“நோர்மல் என்றால் 5000 வரும், அதிஉச்சம் என்றால் 8000 ஆகும்” – “தாய்மசாஜ்” என்ற பெயரில் விபசாரம்.. -எம்.எப்.எம்.பஸீர்
“மசாஜ்” அல்லது நீவுதல் சிகிச்சையென்பது உடலின் பாகங்களை கையாளல், தாங்குதல், நகர்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தல் போன்ற முறைகளைப் பயன்படுத்தும் சிகிச்சை முறையாகும்.
ஒரு பகுதியில் இரத்த அளவை அதிகரித்து, உடல் தசைகளின் நெகிழ்ச்சியை மேம்படுத்தி, திரவ தேக்கத்தினால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மசாஜ் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.
சில ஆய்வுகளின்படி அழுத்தப் பண்புகள் வளரும் ஆபத்துள்ளவர்கள், மசாஜ் சிகிச்சையைப் பெறுவதால் அவ்வாறு அழுத்தப்பண்பு வளர்ச்சியடைவது தடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு சிகிச்சைக்கு தாய்லாந்து பிரபல்யமானது. அதனாலோ என்னவோ மசாஜ் என்ற சொல்லுக்கு முன்பாக தாய்லாந்து நாட்டைக் குறிக்கும் விதமாக ‘தாய்’ எனும் சொல்லைச் சேர்த்து ‘தாய் மசாஜ்’ என்ற சிகிச்சை முறை உலகளவில் பிரபல்யம் பெற்று வருகிறது.
மசாஜ் என்பது மேற்கத்தேய நாடுகள் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் என்னதான் புத்துணர்ச்சி சிகிச்சை முறையாக நோக்கப்பட்டாலும், அந்த சிகிச்சை முறை நடவடிக்கைக்குள் அடங்கும் நீவுதல் நடவடிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி “தாய் மசாஜ்” எனும் பெயரில் உடலை விற்கும் விபசார கலாசாரம் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வியாபித்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை ஆயுர்வேத சிகிச்சை நிலையம், செலூன், ஸ்பா, தாய் மசாஜ் எனும் பல பெயர்களில் மசாஜ் சிகிச்சையளிப் பதாகக் கூறி, அதன் பேரில் பெயர்ப்பலகை மாட்டிக் கொண்டு தடை செய்யப்பட்ட சட்ட விரோத விபசார நடவடிக்கைகளில் அநேகர் ஈடுபடுகின்றனர்.
உள்நாட்டில் வறுமையை காரணம் காட்டி தொழில் தேடும் இளம் பெண்களையும், தாய்லாந்து,ரஷ்யா, உஷ்பெகிஸ்தான், இந்தியா, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் விபசாரத்தை தொழிலாகக் கொண்ட யுவதிகளை பயன்படுத்தியும் இந்த சட்ட விரோத விபசார வர்த்தகம் பலரின் ஆசிர்வாதத்துடன் ஜெயமாக நடக்கிறது.
இது குறித்து பல வெளிப்படுத்தல்களை கேசரி, முன்னைய நாட்களில் சுட்டிக் காட்டியிருந்தது. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதியில் இயங்கிய இத்தகைய சட்ட விரோத விபசார விடுதிகள் தொடர்பிலும் அதன் பின்னணியில் உள்ள அதிகார வர்க்கத்தையும் அதில் நாம் தோலுரித்துக் காட்டியிருந்தோம்.
இத்தகைய ஒரு பின்னணியில் தான் இந்தவாரம் முதலாம் திகதி தலவத்துகொட பகுதியில் மிக சூட்சுமமாக உள்நாட்டு மற்றும் தாய்லாந்து பெண்களை வைத்து முன்னெடுக்கப்பட்ட விபசார வர்த்தகம் முறியடிக்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்தவின் ஆலோசனைக்கு அமைய இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தலவத்துகொட பகுதியில் நீண்ட நாட்களாக அனைத்து சர்ம நோய்களுக்குமான சிசிச்சை வழங்கப்படும் எனும் சிங்கள உப தலைப்புடன் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பதாதையுடன் சிகிச்சை நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது.
Ayurvedic Beauty Care Treatment for skil kind of physical Element என தனது நடவடிக்கையை பிரபல்யம் செய்த அந்த ஆயுர்வேத சிகிச்சை நிலையம் தொடர்பில் யாருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை. இந்த ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தினுள்ளேயே Selena SPA எனும் பெயரில் மசாஜ் நிலையமும் இயங்கியது.
எனினும் அங்கு மசாஜ் நடவடிக்கைக்கு மேலதிகமாக மிக சூட்சுமமாக விபசாரமும் இடம்பெற்று வந்தமை தொடர்பில் வலான துஷ்பிரயோக தடுப்புப்பிரிவுக்கு அண்மையில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு, குறித்த மசாஜ் நிலையத்தில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தாது நட்புறவை வளர்த்துள்ளனர். இதற்காக சில ஊடகவியலாளர்களின் உதவியையும் பெற்றுக்கொண்ட வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தது.
அன்று முதலாம் திகதி புதன்கிழமை குறித்த ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை சேர்ந்த தாம் நட்புறவு வளர்த்த நபருடன் பொலிஸார் தொடர்பை ஏற்படுத்தினர். அவரது பெயர் திலின பிரதீப் என்ற பெயரிலேயே பொலிஸார் தொடர்பை வளர்த்திருந்தனர். அழைப்பை ஏற்படுத்தியதும் திலினவே முதலில் “ஹலோ” என ஆரம்பிக்க பிரதீப் என்ற பெயரில் இருந்த பொலிஸார் பேச ஆரம்பித்தனர்.
பிரதீப்: ஹலோ திலின நான், பிரதிப் கப்தைக்கிறேன் எந்த நாட்டவர்கள் உங்களிடம் இருக்கின்றனர்?.
திலின: ரஷ்யன் ஒருவரும் தாய்லாந்து இருவரும் உள்ளனர்.
பிரதிப்: கட்டணம் எப்படி?
திலின : நோர்மல் என்றால் 5000 வரும் அதி உச்சம் என்றால் 8000 ஆகும்.
இந்த தொடர்பாடலைத் தொடர்ந்து கடுவலை நீதிவான நீதிமன்றில் பெற்றுக்கொண்ட சோதனை அனுமதிக்கு அமைய பொலிஸார் தமது திட்டத்தை ஆரம்பித்தனர்.
8000 ரூபாவைக் கொடுத்து மாறுவேடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி தாய்லாந்து பெண்ணொருவரைப் பெற்றுக் கொண்டார்.
இதன்போது ஏற்கனவே கடுவலை நீதிவானிடம் பெற்றுக் கொண்ட சோதனை அனுமதிக்கு அமைய அங்கிருந்த வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர் மசாஜ் நிலையத்தை சுற்றி வளைத்தனர்.
இதன்போது 18 வயது முதல் 38 வயது வரையான உள்நாட்டு வெளிநாட்டு யுவதிகள் அங்கு இருந்ததை பொலிஸார் அவதானித்தனர். அவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட் டுள்ளமையும் விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டனர். 9 உள்நாட்டுப் பெண்களும் 3 வெளிநாட்டுப் பெண்களும் அதன் முகாமையாளரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
கலேவெல, தம்புள்ளை போன்ற தூர இடங்களில் இருந்து வந்த உள்நாட்டு பெண்களே இவ்வாறு தங்கியிருந்து இந்த தொழிலில் ஈடுபடுவது தெரியவந்தது.
கைதானவர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸாரால் பல்வேறு தகவல்களைப் வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
குறிப்பாக இந்த மசாஜ் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 25 பேர் வரை வந்து சென்றுள்ளனர். பொலிஸாரையும் பொதுமக்களையும் சந்தேகம் வருவதில் இருந்து தடுக்க வைத்தியர் ஒருவரும் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மசாஜ் நடவடிக்கைக்கு முன்னர் இரத்த அழுத்தத்தை மட்டும் சோதனை செய்துவிட்டு நடிப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
அங்கிருந்த உள்நாட்டுப் பெண்கள் தூர இடங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் திருமணமானவர்கள். நண்பர்கள் ஊடாகவே அவ்விடத்துக்கு வேலைக்கு வந்ததாக சிலர் கூறினர். இன்னும் சிலர் அங்குவரும் வரை தான் என்ன வேலை செய்யப்போகிறோம் என்பதையே அறியாது இருந்துள்ளனர்.
அவர்களது வீட்டாருக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவர்கள் செய்யும் தொழில் என்ன என்பது தெரியாமலேயே இருந்துள்ளது. இவையனைத்தும் பொலிஸ் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.
50 ஆயிரம் ரூபா மாதாந்த வாடகையின் அடிப்படையில் பெறப்பட்டிருந்த இந்த கட்டடமானது சிறிய அறைகள் பல ஏற்படுத்தப்பட்டு அதனுள்ளேயே மிக சூட்சுமமாக இந்த விபசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மிகவும் பழக்கமானவர்களுக்கே விபசார நடவடிக்கை குறித்து பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
கைதான யுவதி ஒருவர் விசாரணையில் தெரிவித்த சில தகவல்கள் வருமாறு,
பொலிஸ்: இங்கு வரும் வரை என்ன செய்வது என தெரியாதா?
யுவதி: தெரியாது சேர்.
பொலிஸ்: இந்த வேலையை ஆரம்பிக்கும் போது மனதில் சஞ்சலம் ஏற்படவில்லையா?
யுவதி: பயம் ஏற்பட்டது. எங்களையும் விட வயதில் குறைந்த இளைஞர்கள் இந்த இடத்துக்கு எமது சுகத்தை தேடி வந்தனர்.
பொலிஸ்: சிறுவர்களுமா?
யுவதி: ஆம், பல மாணவர்கள் அடங்குவர்.
இந்நிலையில் கைதானோர் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளை தொடங்குகின்றன.
அண்மைய நாட்களில் மசாஜ் நிலையங்கள் தொடர்பில் பல விரும்பத்தகாத தகவல்களை நாம் வெளிப்படுத்தினோம். குறிப்பாக வெள்ளவத்தை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட மசாஜ் நிலையத்தில் இருந்த தாய்லாந்து பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதும் அவரிடம் பலர் உறவு வைத்துக் கொண்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனை விட மசாஜ் நிலையங்களை நாடும் மாணவர்கள் அல்லது இளம் வயதுடையோரின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று வியாபித்துள்ள மசாஜ் நிலையங்களை கண்காணிக்கவும் அதன் செயற்பாடுகளை வரையறை செய்யவும் உரிய நடைமுறைகளை ஏற்படுத்த சுகாதார அமைச்சு உடன் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலம் மிக மிக மோசமாக அமைந்துவிடும்.
Average Rating