சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் உள்பட 5 பேர் கைது..!!
வடமாநிலங்களில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு பணத்தாசை காண்பித்து அவர்களின் சிறுநீரகங்களை அகற்றி அவற்றை பணக்காரர்களுக்கு பொருத்தும் மோசடியில் டெல்லியில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகளும் அவற்றின் டாக்டர்களும் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்த விசாரணையை டெல்லி போலீசார் முடுக்கிவிட்டனர்.
இதற்கிடையே, இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த தேவசிஸ் மவுலிக் என்பவருக்கும், சிறுநீரகத்தை தானம் செய்த அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மவுலிக்கின் மனைவி டெல்லி போலீசில் புகார் செய்தார்.
அப்போதுதான் சிறுநீரக தான மோசடியில் பெரும் சங்கிலித் தொடர் பிணைப்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மவுலிக்கை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தரகர்கள் மூலம் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் பணத்தாசை காண்பித்து சிறுநீரகங்கள் தானமாக பெற்றதும், இவர்களின் சிறுநீரகங்கள் வசதி படைத்தவர்களுக்கு டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மூலம் பொருத்தியதும் தெரியவந்தது.
இதில் சிறுநீரகங்களை தானம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேரையும், தானமாக பெற்றுக் கொண்ட 3 பேரை காஷ்மீர் மாநிலத்திலும் கோல்காபூர்(மராட்டியம்), காஜியாபாத்(உத்தரபிரதேசம்) நகரங்களிலும் டெல்லி போலீசார் அடையாளம் கண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுநீரகங்களை தானமாக பெற்றுக் கொண்டவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக ஆஸ்பத்திரிக்கு கட்டணமாக செலுத்தியதும், ஆனால் தானம் செய்தவர்களுக்கு இதில் 10 சதவீத தொகை கூட போய்ச் சேராததும் தெரியவந்தது.
இதையடுத்து இதில் இடைத்தரகர்களாக செயல்பட்ட தேபசிஸ் மவுலிக், அசீம் சிக்தார், சத்திய பிரகாஷ் ஆகிய மூவரையும் டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதேபோல், டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரி சிறுநீரகவியல் துறை டாக்டர்களிடம் தனி செயலாளர்களாக பணியாற்றிய ஆதித்ய சிங், சைலேஷ் சக்சேனா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் தனி செயலாளர்களாக கடந்த 3, 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர்கள் ஆவர். 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்த மோசடி தொடர்பாக 25 போலீசார் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவினர் நேற்று சென்னை, கொல்கத்தா நகரங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், சிறுநீரக தான மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ராஜ்குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது தவிர, டெல்லியில் உள்ள மேலும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிறுநீரக தான மோசடி நடப்பதாக போலீசுக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த 2 ஆஸ்பத்திரிகளும் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் கோவை நகரில் மட்டும் 10 பேரிடம் சிறுநீரகங்கள் மோசடியாக தானம் பெறப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தமிழ்நாட்டிலும், பஞ்சாப்பிலும் பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இந்த மோசடி தீவிரமாக நடந்து வருவதாகவும் கைதானவர்கள் போலீசிடம் தெரிவித்து உள்ளனர். இதனால் தமிழ்நாட்டிலும், பஞ்சாபிலும் டெல்லி போலீசாரின் வேட்டை தொடரும் என்று தெரிகிறது.
டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘சிறுநீரக மோசடியில் எங்களுடைய ஆஸ்பத்திரி ஈடுபடவில்லை. கைதானவர்கள் எங்களுடைய ஆஸ்பத்திரி ஊழியர்களும் அல்ல. ஆனால் குற்றவாளிகள் திட்டமிட்டு இதில் எங்களுடைய ஆஸ்பத்திரியை பலிகடா ஆக்கிவிட்டனர்’’ என்று மறுத்து உள்ளது.
Average Rating