காதலிக்க மறுத்ததால் கல்லூரி பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டினார்: உயிர் தப்பிய ஆசிரியை வாக்குமூலம்…!!
நாகர்கோவில் அருகே காதலிக்க மறுத்ததால் கல்லூரி பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டியதாக உயிர் தப்பிய ஆசிரியை பரபரப்பான வாக்குமூலம் அளித்தார்.
நாகர்கோவில் வெள்ளமடத்தை அடுத்த ஆண்டார் குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகள் செல்வகுமாரி (வயது 24).
தேரூரை அடுத்த குரண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டார். தெருவில் இறங்கி நடந்ததும், வாலிபர் ஒருவர் செல்வகுமாரியை வழி மறித்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர் செல்வகுமாரியை அரிவாளால் வெட்டினார். அவர், மயங்கி விழுந்ததும், அந்த வாலிபரும் தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். சுசீந்திரம் போலீசார் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
செல்வகுமாரிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வாலிபர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், செல்வகுமாரியை வெட்டியது, ராதாபுரத்தை அடுத்த வேப்பிலான்குளத்தைச் சேர்ந்த சுடலைகண்ணு (27) என தெரியவந்தது.
தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்த சுடலைகண்ணு, ஆசிரியை செல்வகுமாரியை ஒருதலையாக காதலித்ததும், செல்வகுமாரி காதலை ஏற்காததால் அவரை வெட்டியதும் தெரிய வந்தது.
இதையடுத்து சுடலைகண்ணு மீது சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி, தகாத வார்த்தைகள் பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் பற்றி சுடலை கண்ணுவின் தந்தை உச்சி மாகாளியும் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், சுடலைகண்ணு மீது தற்கொலைக்கு முயன்றதாக இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி சுடலைகண்ணுவின் சகோதரர் கூறும்போது, சுடலைகண்ணு அடிக்கடி ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். ஆனால் அந்த பெண், இவரை காதலித்தாரா? என்பது எங்களுக்கு தெரியாது என்றார்.
இதுபற்றி சுடலைகண்ணுவிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது, அவர், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டதால் பேச முடியவில்லை. இனி அவர், குணமாகி பேசும் திறனை பெற்ற பிறகே அவரது வாக்குமூலம் பெறப்படும் என வழக்கை விசாரிக்கும் போலீசார் தெரிவித்தனர்.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் செல்வகுமாரி போலீசாரிடம் கூறியதாவது:–
செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்தேன். அப்போது அங்குள்ள கல்லூரி பஸ்சில் சுடலைகண்ணு டிரைவராக வேலை பார்த்தார். அந்த பஸ்சில் சென்று வந்ததால் அவரை எனக்கு தெரியும். நான், வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்படும்போது, பஸ் வந்து விட்டதா? என்பதை அறிந்து கொள்ள சுடலைகண்ணுவின் செல்போனுக்கு பேசுவேன்.
அவரும் சில நேரங்களில் பஸ் முன்கூட்டியே வந்தால் அந்த விவரத்தை எனக்கு தெரியப்படுத்துவார்.
எங்கள் இருவருக்கும் இடையே இதை தவிர வேறு எந்த பேச்சுவார்த்தையும் நடந்ததில்லை. நான் அவரை காதலிக்கவில்லை. அளவுக்கு அதிகமாக எதையும் பேசியதில்லை. படிப்பு முடிந்ததும், எனக்கு வேலை கிடைத்துவிட்டது. அதன் பிறகு சுடலைகண்ணு எப்போதாவது எனக்கு போன் செய்வார்.
வேலை காரணமாக நான், அவரிடம் அதிகம் பேசுவதில்லை. நேற்று நான், வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டபோது சுடலைகண்ணு என்னை வழிமறித்து இதுபற்றி கேட்டார். நான், அப்போதும் அவருடன் பேச மறுத்து வேலைக்கு செல்ல நேரமாகிவிட்டது என்று கூறிவிட்டு வேகமாக நடந்தேன். ஆனால் அவர், என் பின்புறமாக வந்து அரிவாளால் வெட்டி விட்டார். அதன் பிறகு நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
செல்வகுமாரியின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating