சாலாவ முகாம் அனர்த்தம்: விதியா, சதியா? -கே.சஞ்சயன் (சிறப்புக் கட்டுரை) -VIDEO-
கொஸ்கம- சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிவிபத்துக்கு யார் பொறுப்பேற்பது என்று அரசியல்வாதிகள் மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், முழுமையாகத் தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப முன்னரே, அரசியல்வாதிகளின் மோதல்கள் ஆரம்பித்து விட்டன.
இந்த விபத்து சதியா – விதியா என்று தெரியாத நிலையில், அதுபற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தான், பழிபோடும் அரசியல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெடிவிபத்துக்கான நேரடிக் காரணிகளைப் புறக்கணித்து, அரசியல் மட்டத்தில் ஆதாயம் தேடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பார்க்கும் போது, அவலங்களை அரசியலாக்குவதில் இலங்கை அரசியல்வாதிகள் எந்தளவுக்கு கில்லாடிகள் என்று உணர முடிகிறது.
இந்த வெடிவிபத்து நிகழ்ந்தவுடன், இதனை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரியிருந்தது. ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான, மஹிந்த ஆதரவு அணியினர், மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்றனர். கற்பனைக் குதிரைகளை தட்டி விடுகின்றனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது ஆட்சிக்காலத்தில் சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டிருந்ததாகவும், அவ்வாறு செய்திருந்தால், இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார். அவர், அரசாங்கத்தை நேரடியாகக் குற்றம்சாட்டவில்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவும், நாமல் ராஜபக்ஷவும், அவ்வாறு இருக்கவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய இராணுவத் தளபதியே இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார். போர் முடிவுக்கு வந்த பின்னர், சாலாவ மற்றும் வியாங்கொட இராணுவ ஆயுதக் கிடங்குகளை, அநுராதபுரத்துக்கு அருகில் உள்ள பளுகஸ்வௌ, மற்றும் ஓயாமடுவ பகுதிகளுக்கு இடம்மாற்ற நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், அதற்குள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால், அது கைவிடப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வெடிபொருள் கிடங்கை இடம்மாற்றியிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என்றும், அதனால் இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பேற்று பதவிவிலக வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
நாமல் ராஜபக்ஷவோ, பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சாலாவவில் ஆயுதக்கிடங்கை நிறுவியவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே என்றும், அதனை அங்கிருந்து இடம்மாற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டம், பின்னர் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
சந்திரிகாவுக்குப் பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் மஹிந்த ராஜபக்ஷ. எதற்காக அவர் சாலாவ ஆயுதக்கிடங்கை அகற்றாமல் இருந்தார், இந்தக் கேள்விக்கு நாமல் ராஜபக்ஷவினால் பதிலளிக்க முடியாதிருக்கும்.
சந்திரிகா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது என்று தெரிந்திருந்தால், அதனை மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் திருத்தியிருக்க வேண்டும். அதனைச் செய்யாதவர்களுக்கு, இந்தச் சம்பவத்துக்கு வேறெவர் மீதும் பழியைப் போடுகின்ற உரிமை உள்ளதா?
கோட்டாபய ராஜபக்ஷவும் கூட, பழிபோடும் அரசியலைத் தான் முன்னெடுத்திருக்கிறார். தாம், சாலாவ ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிபொருட்களை வியாங்கொட ஆயுதக்கிடங்குக்கு மாற்றியதால் தான், குறைந்தளவுக்கு இழப்புகள் ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
2011இல் தான் மத்திய ஆயுத வெடிபொருள் களஞ்சியம் வியாங்கொடைக்கு மாற்றப்பட்டது. சாலாவவை விட, வியாங்கொட ஆயுதக் களஞ்சியம் அதிக சன அடர்த்தியுள்ள பகுதியில் உள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டிருந்தால், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அதனை வியாங்கொடைக்கு மாற்றியிருப்பாரா?
வியாங்கொட மற்றும் சாலாவ ஆயுதக்கிடங்குகள், அதிக மக்கள் செறிவான இடத்தில், இருப்பதை தாம் உணர்ந்து, வேறு ஆயுதக் களஞ்சியங்களை அமைக்க நடவடிக்கை எடுத்த போது தான், தமது ஆட்சி பறிபோனதாக தப்பிக்க முனைந்திருக்கிறார் கோட்டாபாய.
போர் முடிந்தது, 2009இல், மஹிந்தவின் ஆட்சி பறிபோனது, 2015இல். அதற்கு இடையில் ஐந்தரை ஆண்டுகள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஆபத்தான வெடிபொருள் கிடங்குகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியிருக்க வேண்டிய பொறுப்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருந்தது. ஆனால், அவர் அதனை நிறைவேற்றவில்லை.
ஆட்சி பறிபோகும் தருணத்தில் தான் அந்த திட்டத்தை செயற்படுத்தவிருந்ததாக கூறியிருப்பது, தப்பித்துக்கொள்ளும் உத்தி மட்டுமன்றி, மற்றவர் மீது பழியைப் போடும் தந்திரமும் கூட.
கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதுபோல, ஒரு திட்டம் இருந்தது என்றால், அதனை நிறைவேற்றாதமைக்கான பொறுப்பு தனியே தற்போதைய இராணுவத் தளபதிக்கு மட்டும் தான் இருக்கிறதா? கோட்டாபய ராஜபக்ஷவினால், இராணுவத் தளபதியாக்கப்பட்ட ஜெனரல் தயா ரத்நாயக்க, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும் அந்தப் பதவியில் இருந்தார். அவர் தான் இதற்கான நடவடிக்கையை ஆரம்பித்திருக்க வேண்டியவர்.
அவரைப் பொறுப்பேற்க வைக்காமல், அவருக்குப் பின்னர், இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை மட்டும் பழியை ஏற்க வேண்டும் என்பது நியாயமானதா? தான் பாதுகாப்புச் செயலராக இருந்திருந்தால், இராணுவத் தளபதியைப் பதவிநீக்கம் செய்திருப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு அவசியமேயில்லை என்பது தற்போதைய பாதுகாப்புச் செயலரின் கருத்து.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலராக இருந்த போது, வவுனியாவில் இராணுவத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதறியது, அப்போது ஏன் இராணுவத் தளபதியை அவர் பதவி நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கருணாசேன ஹெட்டியாராச்சி.
கடந்த மே 31ஆம் திகதி, மஹாராஸ்டிராவில் உள்ள புல்கானில் இருந்த இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்குகளில் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 19 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர் பெருமளவானோர் காயமடைந்தனர். ஆனால், இந்திய இராணுவத்தளபதி பதவி விலகவோ பதவி விலக்கப்படவோ இல்லை. தனி ஒரு சம்பவம் என்பதால், அதற்கான தேவையும் இருக்கவில்லை, அவ்வாறான வலியுறுத்தல் அரசியல் மட்டங்களில் இருந்து கொடுக்கப்படவுமில்லை.
அதேவேளை, 2014 பெப்ரவரியில் இந்தியக் கடற்படையின் போர்கப்பல்கள் அடுத்தடுத்து விபத்துக்களைச் சந்தித்து வந்த ஒரு சூழலில், மும்பையில் நீர்மூழ்கி ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, அப்போதைய இந்தியக் கடற்படைத் தளபதியான அட்மிரல் சுனில் ஜோஷி அதற்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பொறுத்தவரையில், இராணுவ இழப்புகள், தோல்விகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதானால் அல்லது பதவி விலக்குவதானால், போர்முனையில் பணியாற்றிய இராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானோர் அத்தகைய நிலைக்கு ஆளாகியிருந்திருப்பர். அந்தளவுக்கு, போர்க்காலத்தில் இழப்புகளையும், சேதங்களையும் எதிர்கொள்ள நேரிட்டிருந்தது.
தோல்வி அல்லது பின்னடைவு ஒன்றுக்குப் பொறுப்பேற்று இராணுவத் தளபதி ஒருவர் பதவி விலகிய ஒரே ஒரு சம்பவம் மாத்திரம் இலங்கை இராணுவ வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
பூநகரி இராணுவத் தளத்தின் மீது 1993ஆம் ஆண்டு. புலிகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பொறுப்பேற்று, அப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சிசில் வைத்தியரத்ன பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். அவர் அந்த முடிவை எடுத்திருந்ததற்கு முக்கிய காரணம், அவர் கவசப்படைப் பிரிவைச் சேர்ந்தவர். அந்த சண்டையில் தான் புலிகள் முதல்முதலாக ரி-55 டாங்கி ஒன்றைக் கைப்பற்றியிருந்தனர். அதுதான் அவரது பதவி விலகலுக்குப் பிரதான காரணம்.
அதற்குப் பின்னர், இராணுவம் பல தோல்விகளையும் பின்னடைவுகளையும் கண்டது. பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களும், இடங்களும் இழக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். டாங்கிகள், ஆட்டிலறிகள் எல்லாமே புலிகளால் கைப்பற்றப்பட்டன. எந்தவொரு இராணுவத் தளபதியும் பதவி விலகவில்லை.
அதுபோலவே, இராணுவப் பின்னடைவுகள், அழிவுகளுக்காக இராணுவ அதிகாரிகள் பதவி விலக்கப்பட்ட ஒரே ஒரு சம்பவம் தான் நிகழ்ந்திருந்தது. ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம், இரண்டரை ஆண்டுகளாக வன்னியில் கைப்பற்றிய இடங்களை, 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓயாத அலைகள்-3 நடவடிக்கை மூலம், புலிகள் சில நாட்களில் கைப்பற்றிய போது, அந்த தோல்விக்குக் காரணமானவர்கள் என்று வன்னி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா, 56 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் காமினி குணசேகர, 55 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் ரி.எம்.போரான் உள்ளிட்ட 7 இராணுவ அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.
அதற்கு முன்னரும் பின்னரும், எத்தனையோ பின்னடைவுகளுக்கு பொறுப்பானவர்கள் என்று விசாரணைகளில் கண்டறியப்பட்ட பிரபலமான- நட்சத்திர நிலை இராணுவ அதிகாரிகள் கூட எந்த நடவடிககையுமின்றித் தப்பியிருந்தனர்.
இலங்கை இராணுவத்தில் பொறுப்பை ஏற்பதும், பொறுப்புக்கூறலுக்காக பதவியை இழப்பதுவும் அபூர்வம்.
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு யாரும் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை. அதற்காக யாரும் பொறுப்பாளிகள் இல்லை என்றாகி விடாது.
இப்போது நடக்கும் விசாரணைகளின் முடிவில், நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூறியாக வேண்டியிருக்கும். ஏனென்றால், இது மிகப்பெரியதோர் அழிவை ஏற்படுத்திய சம்பவம்.
இதுவே வடக்கில் என்றால் கண்டுகொள்ளப்படடிருக்காது, பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள மக்கள் என்பதால் நிச்சயம் பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே நம்பலாம்.
Average Rating