குள்ள நரியும், கொக்கும்… சம்பூர் கதையும்…!!
‘குள்ள நரியும் கொக்கும்’ என்கிற சிறுவர் கதை, உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. அது ஒரு நீதிக் கதையாகும். ‘குள்ள நரியும் கொக்கும் நண்பர்கள். ஆனாலும், நரிக்கு கொக்கு மேல் கடுமையான பொறாமை.
ஒருநாள் கொக்கினை தனது வீட்டு விருந்துக்கு நரி அழைத்தது. கொக்கும் சென்றது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கொக்கை அவமானப்படுத்த வேண்டும் என்று நரி நினைத்தது.
அதனால், கொக்குக்கு மிகவும் தட்டையானதொரு பாத்திரத்தில் உணவை வைத்தது. கொக்கின் நீண்ட அலகால், தட்டைப் பாத்திரத்திலிருந்த உணவை உட்கொள்ள முடியவில்லை.
ஆனாலும், கொக்கு அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சாப்பிட்டதுபோல் பாசாங்கு செய்து விட்டு கிளம்பியது. போகும்போது, நரியை தன்வீட்டுக்கு ஒரு நாள் விருந்துக்கு வருமாறு கொக்கு அழைத்தது.
நரியும் ஒருநாள் கொக்கின் வீட்டுக்கு விருந்துக்காகச் சென்றது. தன்னை நரி அவமானப்படுத்தியதை மனதில் வைத்துக் கொண்ட கொக்கு, அதற்குப் பழிவாங்குவதோடு, நரிக்கு புத்தி புகட்ட வேண்டுமென்று நினைத்தது.
அதனால், குவளையான பாத்திரமொன்றில் நரிக்கான உணவை கொக்கு வைத்தது. நரிக்கு தட்டைப் பாத்திரத்தில் உணவை வைத்தால்தான் நக்கிச் சாப்பிட முடியும்.
குவளையான பாத்திரத்தில் வைத்த உணவினை சாப்பிடுவதற்கு, எவ்வளவு முயன்றும் நரியால் முடியவில்லை. அப்போது, கொக்குக்கு தட்டைப் பாத்திரத்தில் உணவு வைத்து அவமானப்படுத்திய சம்பவம் நரிக்கு நினைவு வந்ததாம். நரி தனது தவறை உணர்ந்து கொக்கிடம் மன்னிப்புக் கேட்டதாம்’ என்று அந்தக் கதை முடியும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்படை அதிகாரி ஒருவரைக் கடுமையாகத் திட்டியமை தொடர்பான காட்சிகளை ஊடகங்களில் காணக்கிடைத்தன.
இந்த சம்பவத்தினை அடுத்து, கிழக்கு முதலமைச்சர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் நாம் அறிவோம்.
திருகோணமலை சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்துத்தான், குறித்த கடற்படை அதிகாரியை கிழக்கு முதலமைச்சர் அவ்வாறு திட்டியிருந்தார்.
சம்பூர் மகா வித்தியாலயத்தில் சம்பவம் நடைபெற்ற தினமன்று விஞ்ஞான கூடமொன்று திறந்து வைக்கப்படவிருந்தது.
அந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ பிரதம அதிதியாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் அதிதியாகவும் கலந்து கொள்ள இருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில், அதே தினம், திருகோணமலையில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆளுநரும் கலந்து கொண்டனர். அதன்போது, சம்பூரில் ஒரு நிகழ்வு உள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரை, ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ அழைத்தார்.
உடனே, சரி என்று சொன்ன கிழக்கு முதலமைச்சர், ஆளுநரிடம், ‘நீங்கள் செல்லும் ஹெலிகொப்டரில் நானும் சம்பூர் வருகிறேன்’ என்றார். ஆளுநர் அதற்கு ‘ஹெலிகொப்டரில் இடமில்லை’ என்று சொல்லி மறுத்து விட்டார்.
அதனால், கிழக்கு மாகாண முதலமைச்சர், தனது வாகனத்தில் தரைவழியாக சம்பூர் மகா வித்தியாலயத்துக்குச் சென்றார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆளுநரும் தம்மை நண்பர்களாகக் காட்டிக் கொள்கின்ற போதிலும், இருவருக்கும் இடையில் உள்ளுக்குள் ஒருவகைப் பகைமை எரிந்து கொண்டிருக்கிறது என்பதை, அநேகர் அறிவார்கள்.
கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு ஆளுநர் தடையாக இருக்கின்றார் என்று, முதலமைச்சர் நஸீர் அஹமட் பல சந்தர்ப்பங்களில் மிகவும் பகிரங்கமாக, ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருக்கின்றார்.
இந்தக் குற்றச்சாட்டினை மறுத்து, ஆளுநரும் பதில் சொல்லியிருக்கின்றார்.
கிழக்கு மாகாண நிர்வாகத்தைச் செவ்வனே கொண்டு நடத்துவதில் ஆளுநர் தலையீடு செய்கின்றமை குறித்து, கடந்த மார்ச்; மாதம் நடைபெற்ற முலமைச்சர்கள் மாநாட்டில், ஜனாதிபதியிடம் தான் அறிக்கையொன்றைக் கையளிக்கவுள்ளதாக, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத் தக்கது.
சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திறப்புவிழாவை கடற்படையினர்தான் ஒருங்கிணைப்புச் செய்து நடத்தியிருந்தனர்.
சம்பூர் மகா வித்தியாலயத்தில் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட விஞ்ஞான கூடத்தினை நிர்மாணிப்பதற்கு, தனியார் நிறுவனமொன்று நிதி வழங்கி உதவியிருந்தது.
ஆயினும், அதனை நிர்மாணிப்பதற்கான மனித வளத்தினை கடற்படையினர் வழங்கியிருந்தனர். அதனால்தான், அன்றைய நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியையும் கடற்படையினர் ஏற்றிருந்தனர்.
ஒரு நிகழ்வினை நடத்தும்போது, முன்னராகவே ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படுவதுண்டு. அதில் யாருக்கெல்லாம் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்க வேண்டும், யார் யாரையெல்லாம் விழா மேடைக்கு அழைக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த வகையில் பார்த்தால், அந்த விழாவுக்கு ஏற்கெனவே உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டிராத கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெயர், நிகழ்ச்சி நிரலில் இருந்திருக்க மாட்டாது.
இவ்வாறானதொரு நிலையில், நிகழ்சியை ஒருங்கிணைப்புச் செய்து நடத்தியவர்கள், நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநரையும் அதிதியாக அழைக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவரையும் நிகழ்ச்சி நிரலின்படி, மேடைக்கு அழைத்தனர்.
முதலமைச்சர் அழைக்கப்படவில்லை. இது அவருக்குக் கடும் கடுப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஆளுநர், தன்னை சைகை மூலம் மேடைக்கு வருமாறு அழைத்தாக முதலமைச்சர் சொல்கின்றார்.
அதனால், மேடைக்கு முதலமைச்சர் சென்றுள்ளார். அப்போது, முதலமைச்சரை மேடையிலிருந்த கடற்படை அதிகாரியொருவர் மேடையில் ஏற வேண்டாம் எனத் தடுத்திருக்கின்றார்.
இது முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு உச்சபட்ச கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் அவரின் அகக்கண்களை மறைக்க, தான் என்ன பேசுகிறேன், எந்த இடத்தில் பேசுகிறேன், யார் முன்னிலையில் பேசுகிறேன் என்பதையெல்லாம் மறந்தவர் போல், குறித்த கடற்படை அதிகாரியை மிகவும் அநாகரிகமாகத் திட்டத் தொடங்கினார்.
‘உனக்கு நெறிமுறை தெரியுமா? உனக்கு நெறிமுறை என்றால் என்னவென்று தெரியாவிட்டால், இந்த இடத்திலிருந்து வெளியேறு. என்னைத் தடுத்து நிறுத்துவற்கு உனக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது’ என்று கடற்படை அதிகாரியை முதலமைச்சர் கடுந்தொனியில் விரலை நீட்டி, கிட்டத்தட்ட அடிக்கப் போகும் ஒருவரைப்போல் திட்டித் தீர்த்தார்.
அப்போது, அந்தக் கடற்படை அதிகாரி, தனக்கேற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காக மிகவும் வலிந்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் ‘ஏதாவது தவறு நடந்திருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்று கூறினார். ஆயினும், ‘வாயை மூடு’ என்று முதலமைச்சர் எரிந்து விழுந்தார்.
இதன்போது, முதலமைச்சரை ஆற்றுப்படுத்தும் வகையில், அவரின் முதுகை – ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்;டோ தடவி விட்டார். ஆயினும், முதலமைச்சர் நஸீரின்
கோபம் அடங்கவில்லை. ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் மாறாத அதே தொனியில், ‘உங்களுக்கும் நெறிமுறை தெரியாது. ஓர் ஆளுநர் என்கிற வகையில் உங்களுக்கு நெறிமுறை தெரிந்திருக்க வேண்டும்’ என்றார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், குறித்த கடற்படை அதிகாரியை ஆங்கிலத்தில்தான் திட்டினார். அவர் அங்கு protocol என்கிற சொல்லினை அடிக்கடி பயன்படுத்தினார்.
protocol என்பதற்கு நெறிமுறை என்று தமிழில் அர்த்தப்படும். இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர், அப்படி என்ன நெறிமுறையை எதிர்பார்த்தார் என்பதை மிக எளிதான ஓர் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஒரு வீட்டில் தந்தையொருவர் இருப்பாராயின், அந்த வீட்டினுடைய தலைவராகவும் அவர்தான் இருப்பார். குறித்த வீட்டில் நிகழ்வொன்று நடக்கும்போது, அங்கு தந்தைதான் முன்னிலைப்படுத்தப்படுவார்.
தந்தையை ஓரங்கட்டி விட்டு, அந்த வீட்டிலுள்ள மகனுக்கு, வீட்டுத் தலைவருக்குரிய அந்தஸ்தினை வழங்க முடியாது. அதைத்தான் ‘நெறிமுறை’ என்பார்கள்.
கிழக்கு மாகாணம் என்கிற வீட்டின் தந்தையான தன்னை, அந்த மாகாணத்தில் நடந்த ஒரு வைபவத்தில் முன்னிலைப்படுத்தாமல் ஓரங்கட்டி விட்டார்கள் என்பதுதான் நஸீரின் கோபத்துக்குக் காரணமாகும்.
அப்படிப் பார்த்தால், கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோபம் நியாமானதாகும். ஆனால், போதை தலைக்கேறிய நிலையில், தெருவில் நின்று சண்டையிடும் ஒருவனைப்போல், முதலமைச்சர் தனது கோபத்தை வெளிப்படுத்திய விதம்தான் மிகவும் அருவருக்கத்தக்கதாகும்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், ஊடகங்களிடம் தன்னிலை விளக்கமளிக்கும் பொருட்டு நிறையவே பேசியுள்ளார்.
அப்படிப் பேசிய ஒரு தருணத்தில், ‘இந்தப் பிரச்சினைக்கு முழுமையான காரணம் ஆளுநர்தான். நெறிமுறை தொடர்பில், அங்கிருந்தவர்களை ஆளுநர் வழிநடத்தியிருக்க வேண்டும்.
அதை ஆளுநர் செய்யவில்லை’ என்று கூறியிருந்தார். அதாவது, தன்னை அழைத்து ஆளுநர் அவமானப்படுத்தி விட்டார் என்பது, முதலமைச்சர் நஸீரின் குற்றச்சாட்டாகும்.
இந்த இடத்தில்தான், ஆரம்பத்தில் நாம் சொல்லிய ‘குள்ள நரியும், கொக்கும்’ என்கிற கதையை மீளவும் ஒரு தடவை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பார்வையில், ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஒரு குள்ளநரியாவார். அப்படியென்றால், கிழக்கு முதலமைச்சரை – கதையில் வரும் கொக்காக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
கொக்கை, குள்ளநரி விருந்துக்கு அழைத்தது போல், சம்பூரில் நடைபெற்ற விழாவுக்கு, கிழக்கு முதலமைச்சரை ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ அழைத்தார்.
விருந்துக்கு அழைத்த கொக்கினை குள்ளநரி அவமானப்படுத்தி அனுப்பியதுபோல், தன்னை ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்;டோ அவமானப்படுத்தி விட்டதாக முதலமைச்சர் சொல்கிறார்.
இந்தத் தருணத்தில், கதையில் வரும் கொக்குபோல் மிகவும் நிதானமாகவும் நாசூக்காகவும் முதலமைச்சர் நடந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர் நடந்துகொண்டார். அதனால், சம்பூர் கதையில், முதலமைச்சர் நஸீர், ஒரு குள்ளநரியாகச் சித்தரிக்கப்படும் நிலைக்கு உள்ளானார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு, பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சிங்களத்தரப்பிலிருந்து முதலமைச்சருக்கான எதிர்ப்புகள் எக்கச்சக்கமாகக் கிளம்பி வருகின்றன.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில், நாட்டில் தலைவிரித்தாடிய சிங்களப் பேரினவாதமானது, நல்லாட்சி ஏற்பட்டவுடன் செத்து மடிந்து, மண்ணுக்குள் புதையுண்டு போய் விடவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இல்லாமல் போனவுடன், ஆமை தனது தலையை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல், சிங்களப் பேரினவாதம் தன்னை மறைத்துக் கொண்டது. தேவையும் பொருத்தமான தருணமும் வரும்போது, மீண்டும் பேரினவாதம் வெளியே தலை நீட்டத் தயாராக உள்ளது.
கடற்படை அதிகாரியை கிழக்கு முதலமைச்சர் திட்டிய விவகாரமானது, சிங்களப் பேரினவாதத்துக்கு, அதன் தலையை வெளியே நீட்ட பொருத்தமான தருணமாகும்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு, உண்மையில் ஆளுநர் மீதுதான் கோபமுள்ளது. அந்தக் கோபத்தை ஒரு கடற்படை அதிகாரி மீது காட்டியமையானது, முதலமைச்சரின் பலவீனமாகும்.
அரசியலில் இராஜதந்திரம் மிக முக்கியமானது. ஆளுநர் நெறிமுறை தவறி, தன்னை அவமானப்படுத்தி விட்டார் என்பதற்காக, பதிலுக்கு – ஒரு தெருச்சண்டியன் போல் முதலமைச்சர் நடந்துகொள்ள முடியாது.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால், தனது காலில் குத்திய முள்ளை எடுப்பதற்கு, ஹாபிஸ் நஸீர் அஹமட், ஓர் அலவாங்கினை கையில் எடுத்து விட்டார் என்பதுதான் இங்கு கவலைக்குரிய விடயமாகும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர். அவர் அந்தக் கட்சியில் பிரதித் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.
அந்தவகையில், நஸீரின் மேற்படி நடத்தையானது, மு.காங்கிரஸையும் அந்தக் கட்சியின் தலைவரையும் மிகவும் தர்மசங்கடமானதொரு நிலைக்குள் தள்ளியுள்ளது.
நஸீருக்கு, சம்பூரில் ஏற்பட்ட அனுபவம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டிருக்குமாயின், அதை அவர் வேறு விதமாகக் கையாண்டிருப்பார்.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி எவ்வாறான விமர்சனங்கள் உள்ளபோதும், அவர் மிகப் பெரும் இராஜதந்திரியாவார். இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதில் மிகச் சிறந்த சாணக்கியவாதி. நெருக்கடியான தருணங்களில் பாம்புக்கும் நோகாமல், கம்புக்கும் நோகாமல், பாம்மை அடிப்பதில் ஹக்கீம் சாதுரியமானவர்.
அதனால்தான், கடற்படை அதிகாரியை முதலமைச்சர் நஸீர் திட்டியமையினை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று, கிண்ணியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றும்போது மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.
மட்டுமன்றி, இது தொடர்பில் முதலமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். நிலைமையின் பாரதூரம் விளங்கியமையினால்தான் ஹக்கீம் இப்படிக் கூறியிருக்கின்றார்.
ஆனால், முதலமைச்சரைக் குஷிப்படுத்துவதற்காக கிழக்கு மாகாணசபையின் சில முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் போல், நஸீரின் நடத்தையைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இவை கோமாளித்தனமான செயற்பாடுகளாகும்.
படையினரோடும் பொலிஸாரோடும், விமல் வீரவன்ச போன்ற சிங்கள அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் ஏற்கெனவே மோதியிருக்கின்றனர். மிக மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கின்றனர்.
அப்போதெல்லாம் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. கிழக்கு முதலமைச்சர் விடயத்தில்தான் சிங்கள பேரினவாதிகள் மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள் என்கிற வாதமொன்று உள்ளது.
அந்த வாதம் ஓரளவு உண்மையானதுதான். ஆனாலும், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் படையினருடன் முரண்பட்டுக்கொள்வதென்பதும், கிழக்கு முதலமைச்சர் முரண்பட்டுக் கொண்டதும் வித்தியாசமான தருணங்களாகும்.
ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடும் அரசியல்வாதிகளை படையினர் தடுக்கும்போது, அப்போது படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவர்களுடன் வார்த்தைகளால் மோதுவதும் பெரிதான விடயங்களாகத் தெரிவதில்லை.
இன்னொருபுறம், மற்றவர்கள், படையினரை ஏற்கெனவே திட்டியிருக்கின்றார்கள் என்பதற்காக, கிழக்கு முதலமைச்சரும் அவ்வாறு செயற்பட முடியாது.
படையினரைத் திட்டியவர்கள் மீது, ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதற்காக, கிழக்கு முதலமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாதிடுவதும் நியாயமல்ல.
சம்பூரில் கடற்படை அதிகாரியை முதலமைச்சர் திட்டிய தருணத்தில், அங்கிருந்த கடற்படை வீரர்கள் அனைவரும், முதலமைச்சரைச் சுற்றிவளைத்து பதில் நடவடிக்கையொன்றில் இறங்கியிருந்தால், முதலமைச்சரின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை, முதலமைச்சரும் அவரின் ஆட்களும் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படி நாம் எழுதுவது அதீத கற்பனையல்ல.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரியொருவரோடு முரண்பட்டுக்கொள்ள முயற்சித்த, அப்போதைய அமைச்சர் மேர்வின் சில்வாவை, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து போட்டுத்தாக்கியதோடு, தொலைக்காட்சியிலும் அதனை நேரடியாக ஒளிபரப்பிய வரலாறுகள் நமக்கு முன்னே விரிந்து கிடக்கின்றன.
வரலாறுகளில் நிறையவே படிப்பினைகள் இருக்கின்றன.
Average Rating