சேலம் அருகே அரசு அதிகாரி காருடன் எரித்துக்கொலை – கைதான வாலிபர் வாக்குமூலம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில் சர்வேயராக பணியாற்றிவர் குவளை செழியன் (வயது 42). கடந்த 26–ந் தேதி ஓசூர் திரிவேணி கார்டனில் உள்ள வீட்டில் இருந்து பணிக்கு சென்ற இவர் திடீரென மாயமானார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே வேப்படிபட்டி என்ற இடத்தில் சாலையோரம் காருக்குள் உடல் துண்டு துண்டான நிலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் குவளை செழியன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தீவட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பூந்தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சேலத்தை அடுத்த வெள்ளாடிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (36) என்பவர் அங்கு நின்ற பொதுமக்களிடம் சிக்கினார். அவரை பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஓசூர் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், பெரியசாமி மற்றும் தீவட்டிபேட்டி போலீசார் சக்திவேலிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:–
ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நிலத்தரகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான நிலப் பட்டா வாங்கி கொடுப்பது தொடர்பாக அடிக்கடி சென்று வந்தேன். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குவளை செழியனும் அங்கு வந்ததால் எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதை அறிந்தேன். மேலும் அடிக்கடி அவர் எனக்கு செலவுக்கு பணம் தருவார். இதனால் அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டேன்.
இதற்காக கடந்த 26–ந் தேதி நானும், எனது நண்பன் கலைவாணனும் ஓசூருக்கு சென்றோம். பின்னர் குவளை செழியனுக்கு போன் செய்து ஒரு இடத்திற்கு வரவழைத்தோம். அங்கு வைத்து 3 பேரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
மது போதையில் இருந்த அவரை நாங்கள் அங்கிருந்து காரில் கடத்தி சென்றோம். பின்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிக்கு கடத்தி சென்று ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் உண்ணை உயிருடன் விடுவோம் என்று மிரட்டினோம்.
உடனே அவர் மனைவி ரேவதிக்கு போன் செய்து பணத்தை தயாராக எடுத்து வைக்கும் படி கூறினார். இதையடுத்து தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் நான் காரை ஓட்டி சென்ற போது போலீசார் அங்குள்ள சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் குவளை செழியனை கடத்தியது போலீசுக்கு தெரிந்திருக்குமோ ? என்று நினைத்து சோதனை சாவடிகள் இல்லாத சாலை வழியாக காரை ஓட்டி சென்றோம். அப்போது போலீசாரிடம் சிக்கி விடுவோமோ? என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது.
மேலும் குவளை செழியனை உயிருடன் விட்டால் போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்பதால் எங்களுக்கு மேலும் பயம் அதிகரித்தது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். பின்னர் அரிவாளால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தோம்.
குவளை செழியன் பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி ஓமலூர் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு கொண்டு சென்று எரிக்க முடிவு செய்து காரில் கொண்டு சென்றோம்.
அப்போது கார் சாலையார சகதியில் சிக்கி கொண்டதால் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேலும் அச்சத்தில் தவித்த நாங்கள் செய்வதறியாது திகைத்தோம். பின்னர் கார் அடையாளம் தெரியாமல் இருக்க காரின் நம்பர் பிளேட்டை கழற்றி விட்டு பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைத்தோம்.
அப்போது என் மீதும் பெட்ரொல் சிந்தியதால் காரில் எரிந்த தீ என் மீதும் பிடித்தது. இதற்கிடையே அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வருவதை பார்த்த நான் ஓட முடியாமல் அருகில் உள்ள பூந்தோட்டத்தில் பதுங்கி இருந்தேன். ஆனால் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தீக்காயம் அடைந்த சக்திவேல் தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தலைமறைவான கலைவாணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating