுபோல, பாதுகாப்பில் இதுவரை எந்த குறையும் இல்லை. அது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது.
கதவில்லா கலாசாரம்
எந்த வீட்டிலும் நிரந்தர கதவுகள் இல்லை. நாய்கள் உள்ளே வராதிருக்க பலகையை தற்காலிகமாக வைத்து சிலர் மறைக்கின்றனர். பொது கழிப்பிடங்களில் கூட அதே விதிதான் என்றால் பாருங்களேன்.
இவர்களுடைய பக்திக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த கிராமத்தில் 2011 ல் கட்டப்பட்ட அரசு வங்கியில் (UCO BANK) முதன்முதலாக பூட்டும் வசதி இல்லாத வெறும் கண்ணாடி கதவே அமைக்கப்பட்டுள்ளது.
Swati Jain
கதவு வைத்தவருக்கு விபத்து
இந்த கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டு வாசலுக்கு கதவு பொருத்தியதால் மறுநாளே விபத்தில் சிக்கினார் என ஒருவர் கூறுவதிலிருந்து அச்சுறுத்தலும் இந்த நம்பிக்கைக்கு பக்கபலமாக இருப்பது தெரிகிறது.
வெளியூர் செல்பவர்கள் கதவில்லாமல் விட்டுச்செல்கிறோமே என்று அண்டை வீட்டாரிடமும் பார்த்துக்கொள்ள சொல்வதில்லை.
கடைகளும் எப்போதும் திறந்தே இருக்கிறது. திருடினால், உடனே கடவுளால் தண்டிக்கப்படுவர், ஏழரை வருடம் சனியால் துன்பப்படுவர் என்ற அச்சம் திருட நினைப்பவர்களை தடுக்கிறது. அதனால், திருடு போகாது என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடுக்கிறது.
அருகிலே புதிய கோயில்
ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு குறையாமல் அங்கு வந்து பூஜித்து செல்கின்றனர். இதன் மகிமையால் இந்தியா முழுதும் ஏராளமான பக்தர்களை ஈர்த்துள்ளது.
பக்தர்களிடம் இருந்து அதிக நன்கொடைகள் வருவதால், சனி பகவானுக்கு பெரியகோயில் இப்போது இருக்குமிடத்துக்கு அருகிலே கட்டப்பட்டு வருகிறது.
பூட்டு கதவுகளும் பலமான மதில் சுவர்களும் உள்ள பல இடங்களில் திருடு, கொள்ளை, வழக்கு, தண்டனை, தப்புதல் என எவ்வளவு வழக்கங்கள் அதிகரித்திருக்கிறது.
கடவுள் செயலால் இந்த கிராமம் ஒரு முன்மாதிரியா? அல்லது கடவுள் மீதான அச்சத்தால் கிடைத்த ஒரு அனுகூலமா? என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
Average Rating