தந்தையை கொலை செய்ய ரூ.1½ லட்சம் பேரம் பேசிய மகள்: வியாபாரி கொலையில் திடுக் தகவல்கள்..!!
கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 55). விவசாயி. இவர் சாய ஆலைகளுக்கு தேவையான வேதிப்பொருட்களை வினியோகம் செய்து வந்தார்.
இவருக்கு நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் தோட்டம் உள்ளது. அங்கு மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 23-ந்தேதி இரவு தோட்டத்துக்கு சென்ற நாகராஜ் மறுநாள் கப்பளாங்கரை ரோட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாகராஜை அவரது மகள் மகாலெட்சுமி தனது காதலன் சதீசுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது. போலீஸ் தேடுவதை அறிந்த மகாலட்சுமி, காதலன் சதீசுடன் நேற்று கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக சதீசின் நண்பர்களான மலுமிச்சம்பட்டியை சேர்ந்த கமலக்கண்ணன்(19), கிருஷ்ணகுமார்(19), சசிக்குமார்(20), சந்தோஷ்குமார்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நாகராஜை கொலை செய்ய மகாலட்சுமி கூலிப்படைக்கு ரூ.1½ லட்சம் பேரம் பேசியது தெரியவந்துள்ளது.
கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கூறியதாவது:-
நாகராஜின் மகள் மகாலட்சுமி 2 வருடமாக சதீசை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த நாகராஜ் கண்டித்தார். ஆனாலும் மகாலட்சுமி தொடர்ந்து காதலனுடன் சுற்றினார். மகளின் காதலுக்கு அவரது தாய் பிரமிளா ஆதரவு தெரிவித்தார்.
இதுதொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தன்பேச்சை கேட்காத மனைவி, மகளை வீட்டை விட்டு துரத்தி விட்டார். உடனே சதீஷ் மலுமிச்சம்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு காதலியையும், அவரது தாயையும் தங்க வைத்தார்.
அப்போது மகாலட்சுமி தனது காதலனிடம் எனது தந்தை உயிரோடு இருந்தால் நம்மை நிம்மதியாக வாழ விட மாட்டார், சொத்துக்களும் தர மாட்டார். எனவே எனது தந்தையை கொலை செய்து விடு என காதலனிடம் கூறி உள்ளார். நகைகளை வைத்து ரூ.1½ லட்சம் தருகிறேன், நீ ஆட்களை வைத்து எனது தந்தையை கொலை செய்து விடு என மகாலட்சுமி கூறி உள்ளார். அதன்படி சதீஷ் தனது நண்பர்கள் மூலமாக நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று தோட்டத்துக்கு தனியாக சென்ற நாகராஜை சதீசும், அவரது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த கொலையில் கைது செய்யப்பட்ட சதீசின் நண்பர்கள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கோர்ட்டில் சரண் அடைந்த மகாலட்சுமி, அவரது காதலன் ஆகியோர் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொலையில் மகாலட்சுமியின் தாய் பிரமிளாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவான அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating