பல்லடம் அருகே வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொலை..!!
பல்லடம் அருகே வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. குடிபோதையில் அவர்களின் நண்பர்கள் 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 22). ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சேகர் (24). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளன்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தனர். அதே ஆலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் (24) மற்றும் விக்கி (18) ஆகியோரும் வேலைபார்த்து வந்தனர்.
நண்பர்களாக பழகி வந்த இவர்கள் 4 பேரும், ஆலை உரிமையாளருக்கு சொந்தமான குடியிருப்பில் தங்கி இருந்தனர். குடிப்பழக்கம் உள்ள இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அருள்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களுடன் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களின் வீட்டிற்கு அருகே கொண்டு விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு வந்த பிறகும் இந்த வாக்குவாதம் தொடர்ந்ததால் அக்கம்பக்கத்தினர் தலையிட்டு விலக்கி விட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் வீட்டுக் குள் சென்று விட்டனர்.
நேற்று காலையில் அருகில் வசிக்கும் பெண் ஒருவர், இவர் கள் குடியிருப்புக்கு அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது ஒருவித கருகிய வாசத்துடன், துர்நாற்றம் வீசியது.
உடனே அவர், வடமாநில வாலிபர்களின் குடியிருப்புக்கு சென்று பார்த்தார். அப்போது, ராம்குமாரும், சேகரும் தீயில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
வடமாநில வாலிபர்கள் 4 பேருக்கும் இடையே நள்ளிரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கலாம் எனவும், இதில் ஆத்திரம் அடைந்த சுராஜ், விக்கி ஆகியோர் அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து, ராஜ்குமார், சேகர் ஆகியோரின் தலையில் போட்டு கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்த காகிதங்கள் மற்றும் துணிகளை இருவர் மீது போட்டு தீவைத்து விட்டு, கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி இருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார், சேகர் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள் தப்பிச்சென்ற சுராஜ், விக்கி ஆகியோரை தேடி வருகிறார்கள். இதற்காக 5 தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
கொலை செய்யப்பட்ட ராஜ்குமார், சேகர் ஆகிய இருவரும் வேலைக்கு சேர்ந்த போது, உரிய ஆவணங்கள் எதுவும் ஆலை நிர்வாகத்திடம் கொடுக்கவில்லை. இதுபோல் விக்கியின் ஆவணமும் ஆலை நிர்வாகத்திடம் இல்லை. சுராஜின் ஆவணம் மட்டும் ஆலை நிர்வாகத்திடம் இருந்தது.
இதை வைத்தே போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். ஆனால், கொலையானவர்களின் முழு முகவரி எதுவும் கிடைக்காததால் அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.
Average Rating