கோவையில் 3 பேர் கொலை: தம்பி கொலைக்கு பழி வாங்க கூலிப்படையை ஏவிய அண்ணன் – பரபரப்பு வாக்குமூலம்..!!
வக்கீல் ராஜா கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது அண்ணனும், நானும்(பா.ம.க. மாநில துணை தலைவர்)ஸ்டாலின் 3 பேரை கொலைச் செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் வக்கீல் ராஜா(வயது 32). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி லாலி மணிகண்டன்(25) உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லாலி மணிகண்டன் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி ஜாமீனில் வெளிவந்த இவர் நண்பர்கள், உறவினர்கள் 6 பேருடன் காரில் தஞ்சைக்கு புறப்பட்டார்.
காரை திருவிடை மருதூரை சேர்ந்த ரவி(43) என்பவர் ஓட்டினார். இவர்களது கார் கோவை-திருச்சி சாலையில் சிந்தாமணிபுதூர் அருகே சென்ற போது ஒரு கும்பல் காரை மறித்து தாக்கியது. மேலும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டிரைவர் ரவியின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அந்த கும்பல் காரை சுற்றி வளைத்து உள்ளே இருந்தவர்களை வெட்டியது. இதில் மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். லாலி மணிகண்டன் உள்பட 3 பேர் காரில் இருந்து கீழே குதித்து உயிர்தப்பினர்.
போலீஸ் விசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்த கூலிப்படை தலைவன் மோகன்ராம்(37) தலைமையிலான கூலிப்படையினர் இந்த கொலைகளை செய்தது தெரியவந்தது. வக்கீல் ராஜா கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது அண்ணனும், அப்போதைய பா.ம.க. மாநில துணை தலைவருமான ஸ்டாலின் (40) கூலிப்படையை ஏவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விவேக், சரவணன், பிரபு உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்டாலின், கூலிப்படை தலைவன் மோகன் ராம் உள்பட 5 பேரை தேடி வந்தனர். இவர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஒரு கோழிப்பண்ணையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என் தம்பி சாவுக்கு காரணமான லாலி மணிகண்டனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கு என் தம்பியின் நண்பரான கூலிப்படை தலைவன் மோகன்ராம் உதவியை நாடினேன். அவர் லாலி மணிகண்டனையும், அவரது கூட்டாளிகளையும் கொல்ல முன்வந்தார். கோவையில் வைத்து லாலி மணிகண்டனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினோம்.
சம்பவத்தன்று ஜாமீனில் வெளிவந்த லாலி மணிகண்டன் காரை மறித்து மோகன் ராமின் கூட்டாளிகள் வெட்டினர். இதில் லாலி மணிகண்டன் தப்பிவிட்டார். ஆனால் 3 பேர் கொல்லப்பட்டனர். கொலைக்கு பிறகு ஒடிசா, பெங்களூர், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலைமறைவாக இருந்தேன். 9 மாதங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் பென்னாகரம் வந்து பதுங்கி இருந்தேன். போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்டாலினிடம் நடத்திய விசாரணையில் கூலிப்படை தலைவன் மோகன்ராம் பற்றிய பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில் மோகன் ராமை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கைதான ஸ்டாலினை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating