செயற்கை இதயத்தை முதுகில் சுமந்தபடி 555 நாட்கள் உயிர்வாழ்ந்த வாலிபர்: வீடியோ இணைப்பு..!!
உயிரினங்கள் உயிர்வாழ இதயம் இன்றியமையாததாகும். எனவேதான், இரக்ககுணம் இல்லாத மனிதர்களை இதயமே இல்லாதவன் என்று நாம் குறிப்பிடுகிறோம். இதயமே இல்லாத ஒருவன் பிணத்துக்கு ஒப்பானவன் என்பதும் இந்த குறியீட்டின் உட்பொருளாகும். இந்நிலையில், இதயமே இல்லாமல் அமெரிக்காவில் ஒரு வாலிபர் சுமார் ஒன்றரை ஆண்டு உயிர் வாழ்ந்த தகவல் தற்போது செய்திகளாக வலம் வந்துகொண்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்தவர், ஸ்டான் லார்க்கின். தற்போது 25 வயது வாலிபராக இருக்கும் லார்க்கின் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் முன்னர் ஒருநாள் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ’familial cardiomyopathy’ மற்றும் ‘ arrhythmogenic dysplasia’ எனப்படும் மரபுசார்ந்த நோயால் லார்க்கின் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்தனர்.
இந்த நோய் தாக்கத்தால் இதயத்தின் தசைகள் அளவுக்கதிமாக விரிவடைந்து நாளடைவில் ரத்த நாளங்கள் பலவீனமடைந்து, பின்னர், இதயம் முற்றிலுமாக செயலிழந்து மரணத்தை விளைவித்து விடும் என்பதை தெரிந்திருந்த டாக்டர்கள் லார்க்கினுக்கு மாற்று இதயம் பொருத்த முடிவெடுத்தனர்.
ஆனால், அமெரிக்காவில் மாற்று இதய தானம் பெற பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் கடந்து விட்டதால், அது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல என்பதை அறிந்திருந்த டாக்டர்கள் அவருக்கு பொருத்தமான மாற்று இதயம் கிடைக்கும்வரை தற்காலிகமாக செயற்கை இதயத்தை அவருக்கு பொருத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாதிக்கப்பட்ட இதயம் அகற்றப்பட்டது. ஒரு கட்டிங் மெஷின் அளவிலான செயற்கை இதயத்துடன்கூடிய கருவி ஆபரேஷன் மூலம் அவரது உடலில் பொருத்தப்பட்டது. விலா எலும்பின் அடிப்பகுதியில் துளையிட்டு, ஒரு குழாய் மூலமாக அவரது இதயம் இருந்த இணைக்கப்பட்டிருந்த கருவியின் செயல்பாடு ரத்த சுழற்சியை சீர்படுத்துவதுடன் இதயத்தின் அறைகளுக்கு ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயுவை தங்குதடையின்றி செலுத்தவும் துணையாக அமைந்தது.
மிச்சிகன் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்களின் அனுமதியுடன் அந்த செயற்கை இதயம் கொண்ட இயந்திரத்தை முதுகில் சுமந்தபடி வீட்டுக்கு சிஸ்சார்ஜ் ஆகிச்சென்ற லார்க்கின், வழக்கம்போல் தனது குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடியும், கார் ஓட்டியும் 555 நாட்கள்வரை வாழ்க்கையை ஓட்டிவந்துள்ளார்.
ஸ்கூல் மாணவர்களின் புத்தகப்பை போல் அதை சுமந்தபடி வாடிக்கையான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டு வந்தேன். ஆனால், நமது உடலில் இருந்த இதயம் இப்போது நம்மிடம் இல்லை. இனி என்ன ஆகுமோ? என்ற அச்சம் எனக்குள் எப்போதுமே தோன்றியதில்லை என சிரித்தபடி கூறும் இவரது சகோதரருக்கும் இதே நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தது.
இவரைப் போலவே செயற்கை இதயம் பொருத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஒரு மாற்று இதயம் உடனடியாக கிடைத்தது. தைரியசாலியான ஸ்டான் லார்க்கின், இனிஒரு மாற்று இதயம் கிடைக்கும்வரை செயற்கை இதயத்துடன் துணிச்சலாக சமாளித்து கொள்வார் என்பதை தீர்மானித்த டாக்டர்கள் இவரை மட்டும் சுமார் ஆறுகிலோ எடையுள்ள செயற்கை இதயத்துடன் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர்.
தற்போது ஸ்டான் லார்க்கினுக்கு தேவையான மாற்று இதயம் கிடைத்ததையடுத்து, மிச்சிகன் மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் நடந்த மாற்று அறுவை சிகிச்சையின்போது அந்த இதயம் லார்க்கினின் உடலில் பொருத்தப்பட்டது. தற்போது உடல்நலம் தேறிவரும் அவர் வெகுவிரைவில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Average Rating